பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் ஒருவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார். அதையடுத்த ஐந்து நிமிடங்களுக்கு நண்டு மாதிரி வியூகம் அமைத்துக் கொண்டு இரு அணியினரும் பந்தை சுற்றி நிற்பார்கள். ஒருத்தர் துணிச்சலாக பந்தை எடுத்து அந்த நண்டின் கால் பகுதியில் நிற்பவரிடம் வீசுவார். பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் அவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார்.

இப்படி இரு திசையிலும் தேங்கித் தேங்கி ஒரு வெள்ளம் பாயும். ஒரு வழியாக H மாதிரி இருக்கிற கோல் போஸ்ட் கூப்பிடு தூரத்தில் தென்பட்டதும் பந்தைக் கையில் வைத்திருக்கிற புண்ணியவான் “பூம்!” என்று அதை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைப்பார். எட்டி உதைப்பார் என்று சொன்னால் இந்த உதையின் உக்கிரம் தெரிவதில்லை. ஏறத்தாழ பீரங்கியை விட்டுப் புறப்படுகிற குண்டு மாதிரி அந்தக் கோணல் வடிவ பந்து வெடித்துக் கிளம்பும். ஏறத்தாழ எப்போதும் அது உதைத்தவரின் உத்தேசத்துக்குப் போக்கு காட்டி விட்டு எங்கேயோ போய் விழும்.

சுவாரசியமான விளையாட்டு. நேரம் காலம் போவது தெரியாமல் நண்டு பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். வாழ்க்கை அசுவாரசியப்படுகிற தருணங்களில் எல்லாம் நான் இந்த விளையாட்டைத்தான் பார்ப்பது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்-

ரூல்ஸ் ரக்பி பார்த்தால் கனத்த இதயம் கொண்ட தத்துவ மேதைகள் (ஹிஹி…) கடி ஜோக் அடிப்பார்கள் என்று மாம்பலத்தில் கண்டெடுக்கப்படவுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது- எங்கே என்று கேட்காதீர்கள். இனிதான் ஆர்டர் பண்ண வேண்டும்.

ஏன் சொல்கிறேன் என்றால் அபத்தங்களை அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடிய ரசவாதம் இந்த விளையாட்டுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ நாமெல்லாம் நடக்கிற காரியமா இது என்று தாண்டிச் செல்கிற தீண்டாமைக்கு (discrimination) எதிரான இயக்கத்தை இந்திய ரூல்ஸ் ரக்பி வீரர் ராகுல் போஸ் துவக்கி இருக்கிறார். தீண்டாமை என்றால் வெறுமே ஜாதிக்கு எதிரான இயக்கம் என்று நினைக்காதீர்கள்- நிறம், பணம், ஊனம், மொழி என்று எங்கெங்கு எந்தக் காரணத்தால் மக்கள் தூர ஒதுக்கி நிறுத்தப்பட்டாலும் அது தப்பு, இதை மாற்ற வேண்டும் என்று ஒரு தொண்டு நிறுவனத்தைத் துவக்கி இருக்கிறார் ராகுல் போஸ்.

கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று உங்களில் சிலர் யோசிக்கலாம், ஆமாம், அவரேதான் இவர்.

நடிகர், கதாசிரியர், இயக்குனர், ரூல்ஸ் ரக்பி விளையாட்டு வீரர், தொண்டு நிறுவனக் களப்பணியாளர் என்று பல முகங்கள் இருக்கின்றன இந்த சகலகலா வல்லவருக்கு (மனுஷன் கமலை மிஞ்சிய ஆளாய் இருப்பான் போலிருக்கிறது- யூட்யூபில் ராகுல் போஸ் என்று தட்டச்சு செய்தால் தேடு பொறி Rahul Bose kiss, Rahul Bose kissing, Rahul Bose hot scenes, rahul bose and mallika sherawat என்று குறிப்பெடுத்துத் தருகிறது! )

சரி, விஷயத்துக்கு வருகிறேன் 🙂

தன் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட வேண்டி இந்திய விளையாட்டு வீரர்கள் தனக்கு தானமாய்க் கொடுத்த நினைவுப் பொருட்கள் இருப்பத்தைந்தை ராகுல் போஸ் இந்நேரம் ஏலம் விட்டிருப்பார். அவற்றைத் திரட்டியது குறித்த அனுபவத்தை இங்கே , தெஹல்காவில் அருமையாக எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்.

விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பான் நகரில் தான் வென்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் பதக்கத்தைத் தருகிறார்.

ஆனந்தின் இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார்.

இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக் சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார். மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா? என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

1990-களில் இருந்து அடை காத்த கனவு 2008-ல் நனவானதின் சின்னமே, பான் நகரில் ஆனந்த் வென்ற பதக்கம்.

ராகுல் போஸ் இந்தப் பதக்கத்தின் முக்கியத்துவம் தெரிந்தவராதலால், “ஏன்? ஏன்? வேற ஏதாவது கொடுக்ககூடாதா?” என்று கேட்கிறார்.

ஆனந்த், “இல்லை இல்லை நீ செய்வது பெரிய வேலை. எடுத்துக் கொள். இது இனி உன்னுடையது, ” என்று சொல்கிறார்.

ஆனந்தின் மனைவி அருணா, ராகுல் போஸை அமர்த்திவிட்டு உள்ளே செல்கிறார். திரும்பி வரும்போது அவர் கையில் ஆனந்த் ஜெயித்த முதல் உலக சாம்பியன்ஷிப் கோப்பை. அதையும் ஏலம் விடக் கொடுக்கிறார் அவர்.

அபினவ் பிந்த்ரா (மறந்திருக்க மாட்டீர்களே?) தான் இருபத்தைந்து பதக்கங்கள் வெல்லக் காரணமாயிருந்த துப்பாக்கியைத் தருகிறார். இந்த இருபத்தைந்தில் அவர் வென்ற உலக சாம்பியன்ஷிப் பதக்கமும், உலக சாதனை செய்து ஜெயித்த மெடலும், அவ்வளவு ஏன், ஒலிம்பிக் சாதனை செய்து வென்ற பதக்கமும் எல்லாம் அடக்கம். அவ்வளவு முக்கியமான துப்பாக்கியைத் தருகிறார் பிந்த்ரா.

சாய்னா நெஹ்வால், கீத் சேதி, டைகர் படோடி, ஹாக்கி வீரர் அஜித் பால் சிங் என்று பலரும் மனமுவந்து பொக்கிஷங்களை தாரை வார்த்துள்ளனர்.

ராகுல் போஸ் இந்தக் கட்டுரையில் ஒரு தத்துவ முத்தை உதிர்க்கிறார். “விளையாட்டு வீரர்களுக்கு உலகம் ஒரு மாயை என்று சொல்லத் தேவை இல்லை. அர்ஜுனன் உலக அளவில் விளையாடி இருந்திருந்தால் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்திருக்க வேண்டி வந்திருக்காது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அப்படி. கணத்துக்கு கணம் வாழ்ந்தாக வேண்டும். வெற்றி தோல்விதான் அவர்களுக்கு அனைத்தும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றும் தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள். இன்று எதை நன்றாக செய்ய முடியுமோ, அதை செய்கிறார்கள் அவர்கள். விளையாட்டு வீரர்கள் மாபெரும் தத்துவ மேதைகள்,” என்கிறார் போஸ்.

– சுவாரஸ்ய மேட்டர்கள்: நாட்பாஸ், மொக்கை செஸ் விவரங்கள்: லலிதா ராம்

என்னப்பா இது, கிரிக்கெட் தவிர என்று பேர் போட்ட காரணத்துக்காக நம் வாழும் தெய்வம் சச்சின் கொடுத்த மட்டை குறித்த செய்தியைக் கூட ஈவு இரக்கமில்லாமல் இருட்டடிப்பு செய்யலாமா என்று கேட்கிற கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவர் தந்த மட்டையும், டைகர் படோடியின் ஜாகெட்டும் இங்கு அடிக்குறிப்பில்தான் வரும்.

சச்சின் டெண்டுகர் பெரிய மனசு பண்ணி நியூ ஜீலாந்து அணிக்கு எதிராக 133 பந்துகளில் 163 ரன்கள் குவித்து சாதனை படைத்த மட்டையை ராகுல் போஸிடம் ஏலம் விடக் கொடுத்திருக்கிறார். இந்த மட்டை சச்சின் அடித்த ஒரு நாள் கோப்பை சதங்களில் நான்காவது பெரிய சதத்தை அடித்துத் தந்திருக்கிறது. உலக அரங்கில் ஏலம் என்றால் ஆனந்தின் பதக்கத்துக்கு அதிகப்படியான வரும்படி இருக்கக் கூடும். இந்தியாவில் ஏலம் நடப்பதால் சச்சினின் மட்டைதான் அதிக விலைக்குப் போகும் என்று சொல்லத் தேவையில்லை.

Advertisements