ஒரு காலத்தில் ஸ்க்வாஷ் விளையாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ஜெ’-வில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒரு கான் மாற்றி இன்னொரு கான் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள். இதில் சில கான்கள் இப்போது பாலிவுட்டில் ஹீரோக்களாக இருக்கிற கிழ கான்கள் எப்போதும் இருந்ததைவிட அழகாகவே இருந்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த வயித்தெரிச்சலிலேயே ஸ்க்வாஷ் விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்கள் யார் தோற்கிறார்கள் என்று தொடர்ந்து கவனிப்பதில் ஆர்வம் போனது. இந்தியாவிலிருந்துகூட சிலர் வந்தார்கள் என்று நினைக்கிறேன், எப்போதும் இங்கிலாந்து இந்த விளையாட்டில் ஸ்ட்ராங்குதான்- இரண்டு மூன்று கதைகளிலும்கூட ஸ்க்வாஷ் விளையாடும் ஹீரோக்களை சந்தித்திருக்கிறேன். ஆங்கிலப்படங்களில் கூட பார்த்ததாக நினைவு: வியர்க்க விறுவிறுக்க சட்டை போடாமல் படு கவர்ச்சியாக ஆடுவார்கள் என்று நினைக்கிறேன்.

வேகமான ஆட்டம். சுவற்றில் பட்டுத் தெறிக்கும் பந்தை ஆட்டக்காரர்கள் இருவரும் சுவற்றில் திரும்பத் திரும்ப ஓங்கி அடிப்பார்கள். சில சமயம் பந்து சுவற்றில் பட்டு உட்கார்ந்து கொள்ளும்- அது படு தமாஷான காட்சி. ஸ்க்வாஷ் பந்தில் இன்னொரு தமாஷ் என்னவென்றால் அதை ஒரு நூறு தடவையாவது பலமாக அடித்தால்தான் அது ஒழுங்காக பௌன்ஸ் ஆகுமாம். அடிக்க அடிக்க அது வேகம் பிடிக்கும்- மெல்ல அடித்தால் அதற்குத் தகுந்த மாதிரி பந்து திரும்பி வருவதும் தாமதமாகும். கண்ணாடி கூண்டுக்குள் நடக்கும் இந்த ஆட்டம் பார்க்க வித்தியாசமாக இருக்கும்- நல்ல ஸ்டாமினா வேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும். ரிப்லக்ஸ் பிரமாதமாக இருக்க வேண்டும்- பொதுவாக இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் பந்து உங்களை நோக்கித் திரும்பி வரும். ஸ்க்வாஷ் ஆடுகளத்தின் நீளம் முப்பத்து இரண்டு அடிதான் என்பதைப் பார்க்கும்போது எப்படி இந்த ஆட்டத்தில் நீண்ட ராலிகள் இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

—-

எகிப்தில் அண்மையில் புரட்சி மாதிரி ஏதோ ஒன்று நடந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னாள் ஏர் சீப் மார்ஷல் இந்நாள் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக எகிப்து மக்கள் திடீரென்று ஒரு நாள் பொங்கி எழுந்து ஆட்சியை அவரிடமிருந்து பிடுங்க யத்தனித்தார்கள். ராணுவத்தை வைத்து இந்த புரட்சியை முபாரக் தன் இரும்புக் கரத்தால் அடக்குவார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சாமர்த்தியமாக அந்த இரும்புக் கரம் வெல்வெட் கையுறைகளுக்குள் ஒளிந்து கொண்டு முபாரக்குக்கு போக்கு காட்டியதில் மக்கள் படு குஷியாகி விட்டார்கள். முபாரக் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் சொல்லி வைத்த மாதிரி மக்களுக்கு ஆதரவாக ராணுவம் தன் வெல்வெட் கரங்களை நீட்டியது. மக்களும் சமர்த்தாக “இனி எல்லாம் நலமே..” என்று வீட்டுக்குப் போய் விட்டார்கள். எகிப்தில் மக்களாட்சி மலர்ந்தது என்று பேசிக் கொள்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாகூட வாழ்த்தோ என்னவோ தெரிவித்ததாக நினைவு.

எதற்கு சொல்கிறேனென்றால், நான் மட்டும் கான்களைப் பார்த்து வெறுத்துப் போயிருக்காவிட்டால், ஸ்போர்ட்ஸ்டார் சந்தாவை நீட்டித்திருந்தால் எனக்கு இப்போது எகிப்து ஸ்க்வாஷ் ஆட்டத்தில் இப்போது படு கெத்தான டீம் என்பது தெரிந்திருக்கும். நானும் இதோ இங்கிருக்கிற எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் போய் நேற்று எகிப்து உலக ஸ்க்வாஷ் சாம்பியனான கதையை நேரில் பார்த்த கதையை உங்களுக்கு சொல்லியிருப்பேன். என்ன செய்வது, இந்த வரலாற்று நிகழ்வு யாருக்கும் தெரியாமல் போக வேண்டும் என்று விதித்திருக்கிறது போல.

ஸ்க்வாஷ் விளையாட்டின் மிக்ஸட் டபிள்ஸ் சாம்பியன்ஷிப்பின் உலக கோப்பையை இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்ற எகிப்து அணியினருக்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துகள். இது எகிப்து மக்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை- மாபெரும் மாற்றத்தை நோக்கி அடி வைத்திருக்கும் எகிப்தியர்களுக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துகள்.

நேற்றைய இறுதி ஆட்டத்தில் மோதிய இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆடிய ஆட்டம் ஒன்றின் காணொளி இங்கே-

சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு பாட்டைப் பின்னணி இசையாகப் போட்டிருக்கிறார்கள். அதிக பேர் விளையாடாத ஆட்டம் என்றால் இதுதான் பிரச்சினை- ஆடியவர்களே வருஷக்கணக்கில் ஆடிக் கொண்டிருப்பார்கள், யாரும் எதுவும் செய்வார்கள் சொல்வார்கள். கேட்க ஆள் இருக்காது.

– நாட்பாஸ்

நேற்றும் இன்றும் நல்ல ஆட்டங்கள் சிலவற்றை காண முடிந்தது. இதை நான் பதிக்கும் நேரத்தில் அநேகமாக ஃபெடரருக்கு சங்கு ஊதப்பட்டிருக்கும்.

இன்று காலை பார்த்த இரண்டு செகண்ட் சர்வுகள் மனதில் தங்கின. அந்த இரண்டுக்கு முன்னால் வேறு இரண்டு மஹானுபாவர்களைப் பற்றி இரண்டு வரிகள். ஆஸ்திரேலியன் ஓபன் தொடங்கும் முன்னரே எழுத ஒப்புக் கொண்டு என் சோம்பேறித்தனத்துக்கு தீனி போட்ட இருவரையும் தீவிரமாய் தேடிக் கொண்டிருக்கிறேன். துப்பு கொடுத்தால் இதற்கு மேலும் என் மொக்கை தொடராமல் இருக்கக் கூடும் (உத்தரவாதம் இல்லை).

லியாண்டரும் பூபதியும் சேர்ந்து அள்ளாத ஒரே கிராண்ட் ஸ்லாம் ஆஸி ஓபன்தான். இருவரும் தேர்ந்த கைகள் என்ற போதும் பழைய வேகம் அப்படியே. பூபதியின் சர்வீஸ் மின்னல் என்றால் லியாண்டரின் நெட்-பிளே சூராவளி.

பல வருடங்களுக்குப் பின் சேர்ந்து ஆடும் முதல் கிராண்ட் ஸ்லாம் என்ற போதும் விட்ட குறை தொட்ட குறை. நேற்றும் சரி இன்றும் சரி, நம்மவர்கள் கை ஓங்கியே இருந்தது. இன்று காலை இரண்டாம் சீட் ஜோடியை எதிர்த்து ஆடிய போது, ஆட்டம் பரபரப்பாக இருந்தாலும், நம்மவர்கள் ஆட்டத்தில் reassurance தெரிந்தது. முதல் செட்-ல் வெல்லும் தருவாயில் டபிள் ஃபால்டை போட்டு டை-பிரேக்குக்குச் சென்றாலும், கடைசி நேரத்தில் எதிராளியை விட கொஞ்ஞ்ஞ்ஞ்சமே கொஞ்சம் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். எப்போது நிச்சயம் தெவையோ அப்போது அவர்களின் ஆட்டத்தின் தரம் தானக உயர்ந்துவிடுவதைக் காண முடிந்தது.

காலை வேளை ஆபீஸ் கிளம்பும் களேபரத்தில் 2-ம் செட்டை நான் பார்க்காததால், லியாண்டர் – பூபதி ஜோடி மூன்றாம் செட்டுக்குள் செலுத்தப்பட்டிருந்தனர். சர்வீஸ் பிரேக்குக்குப் பின், பூபதி மேட்சை ஜெயிக்க சர்வ் செய்த போது நெச்டரும், மிர்ன்யியும் பிரமாதமாக ஆடி முன்னிலை பெற்றனர். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பிரேக் பாயிண்ட். 3-40.

முதல் செர்வ் ஃபால்டாக, இரண்டாம் செர்வ் மெதுவாக வரும் என்று நம்பி சில அடிகள் முன் வைத்தார் நெஸ்டர். பூபதியோ, யாருமே எதிர்பாரா வண்ணம் முதல் சர்வை விட வேகமாக, 191-kmph வேகத்தில் கட்டத்தின் நுனியில் சர்வை செலுத்தி, ஏஸாக்கி ஸ்கோரை சமன் செய்தார்.

முக்கியமான தருணம். கரணம் தப்பினால் மரணம். விழுந்தது மரண அடி. எதிரிக்கு. அதன் பின் சுலபமாக வென்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றனர்.

அடுத்த ஆட்டம் நடப்பு சாம்பியன் ப்ரையன் சகோதரர்களுடன்.

இன்னொரு ஆட்டத்தில் லி-னா தோல்வியின் நுனியில் போராடிக் கொண்டிருந்தார். எதிர் கோர்டில் உலக நம்பர் 1 வோஸ்நியாகி. நான் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து, லி-யின் கைதான் ஓங்கு இருந்தது. அவர் தோற்ற புள்ளிகள் பெரும்பாலும் அவர் செய்த தவறால்தான்.

5-4 முன்னணியின் இருந்த வோஸ்நியாகிக்கு மேட்ச் பாயிண்ட். ஒரே புள்ளி எடுத்திருந்தால் ஆட்டம் ஓவர். வோஸ்நியாகி போட்ட சர்வீஸில் டென்ஷன் அப்பட்டம். லி சாதுர்யமாக ஆடி ஆட்டத்தை நீட்டித்தார். அதன் பின் 6-5 என்று முன்னிலை பெற்றிருந்த நிலையில் மீண்டும் வொஸ்நியாகியின் சர்வீஸ் அவரை கைவிட்டது.

ஜெயித்தே ஆக வேண்டும் என்ற புள்ளியிக் இரண்டாவது சர்வ். அதுவும் ஃபால்டாகிப் போய்விட, இனி சீன வீராங்கனையின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்பது திண்ணமானது.

கிராண்ட் ஸ்லாம் ஃபனலில் இடம் பெறும் முதல் சீன வீராங்கனை இவர்தான்.

ஆசியாவின் ஸ்டார் என்பது போல மாயையை உருவாக்கி விளம்பர நடிகையாய் வலம் வீராங்கனைகளுக்கிடையில் உண்மையன ஸ்டார் லீ-நாதான். நாளை மறுநாள் இவர் பட்டம் வென்றால் நான் கொஞ்சம் கூட ஆச்சர்யப்பட மாட்டேன்.

தலைப்பைப் பார்த்து இந்தியாவில் நடக்கும் செஸ் போட்டி என்று நினைத்துவிட வேண்டாம்.

காலம் காலமாய் நடந்து வரும் கோரஸ் செஸ் போட்டிதான் டாடாவின் சமீப கால acquisition-க்குப் பின் பெயர் மாறியுள்ளது.

இந்த ஆண்டு டொபலோவ் இல்லை என்ற போதிலும் வலுவான போட்டி. நாளைய சாம்பியன் கார்ல்சன், நாளை மறுநாளைய சாம்பியன் அனிஷ் கிரி (இவர் இந்தியர் அல்ல. பாதி நேபாளி, இப்போதைக்கு டச்சுக்காரர்), போட்டி தொடங்கு நான்கு ரவுண்டு முடிந்து விட்டது.

ஆனந்த் நான்கில் இரண்டு வென்று, 3 புள்ளிகளுடன் (நாகாமுராவும்) முன்னணியில் உள்ளார்.

ஆட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் பல தளங்களில் நிறையவே கிடைக்கின்றன என்பதாலும், செய்தி பழசுதான் என்பதாலும், நான் சோம்பேறி என்பதாலும் விவரங்களைத் தவிர்க்கிறேன்.

ஆனந்தின் நான்காவது ரவுண்ட் வெற்றி வெகு அற்புதம்.

கிராம்னிக்குடன் ஆடிய மேட்சுக்குத் தயாரித்த பண்டமாம். இப்போதுதான் வெளியே வந்துள்ளது. ஆனந்த் டோர்ணமெண்டை வென்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதைப் போன்ற பதுக்கல்களை வெளியிடுவது அவசியம்தான். இந்தத் தொடரை வென்றால் ஆனந்த் மீண்டும் நம்பர் 1 ஆக முடியும். (இப்போதே லைவ் ரேட்டிங்கில் ஆகிவிட்டார்).

அந்த ஆட்டத்தைப் பற்றி ஆனந்தே சொல்வதைப் பார்த்து மகிழுங்கள்:

ஆடிய ஆட்டத்தை இவ்வளவு வேகமாக நினைவுக்குக் கொண்டு வர நம்மால் முடியுமா?

சும்மாவா வருவாள் சுகுமாரி?

இங்கு இணையத்தில் இந்தப் பதிவுகளைப் படிப்பவர்கள் யாரும் இன்றோ நேற்றோ நடந்த டென்னிஸ் போட்டியில் யார் வென்றார்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கு வரவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டுதான் நான் இங்கு பதிவுகளை எழுதுகிறேன். ஒரு குறிப்பிட்ட டென்னிஸ் ஆட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரிப்பைவிட, அந்த ஆட்டத்தைப் பார்த்தபின் என்ன சொல்லத் தோன்றுகிறது என்பதையே எழுத நினைக்கிறேன்.

எதற்கு இப்படி முழ நீளத்துக்குப் பீடிகை போடுகிறேன் என்றால், இப்போது நான் நேற்று மாலை பார்த்த ஒரு ஆட்டத்தைக் குறித்து அப்போது எடுத்து வைத்த குறிப்புகளைக் கொண்டு இந்தப் பதிவை எழுதப் போகிறேன்.

அந்த ஆட்டம் ஹெவிட்டும் நால்பண்டியனும் ஆடிய அற்புதமான ஆட்டம்- ஆட்ட முடிவில் நால்பண்டியன் 3-6 6-4 3-6 7-6 (7-1) 9-7 என்று வென்றார். பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆடுகிற ஹெவிட்டுக்கு இது மிகுந்த துக்கத்தைத் தந்திருக்கக் கூடிய தோல்வி. அவர் ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டம் இது.

டென்னிஸ் விளையாட்டு தொலைக்காட்சியில் பார்க்கும்போது எளிதாக இருக்கிறது. பெடரர் அடிக்கிற வாலிக்கும் தோனி அடிக்கிற ஸ்ட்ரைட் ட்ரைவுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு தெரிவதில்லை. உடலின் இயக்கம், பாலன்ஸ் என்று பார்த்தால் எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான்.

ஆனால் டென்னிஸ் களத்தின் அகலம் சரியாக எழுபத்து எட்டு அடிகள். கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆடும் வீரர்கள் போடும் சர்வீஸ் சர்வ சாதாரணமாக மணிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பட்டுத் தெறிக்கிறது. இந்தப் எரிபந்துகள் எழுபத்து எட்டு அடி தாண்டி உங்கள் மட்டைக்கு வரும் நேரத்தில் உங்களுக்கு அதைத் திருப்பி அடிக்கக் கிடைக்கும் அவகாசம் இரு முறை கண் சிமிட்டும் காலப் பொழுதே! சர்வீஸ் வேகத்தை விட ராலிகளில் பந்து பறக்கும் வேகம் சற்றே குறைவு- மணிக்கு எண்பதில் இருந்து நூற்று எண்பது கிலோ மீட்டர் வேகம்- இந்தப் பந்துகளைத் திருப்பி அடிக்க உங்களுக்கு இருக்கும் நேரம் ஒன்று முதல் மூன்றரை நொடி அளவே.

வரும் பந்தை டவுன் தி லைனில் அடிக்கலாமா, கிராஸ் கோர்டில் திருப்பலாமா என்று முடிவெடுக்க காலேஅரைக்கால் வினாடிதான் அவகாசம். கல்பனை ஸ்வரத்தில் இதுக்குப் பின் இதுதான் வரும் என்று ஊகித்து வயலின்காரர் வாசிப்பார். அப்படி வாசிக்கச் செய்வது அவர் உள்ளுணர்வு. 99% அது சரியாகவே அமையும். டென்னிஸில் இந்த Anticipation-தான் தேர்ந்த வீரருக்கும் சுமாரான வீரருக்கும் வித்தியாசத்தைக் காட்டும்.

டென்னிஸ் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பது குறித்து ஓரளவு கவனம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறேன். வேகத்தைவிட இன்னும் முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதை சொல்லத் தேவை இல்லை.

“You have no idea of speed when you watch a game on Television”, என்று ஹர்ஷா போக்ளே அடிக்கடிச் சொல்வார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் நான்காவது செட்டில் முதல் இரண்டு கேம்களிலும் ஹெவிட்டின் கை ஓங்கி இருந்தது. இரண்டாவது கேமில் நால்பண்டியன் பிரேக் ஆனார். ரொம்பவே தடுமாறினாலும் ஆறாவது கேமில் நால்பண்டியன் ஹெவிட்டை ப்ரேக் செய்தார். ஐந்தாவது கேமில் நால்பண்டியன் அடித்த இரண்டு பந்துகள் எல்லைக் கோட்டைத் தாண்டி ஓரிரு அங்குலங்கள் தாண்டி வெளியே விழுந்தன. இவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரியிருந்தார் நால்பண்டியன். இரண்டும் ஹெவிட்டுக்கே சாதகமாக இருந்தன. ஆனாலும் மனம் தளராமல் அடுத்த கேமில் ஹெவிட்டை அவர் ப்ரேக் செய்தார். அதன் பின் அசாத்திய ஷாட்கள் சிலவற்றை ஆடிய நால்பண்டியன் எட்டாவது கேமில் ஹெவிட்டை மறுபடியும் ப்ரேக் செய்தார். அதற்கு அடுத்த ஆட்டத்தில் ஹெவிட் நல்பண்டியனை ப்ரேக் செய்து டை பிரேக்கர் வரை காலத்தைத் தன் கையில் வைத்திருந்தார். டை பிரேக்கரில் நல்பண்டியன் ஏழு ஒன்று என்று ஜெயித்தார்.

ஹெவிட்டின் தோல்விக்கு ஒரே ஒரு காரணம்தான் – அவருக்கு நல்பண்டியனை பிரேக் செய்ய முப்பது வாய்ப்புகள் கிடைத்தன- அவற்றில் ஏழே எழு முறைதான் அவரால் தன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

அப்படியானால் ஹெவிட்டின் கை ஆட்டம் முழுதும் ஓங்கியிருந்தது, முக்கியமான கட்டங்களில் நல்பண்டியன் தன் ஆட்டத்தை உயர்த்தி வெற்றி பெற்றார் என்றுதானே பொருள் வருகிறது? உண்மைதான். இந்த லெவலில் ஆடுகிறவர்கள் ஏறத்தாழ ஒரே அளவு திறமை படைத்தவர்கள். முக்கியமான கணங்களில் எப்படி ஆடுகிறார்கள், என்ற மன வலு மற்றும் உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களே முடிவைத் தீர்மானிக்கின்றன.

—–

அபூர்வ ராகம் என்ற கதையில், லா.ச.ரா எழுதுகிறார், “சற்றே காற்றடித்தாலும் சப்திக்கும் முறுக்கேறிய தந்தி போல் அவள் ஒரு புது கலகலப்பாய் இருந்தாள். அவள் சிரிப்பில் கண்ணாடி உடையும் சத்தம் போல் ஒரு சிறு அலறல் ஒலித்தது,” என்று.

இது போன்ற சம அளவில் திறமை படைத்த உயர்நிலை ஆட்டக்காரர்கள் ஆடுவதை லாசராவின் வரிகள் வர்ணிக்கின்றன என்றுகூட சொல்லலாம். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் உள்ள தொலைவு ஓரிரு அங்குலங்கள், வேறுபாடு பந்து ராக்கெட்டில் பட்டுத் தெறிக்கும் கணப்போழுதின் ஓரிரு டிகிரி கோண திருப்பம்- அவ்வளவுதான். இதை கத்தி முனையில் உயர்வேகத்தில் பாடும் பாடல் என்று சொல்லலாம். எவ்வளவு நளினமான ஷாட்டானாலும் சரி, அதில் ஒரு சிறு அலறல் இருக்கிறது: இருவரையும் இணைத்து இறுக்கிக் கட்டிய திறன் உச்சமடைந்து பொறி தட்டும் ஒலி அது.

நான் நினைத்துக் கொள்கிறேன்: பந்து ராக்கெட்டில் படும் சத்தம், பந்தை எட்டிப் பிடிக்க விரைந்தோடும் பாதங்களின் சத்தம், இவற்றோடு கூட பந்தின் திசைகேற்பவும் சுழற்சிக்கேற்பவும் ஒலியின் பிட்ச்சை மாற்றிக் கேட்க முடிந்தால், நாம் தொலைக்காட்சியை இருட்டடித்துவிட்டு ஒரு சிம்போனியைக் கேட்கிற மாதிரி கண்ணை மூடி டென்னிஸ் ஆட்டத்தை ரசிக்கலாம் என்று.

இதில் யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என்பது தவிர்க்க முடியாத ஒரு இழப்பு போன்ற ஒன்றே- நிகழ்தகவு சாத்தியங்களால் விதிக்கப்பட்டது என்பதைத் தவிர இதில் பொருளேதும் இல்லை. யாரோ ஒருவர் ஜெயித்தாக வேண்டும்- அதற்காக யாரும் தோற்றதாக நினைப்பதற்கில்லை.

இன்றைக்குக் கூட பாருங்கள், பெடரர் கைல்ஸ் சைமனை 6-2, 6-3, 4-6, 4-6, 6-3 என்று ஜெயித்திருக்கிறார். இதில் பெடரர் ஜெயித்தார், சைமன் தோற்றார் என்பது இந்த விளையாட்டின் நியதிகளால் நிர்பந்தப்படுத்தப்பட்ட விதி. அவ்வளவுதான்.

டென்னிஸ் விளையாட்டு ஒரு இனிய சங்கீதம் மாதிரி- தொலைக்காட்சியை ஊமையாக்கி வைத்துப் பாருங்கள், புரியும். கிரிக்கெட் கண்களுக்கு விருந்து என்றால், டென்னிஸ் செவிக்கினிய கீதம். இங்கு களத்தில் நடப்பது மோதல் அல்ல, ஜுகல்பந்தி.

லாசரா அதே கதையில் வேறு இடத்தில் “அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல் கட்டத்தில் ராகம் தவறில் அதைவிட அவமானம் உண்டோ?” என்று கேட்டு விட்டு பதில் சொல்வார், “ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமா? ராகம் தன் இயல்பு மாறாதவரை எப்படியிருந்தாலும் சுஸ்வரந்தான்,” என்று.

டென்னிஸில் இந்த ஹெவிட்- நல்பண்டியன், பெடரர் சைமன் ஆட்டங்கள் அந்த மாதிரியான அபூர்வ ராகங்கள்.

-நாட்பாஸ்

மரியா ஷரபோவா- ஆருயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ!

“மணி வாய் என்ன தனித் தோன்றி
கொலை மேற்கொண்டு ஆருயிர் குடிக்கும்
கூற்றம் கொல்லோ – கொடிப் பவளம்?”

என்று பாடினான் கவிச்சக்ரவர்த்தி கம்பன்- ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணின் சிவந்த உதடுகளை நினைவுக்குக் கொண்டு வரும் பவளத்தைக் குறித்தல்ல, மரியா ஷரபோவாவுக்காகவே எழுதியது போலிருக்கின்றன இந்த வரிகள்.

அதை எதிரொலிக்கும் வகையில்தானோ என்னவோ ஐஸ்வர்யா ராயைப் பார்த்து

“உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கையிலே..”

என்று பாடினார் கவிப் பேரரசு வைரமுத்து.

என்னடா டென்னிஸ் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஜன்னி வந்தவன் மாதிரி உதடுகளையும் பவளத்தையும் பற்றி உளறிக் கொண்டிருக்கிறான் இவன் என்று எண்ண வேண்டாம் நண்பர்களே, இது ஷரபோவா எபெக்ட்.

உள்ளதை உள்ளபடியே சொல்வதானால் இவ்வாண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் முதல் சுற்றின் முதல் ஆட்டத்தின் முதல் கேமின் துவக்கத்தைப் பார்த்ததும் எனக்கு உண்மையிலேயே உசுரே போய் விடுகிற மாதிரிதான் இருந்தது- சமையல் வேலையை எல்லாம் முடித்து விட்டு அரக்கப்பரக்க சட்டையும் ஸ்கர்ட்டும் மாட்டிக் கொண்டு வந்த மாதிரி இருந்த தாய்லாந்து வீரர் தாமரைன் தானசுகம் (Tamarine Tanasugarn- (சின்னதாக தொப்பைகூட இருந்தது அவருக்கு)) ஷரபோவாவின் சர்வீசை ப்ரேக் செய்தார்- ஷரபோவா ஒரு பாயிண்ட்கூட எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஆரம்பமே அபசகுனமாக இருக்கிறதே என்று நான் துணுக்குற்றது உண்மைதான், சென்ற ஆண்டு முதல் சுற்றிலேயே ஷரபாவோ வெளியேற நேர்ந்தது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நல்ல வேளை இந்த ஆண்டு அப்படி ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடாதபடிக்கு ஷரபோவா ஆயிரம் பூனைகளின் வதை அலறல்களோடு பார்முக்கு வந்தார்- அடுத்து வந்த அத்தனை கேம்களையும் எடுத்து 6-1 என்று ஜெயித்தார் அவர். இரண்டாவது செட்டை 6-3 என்று கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைகிறார் மரியா ஷரபோவா.

பேசும்படி எதுவும் இல்லாத இந்த ஆட்டத்தில் ஷரபோவா பத்து டபுள் பால்ட்களும் இருபத்து இரண்டு தூண்டப்படா பிழைகள் (unforced errors-க்கு இந்தப் பதம் பொருத்தமா?) செய்ததும் நமக்குக் கவலை கொடுக்கக்கூடிய விஷயங்கள்.

எது எப்படியோ, ஒரு சிறிய ஜெர்க் கொடுத்து ஆரம்பித்திருக்கிற இந்த ஆண்டின் போட்டிகளில் நமக்கு வேண்டியவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திகிறேன்.

image credit:http://www.mobileapples.com

– நாட்பாஸ்

கிரிக்கெட் தவிர வேறேதும் விளையாட்டுகள் பக்கம் காரண காரியங்கள் இருந்தாலேயொழிய தலைவைத்துப் படுக்காதவன் ’கிரிக்கெட் தவிர’வில் எழுத வந்துள்ளேன்.

“பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்” என்று ஏதேனும் கிரிக்கெட் ஊழல் நேரத்திலோ அல்லது வேறு ஆட்டம் ஏதோ ஒன்றில் எங்கேனும் யாரேனும் சாய்னா போல தப்பித் தவறி இந்தியாவில் எட்டிப் பார்க்கும் வேளையிலோ “கிரிக்கெட் என்னங்க பதினொரு முட்டாள்கள் கேம், டென்னிஸ் தெரியுமா. ஒரு தனி மனுஷன் மூணரை மணிநேரம் போராடினாத்தான் ஜெயிக்க முடியும். கால்பந்து? ஒரு இடத்துல ஒருத்தன் நிக்கற கதையில்ல, ஒண்ணரை மணி நேரமும் ஓடிகிட்டே இருக்கணும்? நம்மாளால முடியுமா? அதுதான் நம்மாளு கிரிக்கெட் பக்கம் ஒதுங்கிட்டான்” எனப் பேசிக்கொண்டே “கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் வாழ்க” என்று முழங்கி அவர் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் கோடானுகோடியில் நானும் ஒருவன்.

எனினும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் சமயங்களில், மொழி புரியாமலேயே ஹிந்தி படம் பார்ப்பதுபோல், டென்னிஸின் நுணுக்கங்கள் தெரியாமலேயே காலிறுதிக்குப் பின் அத்தனை ஆட்டங்களையும் பார்ப்பவன் நான். காரணம் என்னுடைய பதின்வயதின் தொடக்கத்தில் ஸ்டெப்பி, மோனிகா போன்றவர்கள் எனக்கு அழகிகளாகத் தெரிந்ததும், பதின்வயதின் உச்சத்தில் அன்னா கோர்னிகோவா போன்றவர்கள் ஆடிக் கொண்டிருந்ததும்தான்.

அப்படி ஆரம்பித்த கதை சாம்ப்ராசின் ஏஸ்’களால் ஈர்க்கப்பட்டும் அகாசியின் சர்விஸ் ரிடர்ன்களை ரசிக்கத் தொடங்கியும் செய்தபோது டென்னிஸ் ”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கத்தான்”, செய்தது. பெடரர்களும், நாடால்களும் உள்ளே புகுந்தும் கூட சாம்ப்ராஸ் சர்விஸ் எப்படி இருக்கும் தெரியுமா? ஆண்டாள் காண்டி சாம்ப்ராஸைப் பார்த்திருந்தால், “வெள்ளி மலை சாம்பிராஸுனு” தொடங்கி, “தாழாதே ராக்கெட் உதிர்த்த சர மழை போல்”-னு பாசுரம் பாடியிருப்பாங்க. அகாசியோட ஆக்ரோஷம் பாத்திருக்கியா? ”சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து:-னு ஆண்டாள் இதைப் பற்றித்தான் பாடினாள் என்றொரு பதவுரை கூட சமீபத்தில் பதிப்பித்துள்ளனராம். என பழைய பல்லவி பேசியபடி உண்மையான டென்னிஸ் ரசிகர்களிடம் கொஞ்சம் நிறையவே குட்டுகள் வாங்கி ஆட்டத்தின் நுணுக்கங்களை சுமாரே சுமாராக அப்படியே கற்றுக் கொண்டாயிற்று.

முப்பதைக் கடந்தபின் கற்ற வித்தையை வைத்து ஆடுகளம் இறங்கி ஆடவா முடியும்? நமக்குத் தெரிந்த விஷயம் ஒன்று; அது இங்கிதமே பாராமல் அங்கிங்கெனாதபடி எங்கும் மொக்கை போடுவது. நமக்கென இப்போது கிடைத்த ஆடுகளமாம் “கிரிக்கெட் தவிர”வில் போடலாம் மொக்கை என இங்கேயும் புகுந்துள்ளோம்.

பதினான்கு நாள் திருவிழாவாக  ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்பர்னில் இதோ இன்று துவங்குகிறது. அவங்க அங்கே ஆடட்டும். நாம் இங்கே தினமும் ஆட்டங்களைக் கலந்தாய்வோம்.

பிரெஞ்சு, விம்பிள்டன் , அமெரிக்கன் ஓபன் என மூன்றையும் தொடர்ச்சியாக வென்றுவிட்டு ஆஸ்திரேலியன் ஒபனையும் வெல்ல நாடால் உள்புகுகிறார் என்பது நம்மில் பலர் அறிந்த சேதி. பைனல் ‘ல யாருங்க வேணும்? பெடரரா? 

ஆஸ்திரேலியன் ஓபெனில் முதல் முறையாக பங்கேற்கப் போகும் நம்மாளு சொம்தேவுக்கு முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ஒருவருடன் மோதல். பார்ப்போம் இந்த தபா தலை என்ன பண்ணுதுன்னு! லியாண்டர் மகேஷ் ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபெனில் இணைகிறார்கள். எதிர்பார்ப்போம்.

ஊப்ஸ்! சானியாவை இந்த இந்தியா மறக்கலாம். நாம் மறக்கலாமா? அம்மையாரும் போராடி உள்ளே நுழைந்திருக்கிறார். அவருக்கும் “எதிர்பார்ப்போம்” என்று ஒரு கார்டு போட்டு வைப்போம். சானிய முதல் சுற்றில் சந்திக்கவிருப்பது யாருமில்லீங்க ஜஸ்ட் நம்ம முன்னாள் நம்பர் ஒன் ஜஸ்டின் ஹெனினை.

லலிதாராம், நட்பாஸ் போன்ற ஜாம்பவான் விமர்சகர்களுடன் இந்தத் தக்குனூன்டு பாண்டியம் கிரியும் இணைகிறேன். இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் கவரேஜின் திருஷ்டியாக என்னை லலிதாராம் இங்கே இலவச இணைப்பாக இணைத்திருக்கிறார்.

இட்டபணியை இனிதே முடிப்பேன் என்ற வாக்குறுதியுடன்,
உங்கள் அன்பன்,
கிரி

anand1

உலக சாம்பியன் ஆனந்துக்கு இன்று 41 வயதாகிறது. இன்று காலை விழித்த போது, லைவ் ரேட்டிங்கிலும் நம்பர் 1-ஆக ஆனந்த் பெயர் இருந்திருக்கும். போன வருடம் அவர் பிறந்த நாளன்று சொல்வனத்தில் வெளியான என் கட்டுரையின் மீள் பதிவு.

விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்று (11, டிசம்பர்) 40 வயது! மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு 25-ஐ தாண்டி வயசாகி பல வருடங்கள் ஓடிவிட்டன என்றால் நம்பக் கஷ்டமாயிருப்பது போல, ஆனந்துக்கு வயசாகி விட்டதென்றாலும் நம்புவது கடினம். இதற்கு அர்த்தம், அவர்கள் உருவத்தில் இளைஞர்களாய் தெரிகிறார்கள் என்பதல்ல. என் சிறு வயது முதலே prodigy-ஆக இவர்களைப் பார்த்துப் பழகிவிட்டு,  திடீர் என்று இவர்களுக்கும் வயதாகிவிட்டது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கிறது. நண்பர் பிரகாஷ், சுஜாதா மறைந்த போது, “இவர் எல்லாம் செத்து போவார் என்று கனவில் கூட நினைக்கவில்லையே” என்று சொன்னது போலத்தான் இதுவும்.

பதினேழு வயதில் உலக ஜூனியர் சாம்பியன், பதினெட்டு வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமை என்று, 1980-களின் கடைசியிலிருந்து வெற்றிகளைக் குவிக்கத் துவங்கிய ஆனந்தால் சதுரங்கத்தின் பக்கம் உந்தப்பட்டோர் ஏராளம். சசிகிரண், ஹரிகிருஷ்ணா, ஹம்பி, நெகி என்று உலக அரங்கில் வெளுத்து வாங்கும் எண்ணற்ற இந்தியர்களின் ஆதர்ச புருஷர் ஆனந்த். எந்த அரங்கிலும் எதுவும் வாங்காத எனக்கும் ஆனந்த்தான் ஆதர்ச புருஷன். 1990-களில், இண்டர்நெட்டில் செஸ் ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க முடியாத காலங்களில் கூட பேப்பரில் வரும் ஆட்ட நகர்த்தல்களை மணிக்கணக்காய் வைத்துப் பார்த்த எண்ணற்ற பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன்.

1991-ல் காஸ்பரோவ், கார்போவ் இருவரும் (மற்றும் பலரும்) பங்கு பெற்ற போட்டியில் நிச்சயமான வெற்றியாளராக ஆனந்த் ஜெயித்ததிலிருந்து ஆனந்தின் ஒவ்வொரு ஆட்டத் தொடரையும் தவறாமல், புரிந்தும் புரியாமலும், தொடர்ந்து வருகிறேன். 18 வருடங்களில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்! அவர் ஜெயித்தபோது மகிழ்ந்து, தோற்றபோது துவண்ட கணங்கள் கணக்கிலடங்கா. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் துவளாமல் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் ஆனந்தின் வாழ்க்கையில் சதுரங்கத்தைத் தாண்டியும் படிப்பினைகள் உண்டு.

young-anand1எட்டு வயதிலிருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆனந்தின் முதல் செஸ் குரு அவரது தாய் சுசீலா. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறிய ஆனந்த், “எனக்கு ஆறு வயதான போது என் அம்மா சதுரங்கம் ஆடச் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அந்த ஆட்டம் நன்றாக வருவதை உணர்ந்த்தும், தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். கொஞ்ச நாளில், என் அப்பாவின் பணி நிமித்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சில வருடங்கள் தங்க நேர்ந்தது. அப்போதுதான் பிலிப்பைன்ஸில் ‘Karpov-Korchnoi’ சாம்பியன்ஷிப் ஆட்டம் நடந்து முடிந்திருந்தது. அந்த ஆட்டம் நடந்த இடத்தை நாங்கள் சென்று பார்த்தோம். பின்னாளில் அங்குதான் எனக்கு உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்று நான் அப்போது உணரவில்லை. செஸ் அலை அப்போது அங்கு வீசிக் கொண்டிருந்தது. டிவி-யில் மத்தியான நேரத்தில் சதுரங்கப் புதிர்களை ஒளிபரப்புவார்கள். என் அம்மா அந்தப் புதிர்களைக் குறித்து வைத்துக் கொள்வார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், நானும் அம்மாவும் சேர்ந்து விடை கண்டுபிடிப்போம். சரியான விடை சொல்பவருக்கு ஒரு புத்தகம் வழங்குவார்கள். நாங்கள் பல முறை அந்தப் பரிசை வென்றோம். ஒரு நாள், என்னை போட்டி நடத்துபவர்கள் அழைத்து, எங்களிடம் இருக்கும் புத்தகங்களில் உனக்கு வேண்டியவற்றை எல்லாம் எடுத்துக் கொள். ஆனால், இனி போட்டியில் கலந்து கொள்ளாதே. வேறு யாராவது ஜெயிக்கவும் வாய்ப்பு கொடு என்றனர்.”, என்று நினைவு கூர்கிறார்.

தனது பத்தாவது வயதில் இந்தியா திரும்பிய ஆனந்தின் சதுரங்கப் பசிக்கு ‘Tal Chess Club’ தீனி போட்டது. Blitz எனப்படும் வேகமாக விளையாடக்கூடிய ஆட்டங்கள் அங்கு நடை பெற்றன. ஐந்து நிமிடத்துக்குள் ஒரு ஆட்டம் முடிந்து விடும். அந்த கிளப்பின் வழக்கப்படி ஜெயித்தவர் தொடர்ந்து ஆடலாம். பத்து வயது சிறுவனிடம் ஒருவர் மாற்றி ஒருவர் தோல்வியைத் தழுவுவது வழக்கமானது. ஆனந்தின் ஆட்டத்தில் முக்கியமான அம்சம் அவரது வேகம். நொடிப் பொழுதில் காய்களை நகர்த்தும் சாமர்த்தியம், அவர் இள வயதில் ஆடிய Blitz ஆட்டங்கள் மூலமே கிடைத்ததென்று ஆனந்த் கூறியுள்ளார்.

1983 நடந்த தேசிய அளவில் நடந்த போட்டியில், சப்-ஜூனியர் பிரிவில் ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்று பட்டத்தை வென்றதன் பின், International Master பட்டம், தேசிய சாம்பியன் பட்டம் (மூன்று முறை) என்று அடுத்தடுத்து பல வெற்றிகள். Manuel Aaron, Max Euwe என்ற கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்ததே இந்தியாவின் அதிக பட்ச சாதனையாக இருந்த காலகட்டமது. “கிராண்ட்மாஸ்டர் ஆவதில் உள்ள கஷ்டங்கள் நமக்குத் தெரியும் சமயத்தில், நாம் ஒரு கிராண்ட்மாஸ்டரை எதிர்த்து விளையாடும் போது அவர்களை ஒரு பிரமிப்போடு பார்க்கிறோம். அதனாலேயே ஒரு மனத்தடை உருவாகிவிடுவதுண்டு”, என்கிறார் ஆனந்த். 1985-ல் Mestel என்ற கிராண்மாஸ்டரை வென்றபின், வரிசையாகப் பல கிராண்ட்மாஸ்டர்கள் ஆனந்தின் சூராவளி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்தனர். இந்தியா கிராண்ட்மாஸ்டரையே பார்த்திராத வேளையில் ஆனந்தின் வெற்றிகள் நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் ஒரு முறையும், லண்டனில் ஒரு முறையும், கடைசி ஆட்டத்தை வென்றால் தகுதிக்குத் தேவையான புள்ளிகள் கிடைக்கும் என்ற நிலையில், அரைப் புள்ளி வித்தியாசத்தில் கிராண்ட்மாஸ்டர் தகுதி கிடைக்காமல் போனது. 1987-ல் பிலிப்பைன்ஸில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றபோது, சர்வதேச சதுரங்க உலகம் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. ஸ்பாஸ்கி, கார்போவ், காஸ்பரோவ் போன்ற உலக சாம்பியன்கள் எல்லாம் ஒரு காலத்தில் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடம், தன் பதினெட்டாவது வயதில் பத்மஸ்ரீ விருதினை ஆனந்த் பெற்றார்.

உலக செஸ் என்றாலே ரஷ்யாதான் என்ற நிலை பத்து வருடங்களுக்கு முன் வரை கூட இருந்தது. கார்ல்ஸன், டொபலோவ், ஆனந்த் என்று ரஷ்யர் அல்லாதவர் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கும் இந்நாளில் கூட ரஷ்யா ஒரு வலுவான செஸ் நாடாகத்தான் திகழ்கிறது. இள வயதிலேயே திறமை வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி தரக்கூடிய நல்லதொரு அமைப்பு ரஷ்யாவில் இருந்தது. கார்போவ், காஸ்பரோவ், கிராம்னிக் போன்ற சாம்பியன்கள் எல்லாம் போட்வினிக் ஸ்கூலில் இருந்து வந்தவர்களே. இன்று 17 வயதுக்குள் கார்ல்சனைப் போன்றவர்கள் ரஷ்யாவிலிருந்து வராத போதும், சதுரங்க உலகைக் கோலாச்சவில்லையா என்று கேட்கலாம். அதற்கான பதில், இன்று இருக்கும் கணினியும், இணையமும் அன்றிருக்கவில்லை. சக்தி வாய்ந்த கம்ப்யூடர் எஞ்சின்கள், எண்ணற்ற ஆட்டங்களின் திரட்டல்கள் என்று விரல் சொடுக்கும் நேரத்தில் கணினி கொடுக்கும் விவரங்கள் குவிந்து கிடக்கும் இந்நாளில் ரஷ்யரல்லாத ஒருவர் முன்னணி ஆட்டக்காரராக இருப்பது ஆச்சரியம் இல்லை. தகவல்கள் அதிகம் கிடைக்காத சமயத்தில், ரஷ்யாவில் சாம்பியன்களிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வசமே சதுரங்கப் பட்டம் நிலைத்து நின்றது. ரஷ்யரல்லாத ஒரே சாம்பியன், அந்தக் காலத்தில் பாபி ஃபிஷர்தான். அவரும் கூட அமெரிக்கா போன்ற ஒரு பணக்கார நாட்டிலிருந்து வந்தவர்.

இந்தியாவில் பிறக்காமல் ரஷ்யாவில் பிறந்திருந்தால் ஆனந்த் என்னவாகியிருப்பார்? அதற்கு ஆனந்த் கூறிய பதில்:

“சோவியத் யூனியனில் வளர்ந்திருந்தால், நான் வேறு விதமாக வளர்ந்திருப்பேன். பயிற்சிக்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்தியனாக இருந்ததில் பல சாதகங்கள் இருந்தன. எட்டாவது சிறந்த ரஷ்யன் என்னைவிட நல்ல பயிற்சியைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால், அவனுக்குப் பெரிய போட்டிகளில் விளையாட அழைப்பு கிடைக்க அவன் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவாவது வர வேண்டியிருக்கும். அந்த அளவு பயிற்சி இல்லாத போதும், நான் ‘சிறந்த இந்தியன்’ என்பதாலேயே எனக்குப் பல போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை நான் சரி வரப் பயன்படுத்திக் கொண்டேன்.”

சில புத்தகங்களையும், Tal club-ல் விளயாடக் கிடைக்கும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் வளர்ந்த சிறுவன் உலக ஜூனியர் பட்டம் வெல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை, அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும் போது உணர முடியும். 1991-க்கு முற்பட்ட இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவத்தை பின்வருமாறு ஆனந்த் ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தேவையான அன்னியச் செலாவணியை வாங்க முதலில் டில்லிக்குச் சென்று விளையாட்டி அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்குப் பின், Civil aviation ministry-க்குச் சென்றால், அவர்கள் ஏர் இண்டியாவில் டிக்கெட் கொடுப்பார்கள். அந்த டிக்கெட் இருந்தால்தான் அன்னியச் செலாவணியைப் பெற முடியும். அதை வாங்க டில்லியில் ஒரு ஸ்டேட் பாங்க் கிளையும், ஒரு தாமஸ் குக் கிளையும் இருந்தன.  ஏர் இண்டியா டிக்கட் மாலை ஐந்து மணிக்குத்தான் கிடைக்கும். அதற்குள் SBI மூடிவிடும். அதனால் தாம்ஸ் குக் செல்வோம். அன்னியச் செலாவணியைப் பெறவே இரவு 9 மணி ஆகிவிடும். இரவு 11 மணிக்கு விமானம் ஏற வேண்டியிருக்கும். சென்னையிலிருந்து கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, டில்லி சென்று ஒப்புதல் பெற்றுதான் ஸ்ரீலங்கா செல்ல முடியும். சில சமயங்களில் அமைச்சகங்களிலிருந்து வர வேண்டிய ஒப்புதலில் நிகழ்ந்த தாமதங்களால், போட்டிகள் தொடங்கிய பின் கூடச் சென்று விளையாடியிருக்கிறேன்.”

1987 உலக ஜூனியர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே, டில்லியிலும் கோயம்பத்தூரிலும் வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் தகுதியையும் ஆனந்த் பெற்றார். அதன்பின் எண்ணற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்று, லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை முடிக்கும் போது உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்தார். உலக அளவில் ஆடும் போதும், பயங்கர வேகத்தில் காய்களை நகர்த்திய ஆனந்தை ‘Tiger from Madras’ என்றழைத்தனர். 1991-ல் அறிமுகமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற பெருமையும் ஆனந்தை வந்தடைந்தது.

அப்போது செஸ் உலகு, Fide, PCA என்ற இரு அமைப்புகளாக பிளவுண்டிருந்தது. ஒரு பக்கம் கார்போவ் சாம்பியன். மறு பக்கம் காஸ்பரோவ் சாம்பியன். இவர்களை எதிர்த்து விளையாட இரு அமைப்புகளும் தகுதிச் சுற்றுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தன. 1994-ல் FIDE cycle-ன் காலிறுதிப் போட்டியில் காம்ஸ்கியை எதிர்த்து விளையாடினார் ஆனந்த். இந்தியாவில் நடந்த அந்த ஆட்டத்தில், மளமளவென வெற்றிகளைக் குவித்தார். அவர் பெற்ற வெற்றிகளே அவருக்கு எமனாகின. காம்ஸ்கியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இருக்கும் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதுமான நிலையில், ரொம்பவே தற்காப்பாக ஆடியதால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. வெற்றியின் விளிம்பிலிருந்த ஆனந்த், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஆட்டத்தை இழந்தார்.

anand-kasparov1995-ல் PCA Cycle-லிலும் ஆனந்தும் காம்ஸ்கியும் பல வெற்றிகளைக் குவித்தனர். Candidates இறுதிப்போட்டி ஆனந்துக்கும் காம்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்டது. இம்முறை ஆனந்த் சுலபமாக வென்று, உலக சாம்பியன் பட்டத்துக்காக காஸ்பரோவுடன் மோதினார். நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நடை பெற்ற அந்தப் போட்டியில் முதல் எட்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஒன்பதாவது ஆட்டத்தை ஆனந்த் வென்ற போதும், அடுத்த ஐந்து ஆட்டங்களில் நான்கைத் தோற்றார். 10.5-7.5 என்ற வித்தியாசத்தில் காஸ்பரோவ் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனந்தின் சதுரங்க வாழ்வின் மிகப் பெரிய சறுக்கல் என்றே அதைக் கூற வேண்டும். “சில ஆட்டங்களில் நான் நன்றாக விளையாடவில்லை. ஆனால் இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடவில்லை”, என்று ஆனந்த் சொன்னதை, என்னைப் போன்ற தீவிர ஆனந்த் ரசிகர்கள்தான் நம்பியிருக்கக் கூடும்.  ஆனால், சொன்ன படியே செய்து காட்டி உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக 1996-ல் இடம் பிடித்தார்.

1997-ல் ஆனந்தின் ஏறுமுகம் மீண்டும் தொடங்கியது. பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிக் கொண்ட போதும், உலக சாம்பியன் என்ற பட்டம் பெற ஆனந்த் 2000 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 2000-ல், தெஹரானில் நடந்த இறுதிப் போட்டியில் 3.5-0.5 என்ற வித்தியாசத்தில் ஷிரோவை வென்றதன் மூலம் உலக சாம்பியன் ஆனார். ஒரு உலக சாம்பியன் கிடைத்துவிட்டதை எண்ணி இந்தியா மகிழ்ந்திருந்த போதிலும், ‘Knock-out’ முறையில் நடத்தப்பட்ட போட்டியை, ஏற்காத பலரும் இருந்தனர். ”128 பேரில் ஆரம்பித்து, கடைசியில் ஒருவர் ஜெயிப்பதை விட, இருவர் பல ஆட்டங்கள் விளையாடி, கடைசியில் ஒருவர் ஜெயிக்கும் முறையில்தான் அனைத்து பெயர் பெற்ற சாம்பியன்களும் பட்டத்தை வென்றிருக்கின்றனர். அப்படி ஜெயிக்காத ஒருவர் உண்மையான சாம்பியன் ஆக முடியாது. காலிஃப்மென், பொனோமரியோவ் போன்ற FIDE knock out சாம்பியன்கள் வரிசையில் ‘also ran’-ஆகத்தான் ஆனந்தைக் கொள்ள முடியும்.” என்ற வாதமும் அப்போது பரவி இருந்தது. குறிப்பாக, அப்போது நம்பர் 1-ஆக இருந்த காஸ்பரோவை எதிர்த்து விளையாடாமல் ஆனந்த் பெற்ற வெற்றியின் மூலம் அவரை சாம்பியனாகக் கொள்ள முடியாது என்ற வாதமும் வலுவாக இருந்தது. இவற்றை எல்லாம் ஆனந்த் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஜெயித்த போதும் தோற்ற போதும் சலனமில்லாமல் இருப்பதே ஆனந்தின் நெடுநாள் வெற்றிக்கு முக்கிய காரணம்.

2002-ல் FIDE champion பட்டத்தை இழந்த பிறகு, Classical Chess-ல்fide-champion ஆனந்துக்கு அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்பட்ட போதும், Rapid Chess-ல் முடிசூடா மன்னன் இவர்தான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் போல், சதுரங்கத்தில், Dortmund, Linares மற்றும் Corus Tournaments-ஐ கொள்ளலாம். இந்த மூன்று போட்டிகளையும் மூன்று முறையாவது வென்ற பெருமை ஆனந்தைச் சேரும். 64 என்ற சதுரங்கப் பத்திரிகை அளிக்கும் செஸ் ஆஸ்கர் என்ற விருது, உலக ஆட்டக்காரர்கள், செஸ் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் வழங்கப் படும் விருது. 1997-ல் தொடங்கி, இந்த விருதினை ஆறு முறை பெற்ற ரஷ்யரல்லாதவர் ஆனந்த் ஒருவர்தான். (காஸ்பரோவும் கார்போவும் ஆனந்தை விட அதிக முறை இந்த விருதினைப் பெற்றவர்கள்.)  2000-ல் பத்ம பூஷண் விருதும் அவருக்குக் கிடைத்தது.

ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும். இப்படிப்பட்ட விபரீதமான முறையில் விளையாடிய போதும், பல வெற்றிகளைக் குவித்ததோடன்றி, எதிர்த்து விளையாடுபவரின் complicated home preparation-ஐ கூட துல்லியமாக defend செய்யக் கூடிய ஆனந்தின் ஆற்றல் வியப்பானது!

கணினியின் வருகை சதுரங்க உலகையே கலக்கிப் போட்டது. ‘Deep Blue’ என்ற செஸ் கணினியிடம் காஸ்பரோவ் தோற்ற போது பெரும் அதிர்ச்சி அலை எழும்பியது. காலப்போக்கில் கணினியின் பயனை வீரர்கள் உணர ஆரம்பித்தனர். கணினி இல்லாத காலத்தில் தொடங்கினாலும், வலிமை வாய்ந்த கணினிகள் துணை கொண்டு ஆய்வுகள் புரியக் கூடிய காலத்திற்கு ஏற்ப, தன் ஆட்டத்தை ஆனந்த் மாற்றிக் கொண்டது தனிச் சிறப்பு. காஸ்பரோவ் அறிமுகம் செய்த ‘Advanced Chess’ என்ற வகை ஆட்டத்தில், போட்டியின் போதே கணினியின் உதவியை நாடலாம். இந்த வகை ஆட்டம் நடை பெறும் Leon Tournament-ஐ பல முறை வென்ற பெருமையும் ஆனந்தைச் சாரும்.

2007-ல் Linares போட்டியை வென்ற போது, உலக தர வரிசையில் ஆனந்த் முதல் இடத்தைப் பெற்றார். ELO Rating-ல் 2800 புள்ளிகளைத் தாண்டியுள்ள சொற்பமானவர்களில் ஆனந்தும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. அந்த வருடம் அவருக்கு ‘பத்ம விபூஷண்’ அளித்ததன் மூலம் ஜனாதிபதி பெருமை தேடிக் கொண்டார்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். அப்போது ஒவ்வொரு ஆட்டத்தையும் இரவு எவ்வளவு நேரமானாலும் இணையத்தின் வழி ரசித்த எண்ணற்ற சதுரங்க ரசிகர்களுள் நானும் ஒருவன்.

மீண்டும், இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக்  சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார்.  மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா?  என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆனந்த் - க்ராம்னிக் 'Final Handshake'ஆனந்த் – க்ராம்னிக் ‘Final Handshake’ 

இம்முறை யாராலும் அவரது பட்டத்தைக் குறை சொல்ல முடியவில்லை. “மேதை என்றால் மனப்பிறழ்வு  (eccentricity) இருக்க வேண்டும். நல்ல ஆட்டக்காரர் என்றால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டும்”, என்பவை செஸ் உலகின் நிதர்சன நியதிகள். இது வரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ளாத ஆனந்த், “Nice guys always come second”, என்பதைத் தன் விடாமுயற்சியால் பொய்யாக்கியவர்.

“Knock out format”, “Tournament Format”, “Match Format” ஆகிய மூன்றிலும் வெற்றி வாகை சூடிய ஒரே சாம்பியன் ஆனந்த்தான்.

நாற்பது வயதைத் தாண்டியும் விளையாடிக் கொண்டிருந்த இவான்சுக்கும் சில வாரங்கள் முன் தன் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தன்னை விட பாதி வயதானவர்கள் பலருடன் இன்னும் உற்சாகமாய்ப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆனந்த். தரவரிசையில் முதல் பத்து இடங்களில் மூத்தவர் ஆனந்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவுடன், தன் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மோதுகிறார்.

1996-ல் தொடங்கி இன்று வரை (2008-ல் சில மாதங்கள் தவிர) உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக இருக்கும் ஆனந்த் வாழும் போதே நானும் வாழ்ந்து, அவர் ஆட்டங்களை ரசிக்கக் கொடுத்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு.

பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் ஒருவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார். அதையடுத்த ஐந்து நிமிடங்களுக்கு நண்டு மாதிரி வியூகம் அமைத்துக் கொண்டு இரு அணியினரும் பந்தை சுற்றி நிற்பார்கள். ஒருத்தர் துணிச்சலாக பந்தை எடுத்து அந்த நண்டின் கால் பகுதியில் நிற்பவரிடம் வீசுவார். பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் அவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார்.

இப்படி இரு திசையிலும் தேங்கித் தேங்கி ஒரு வெள்ளம் பாயும். ஒரு வழியாக H மாதிரி இருக்கிற கோல் போஸ்ட் கூப்பிடு தூரத்தில் தென்பட்டதும் பந்தைக் கையில் வைத்திருக்கிற புண்ணியவான் “பூம்!” என்று அதை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைப்பார். எட்டி உதைப்பார் என்று சொன்னால் இந்த உதையின் உக்கிரம் தெரிவதில்லை. ஏறத்தாழ பீரங்கியை விட்டுப் புறப்படுகிற குண்டு மாதிரி அந்தக் கோணல் வடிவ பந்து வெடித்துக் கிளம்பும். ஏறத்தாழ எப்போதும் அது உதைத்தவரின் உத்தேசத்துக்குப் போக்கு காட்டி விட்டு எங்கேயோ போய் விழும்.

சுவாரசியமான விளையாட்டு. நேரம் காலம் போவது தெரியாமல் நண்டு பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். வாழ்க்கை அசுவாரசியப்படுகிற தருணங்களில் எல்லாம் நான் இந்த விளையாட்டைத்தான் பார்ப்பது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்-

ரூல்ஸ் ரக்பி பார்த்தால் கனத்த இதயம் கொண்ட தத்துவ மேதைகள் (ஹிஹி…) கடி ஜோக் அடிப்பார்கள் என்று மாம்பலத்தில் கண்டெடுக்கப்படவுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது- எங்கே என்று கேட்காதீர்கள். இனிதான் ஆர்டர் பண்ண வேண்டும்.

ஏன் சொல்கிறேன் என்றால் அபத்தங்களை அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடிய ரசவாதம் இந்த விளையாட்டுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ நாமெல்லாம் நடக்கிற காரியமா இது என்று தாண்டிச் செல்கிற தீண்டாமைக்கு (discrimination) எதிரான இயக்கத்தை இந்திய ரூல்ஸ் ரக்பி வீரர் ராகுல் போஸ் துவக்கி இருக்கிறார். தீண்டாமை என்றால் வெறுமே ஜாதிக்கு எதிரான இயக்கம் என்று நினைக்காதீர்கள்- நிறம், பணம், ஊனம், மொழி என்று எங்கெங்கு எந்தக் காரணத்தால் மக்கள் தூர ஒதுக்கி நிறுத்தப்பட்டாலும் அது தப்பு, இதை மாற்ற வேண்டும் என்று ஒரு தொண்டு நிறுவனத்தைத் துவக்கி இருக்கிறார் ராகுல் போஸ்.

கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று உங்களில் சிலர் யோசிக்கலாம், ஆமாம், அவரேதான் இவர்.

நடிகர், கதாசிரியர், இயக்குனர், ரூல்ஸ் ரக்பி விளையாட்டு வீரர், தொண்டு நிறுவனக் களப்பணியாளர் என்று பல முகங்கள் இருக்கின்றன இந்த சகலகலா வல்லவருக்கு (மனுஷன் கமலை மிஞ்சிய ஆளாய் இருப்பான் போலிருக்கிறது- யூட்யூபில் ராகுல் போஸ் என்று தட்டச்சு செய்தால் தேடு பொறி Rahul Bose kiss, Rahul Bose kissing, Rahul Bose hot scenes, rahul bose and mallika sherawat என்று குறிப்பெடுத்துத் தருகிறது! )

சரி, விஷயத்துக்கு வருகிறேன் 🙂

தன் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட வேண்டி இந்திய விளையாட்டு வீரர்கள் தனக்கு தானமாய்க் கொடுத்த நினைவுப் பொருட்கள் இருப்பத்தைந்தை ராகுல் போஸ் இந்நேரம் ஏலம் விட்டிருப்பார். அவற்றைத் திரட்டியது குறித்த அனுபவத்தை இங்கே , தெஹல்காவில் அருமையாக எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்.

விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பான் நகரில் தான் வென்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் பதக்கத்தைத் தருகிறார்.

ஆனந்தின் இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார்.

இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக் சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார். மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா? என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

1990-களில் இருந்து அடை காத்த கனவு 2008-ல் நனவானதின் சின்னமே, பான் நகரில் ஆனந்த் வென்ற பதக்கம்.

ராகுல் போஸ் இந்தப் பதக்கத்தின் முக்கியத்துவம் தெரிந்தவராதலால், “ஏன்? ஏன்? வேற ஏதாவது கொடுக்ககூடாதா?” என்று கேட்கிறார்.

ஆனந்த், “இல்லை இல்லை நீ செய்வது பெரிய வேலை. எடுத்துக் கொள். இது இனி உன்னுடையது, ” என்று சொல்கிறார்.

ஆனந்தின் மனைவி அருணா, ராகுல் போஸை அமர்த்திவிட்டு உள்ளே செல்கிறார். திரும்பி வரும்போது அவர் கையில் ஆனந்த் ஜெயித்த முதல் உலக சாம்பியன்ஷிப் கோப்பை. அதையும் ஏலம் விடக் கொடுக்கிறார் அவர்.

அபினவ் பிந்த்ரா (மறந்திருக்க மாட்டீர்களே?) தான் இருபத்தைந்து பதக்கங்கள் வெல்லக் காரணமாயிருந்த துப்பாக்கியைத் தருகிறார். இந்த இருபத்தைந்தில் அவர் வென்ற உலக சாம்பியன்ஷிப் பதக்கமும், உலக சாதனை செய்து ஜெயித்த மெடலும், அவ்வளவு ஏன், ஒலிம்பிக் சாதனை செய்து வென்ற பதக்கமும் எல்லாம் அடக்கம். அவ்வளவு முக்கியமான துப்பாக்கியைத் தருகிறார் பிந்த்ரா.

சாய்னா நெஹ்வால், கீத் சேதி, டைகர் படோடி, ஹாக்கி வீரர் அஜித் பால் சிங் என்று பலரும் மனமுவந்து பொக்கிஷங்களை தாரை வார்த்துள்ளனர்.

ராகுல் போஸ் இந்தக் கட்டுரையில் ஒரு தத்துவ முத்தை உதிர்க்கிறார். “விளையாட்டு வீரர்களுக்கு உலகம் ஒரு மாயை என்று சொல்லத் தேவை இல்லை. அர்ஜுனன் உலக அளவில் விளையாடி இருந்திருந்தால் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்திருக்க வேண்டி வந்திருக்காது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அப்படி. கணத்துக்கு கணம் வாழ்ந்தாக வேண்டும். வெற்றி தோல்விதான் அவர்களுக்கு அனைத்தும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றும் தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள். இன்று எதை நன்றாக செய்ய முடியுமோ, அதை செய்கிறார்கள் அவர்கள். விளையாட்டு வீரர்கள் மாபெரும் தத்துவ மேதைகள்,” என்கிறார் போஸ்.

– சுவாரஸ்ய மேட்டர்கள்: நாட்பாஸ், மொக்கை செஸ் விவரங்கள்: லலிதா ராம்

என்னப்பா இது, கிரிக்கெட் தவிர என்று பேர் போட்ட காரணத்துக்காக நம் வாழும் தெய்வம் சச்சின் கொடுத்த மட்டை குறித்த செய்தியைக் கூட ஈவு இரக்கமில்லாமல் இருட்டடிப்பு செய்யலாமா என்று கேட்கிற கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவர் தந்த மட்டையும், டைகர் படோடியின் ஜாகெட்டும் இங்கு அடிக்குறிப்பில்தான் வரும்.

சச்சின் டெண்டுகர் பெரிய மனசு பண்ணி நியூ ஜீலாந்து அணிக்கு எதிராக 133 பந்துகளில் 163 ரன்கள் குவித்து சாதனை படைத்த மட்டையை ராகுல் போஸிடம் ஏலம் விடக் கொடுத்திருக்கிறார். இந்த மட்டை சச்சின் அடித்த ஒரு நாள் கோப்பை சதங்களில் நான்காவது பெரிய சதத்தை அடித்துத் தந்திருக்கிறது. உலக அரங்கில் ஏலம் என்றால் ஆனந்தின் பதக்கத்துக்கு அதிகப்படியான வரும்படி இருக்கக் கூடும். இந்தியாவில் ஏலம் நடப்பதால் சச்சினின் மட்டைதான் அதிக விலைக்குப் போகும் என்று சொல்லத் தேவையில்லை.

நீதி நியாயம் பற்றி தீவிரமாக யோசித்தவர்களுள் அமெரிக்கரான ஜான் ரால்ஸ் மிக முக்கியமானவர். நாற்பது ஆண்டுகளாக மிக முக்கியமாக இருக்கும் இவரது வாதங்களுக்கு மாற்றாக நம்ம ஊர் அமர்த்யா சென் போன வருஷம் ஒரு புத்தகம் எழுதப் போய் அது மிகப் பெரிய அளவில் தத்துவம் பேசுபவர்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னடா இது, கிரிக்கெட் தவிர என்று சொன்னால் கிரிக்கெட் தவிர எதை வேண்டுமானாலும் எழுதுவீர்களா என்று கேட்காதீர்கள். விஷயத்துக்கு வருகிறேன்.

ஜான் ரால்ஸ் ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறார்- அனைவரும் ஏற்றுக் கொண்ட பழக்கத்தை வைத்துதான் சட்டங்கள் இருக்கின்றன. ஒரு பழக்கத்தை நியாயப்படுத்துவது என்பது வேறு, அந்தப் பழக்கத்தால் நெறிமுறைப்படுத்தப்படுகிற செயலை நியாயப்படுத்துவது என்பது வேறு என்கிறார். தேவையில்லாமல் எதையோ சொல்லிக் குழப்புகிறானே என்று நீங்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். சில பேர் ரொம்ப நாட்களாகக் கருப்புப் பணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் யாரோ ஒரு வேண்டப்பட்டவர் நிதி அமைச்சராக வருகிறார்- இந்த ஒரு தடவை மட்டும் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளலாம். கேள்வி கேட்க மாட்டோம் என்கிறார். அப்போது கறுப்புப் பணம் வைத்திருக்கிற எல்லாரும் தங்களிடம் இருக்கிற கோடி கோடிகளை வெள்ளையப்பன் ஆக்கிக் கொள்கிறார்கள்.

சரி போ என்று விட்டு விடலாம். நான் இந்த வருஷம் சரியாக வருமான வரியைக் கட்டாமலிருந்து மாட்டிக் கொள்கிறேன்- “அவங்களை அன்னிக்கு ப்ரீயா வுட்டியே? என்னயும் இப்போ வுடு!” என்று நான் சொன்னால் சரி போ என்று விட்டு விடுவார்களா?

விட மாட்டார்கள்தானே? இது என்னடா அநியாயம் என்று நாம் புரட்சி செய்யக் கிளம்புகிற மூடில் இருப்போம். ரால்ஸ், “ஐயா, அப்பா, கொஞ்சம் இரு. அநியாயத்தை எதிர்த்துக் கிளம்புகிற நீ நியாயத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டுப் போ!” என்று அமர்த்துகிறார்.

இங்கேதான் இதைக் கிரிக்கெட் தவிர என்ற தளத்தில் ஏன் நான் பதிக்கிறேன் என்பதற்கு சரியான காரணம் வருகிறது- பேஸ்பால் வடிவில்.

அந்த இழவு எவனுக்குப் புரிகிறது என்கிறீர்களா? அதுவும் நல்லதுக்குதான்.

ஒரு நிமிடம் நிதானியுங்கள். கண்களை மூடிக் கொண்டு யோசிக்கிற மாதிரி பாவனை பண்ணுங்கள். எப்படி இப்படியெல்லாம் சட்ட மேதைகள் செய்வதை நியாயப்படுத்த முடியும்? ஆளுக்கு ஒரு நீதியா, என்ன? நீங்களானால் என்ன சொல்வீர்கள்? யோசித்துப் பாருங்கள்.

ரால்ஸ் சொல்கிறார்- ஐயா, அப்பா, உன் தோட்டத்தில் நீயும்தான் பந்து வீசுகிறாய். இங்கும் அங்கும் ஓடுகிறாய். சறுக்கி விழுகிறாய். கையில் கிடைக்கிறதை கண்ட திசையில் விட்டெறிகிறாய். ஆனால் நீ கனவுலகில் இருந்தாலொழிய இந்த மாதிரி சேட்டைகளால் ஒரு பேசைத் திருட முடியாது, ஸ்ட்ரைக் அவுட் பண்ண முடியாது, பால்க் பண்ணவோ ஸ்லைட் பண்ணி பேகில் நுழைவதோ முடியாது, இல்லையா?

பேஸ்பால் என்ற விளையாட்டுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை நெறிப்படுத்துவதற்காக ரூல்கள், விதிகள், சட்டங்கள் என்று வைத்திருக்கிறார்கள். இதற்குட்பட்டுதான் விளையாட முடியும். நீ பாட்டுக்கு ஒரு பேஸ்பால் கேமுக்குள் புகுந்து மூன்று குச்சிகளை நட்டு வைத்து “ஹவ் இஸ் தட்?” என்று கேட்டால், “திஸ் இஸ் நாட் கிரிக்கெட்!” என்று சொல்லி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்களா மாட்டார்களா?

அந்த மாதிரி சட்டம் என்பது பொதுவாக எல்லாருக்கும் என்று ஒரு நியாயத்தை முடிந்த அளவுக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கிறது. அதற்கென்று ஒரு நடைமுறை, ரூல் எல்லாம் உண்டு. அப்போ அப்பிடி சொன்னியே, இப்போ இப்பிடி சொல்றீயே?, அவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று எல்லாம் கேட்டு சட்டம் ஒரு இருட்டறைன்னு சொல்லீட்டு போகக் கூடாது, ரூலுன்னா ரூல்தான், ஆமாம்!, என்கிறார் ரால்ஸ்.

எப்படி பேஸ்பால் விளையாட்டுக்கு வெளியே அதன் சட்டங்கள் செல்லுபடி ஆவதில்லையோ, எப்படி அதன் விதிகள்தான் பேஸ்பால் என்ற விளையாட்டைத் தீர்மானிக்கிறதோ, அப்படிதான் நடைமுறைக்கு வெளியே நியாயம் இல்லை, நியாயத்துக்கு அப்பால் இன்ன நடைமுறை என்று ஒன்று இல்லை என்கிறார் ரால்ஸ். என்று நான் அனுமானிக்கிறேன். தவறாக இருந்தால் திருத்துங்கள்.

ஒன்று, நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என்று சொல்ல வேண்டும்- அல்லது வேற விளையாட்டு ஆடலாம் வாங்கப்பா என்று ஆள் சேர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு சட்டத்தில் ஓட்டை அது இது என்று நொட்டை சொல்லிக் கொண்டிருப்பது வேலைக்காவாது என்பது அவர் வாதம்.

இதென்ன பெரிய விஷயம் என்று கேட்பீர்கள். அப்படி ஆட்டத்தை மாத்துங்கப்பா என்று பவுல் கேம் விளையாடுபவனை ரெட் கார்ட் காட்டி தண்டிப்பது நியாயம்தான் என்று ஒரு போடு போடுகிறார் ரால்ஸ். இதைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள், இது பெரிய விஷயமா இல்லையா?

ரால்ஸ் சொல்வது என்ன ஒரு அநியாயம், தெரிகிறதா இல்லையா?! ஆனால் அதில் உள்ள நியாயம் புரிகிறது, உண்டுதானே?

அப்படி புரிந்ததானால் அதற்குக் காரணம் தத்துவ விசாரணை இல்லை- நீங்கள் விளையாட்டு குறித்துத் தெரிந்து வைத்திருந்த அறிவு, அதற்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

அதனால் போகிற போக்கில் ஒரு சைடுக்கா ஏதாவது ஒரு திரட்டி பக்கம் போய் இந்தப் பதிவுக்கு ஒன்றுக்கு இரண்டு கள்ள ஓட்டு போட்டு விட்டுச் செல்லுங்கள். இந்த விளையாட்டின் ரூல் அப்படிதான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள்-

Two Concepts of Rules by John Rawls
The Best of All Games, Boston Review, John Rawls.

– நாட்பாஸ்

தலைவர் ஆனந்த் பில்போவில் ஆடிய கையோடு சைனாவில் (நேற்று முதல்) ஆடுகிறார். ஆண்டின் Highest Rating average உள்ள ஆட்டத் தொடர் பில்போதான் என்ற போதும், 4 பேர் ஆளுக்கு ஆறு ஆட்டங்கள் ஆடுவதை விட, 6 பேர் ஆளுக்கு பத்து ஆட்டங்கள் ஆடுவது (டபிள் ரவுண்ட் ராபின் முறையில்) ரசிகர்களுக்கு இன்னும் உவப்பாக அமையும்.

ரேட்டிங்கில் 2800-ஐ தாண்டிய மூவர் (கார்ல்சன், ஆனந்த்,டொபலோவ்) இந்தப் போட்டியில் ஆடுவதிலிருந்து தொடரின் மதிப்பைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தவிர காஷிமோவ், பார்காட், மண்ணின் மைந்தர் வாங் யூ-வும் பங்கு பெறுகின்றனர்.

போன வருடம் சுலபமாக கார்ல்சன் வென்றார். மட மட என தர வரிசையில் முன்னேறி முதல் இடத்தை அடைந்த 19 வயது கார்ல்சன் இந்த வருடம் சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஒலிம்பியாடிலும், பில்போவிலும் அவரடைந்த தோல்விகள் பற்றிச் சொல்லும் போது, “ஆனந்த், கிராம்னிக் போன்ற தெர்ந்தவர்களுடன் அடைந்த தோல்விகளுக்கு கார்ல்சனின் ஃபாஷன் உலக வாழ்க்கையும், வயது கோளாரில் எற்படும் கவனச் சிதறல்களும் காரணம் என்று சொல்வதே கார்ல்சனுக்கு பெரிய பெருமை.”, என்றுள்ளார் பிரபல செஸ் எழுத்தாளர் மிக் கிரீன்கார்ட்.

கிராம்னிக்கை வென்று உலக சாம்பியன் ஆனதிலிருந்து, ஆனந்தின் கவனம் எல்லாம் டோர்னமெண்ட் பக்கம் முழுமையாக செலுத்த முடியாத நிலை. புதிய திட்டங்களை எல்லாம் சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஆடிக் கொள்ளலாம், டோர்ணமெண்டைப் பொறுத்த வரை தோற்காமல் ஆடினால் போதும் என்கிற மனநிலையிலேயே ஆடி வருகிறார். அடுத்த சாம்பியன்ஷிப்புக்கு 2 வருடங்கள் இருக்கும் நிலையில், இந்த போட்டியிலாவது ஆனந்த் தடையின்றி ஆடுவாரா என்று பார்க்க வேண்டும்.

ஆனந்திடம் தோற்ற பின், டொபலோவ் ஒலிம்பியாடில் ஆடினார். இரண்டுக்கும் இடையில் அவருக்கு திருமணம் ஆகியுள்ளது. அதனாலோ, அல்லது வெறு எதனாலோ ஒலிம்பியாடில் டொபலோவால் சோபிக்க முடியவில்லை. சோஃபியாவில் தோற்ற பின், ஆனந்தை இங்கு டொபலோவ் ஆடுகிறார். சென்ற வருடம் கார்ல்சனிடம் தோற்றதற்கும் பழி வாங்கக் காத்திருப்பார் டொபலோவ். இவருடைய ஆட்ட்ங்களில் சரவெடிகள் பல வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்று தொடங்கிய ஆட்டங்களில் கார்ல்சன் பார்காடை வென்று மீண்டும் லைவ் ரேட்டிங்கில் நம்பர் 1 ஆனார். ஆபிஸ் வேளையில் நடந்த ஆட்டங்களை கவனிக்க முடியவில்லை. மற்ற ஆட்டங்கள் எல்லாம் டிராவில் முடிந்தன. ஆனந்த் முன்பெல்லாம் டோர்னமெண்டில் 1.e4-ல் ஆட்டத்தைத் தொடங்குவார். கிராம்னிக்குடனும், டொபலோவுடனும் ஆடிய சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஷாக் வால்யூக்காக 1.d4-க்குத் தாவினார். நேற்றைய ஆட்டத்தில், டோர்னமெண்ட் என்ற போதும், 1.d4-ல் தொடங்கியுள்ளார். வாங்-யூ தவறு ஏதும் செய்யாத நிலையில், ஆனந்த் சந்தோஷமாக டிராவை ஏற்றுக் கொண்டார்.

போட்டியைப் பார்த்த ரசிகர்கள், மீண்டும், “கில்லர் இன்ஸ்டிங்ட் ஆனதுக்கு இல்லை. டோர்ணமெண்டை கடனுக்கு ஆடுகிறார். டோர்ணமெண்டைப் பொறுத்த மட்டும் ஆனந்தை “டிரானந்த்” என்றால் மிகையாகாது. 2.5 வருடங்களுக்கு மேலாக எந்தடோர்ணமெண்டையும் ஆனந்த் வெல்லவில்லை.”, என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதில் கொஞ்சம் உண்மை உண்டென்ற போதும், நிறைய அதீதம்.

பத்து ஆட்டங்கள் கொண்ட டோர்னமெண்டில், கடைசி ஆட்டத்தில் கூட நிலை மாறக் கூடும். ஆனந்த் ரசிகர்கள் இந்தப் புலம்பல்களை போட்டி முடிந்ததும் சொல்வதே சரி:-)

இன்று ஆனந்த் கார்ல்சனுடன் ஆடுகிறார். உலக சாம்பியன் Vs உலக நம்பர் 1. ஆனந்த் நிதானமாக ஆடி கார்ல்சனை ஆழம் பார்ப்பார் என்றே தோன்றுகிறது.

டோர்னமெண்டில் வலைத்தளம்: http://www.chess-pearlspring.com/www/chess_pk/2009/en/index.htm

இந்தியாவில் சூப்பர் கிரான்மாஸ்டர் டோர்னமெண்ட் எப்போது நடக்கும்?

பல வருடங்களாக கோரஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. கோரஸ் கம்பெனியை டாடா நிறுவனம் வாங்கி விட்ட நிலையில், அதை இந்தியாவுக்கு மாற்றுவது சுலபமாகாதா?

மனமிருந்தால் மார்கபந்து!