உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது பகுதியில் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டுமே ஆனந்துக்கு சாதகமாக அமையவில்லை.
Mutual Fund விளம்பரங்களில் எல்லாம் “Past performance do not gaurantee future returns” என்றொரு disclaimer இருக்கும். அது Chess Opening-களுக்கும் பொருந்தும்.
ஏழாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை. மூன்று முறை Catalan Opening-ஐ விளையாடி அதில் இரண்டு வெற்றிகளையும் பெற்றிருந்தார் ஆனந்த். மூன்றாவது முறை ஆடிய போதும் ஆனதின் கை ஓங்கியிருந்தது என்ற போதும், டொபலோவ் சுலபமாகவே டிரா செய்தார். பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆனந்தின் Opening Strategy எளிதில் யூகிக்கக் கூடிய ஒன்றாய் மாறிவிட்டது. வெள்ளைக் காய்களுடன் ஆடும் போது Catalan, கருப்புக் காய்களுடன் ஆடும் போது Slav Defense என்பதே ஆனந்தின் அது. இதைத்தான் ஆடுவார் என்று டொபலோவுக்கு தெளிவானதும், அந்த ஓபனிங் தரும் சூழலுள், புதிய கோணங்களை உருவாக்குவதற்காக டொபலோவின் டீம், ஓய்வு நாளில் நன்கு உழைத்திருக்கின்றது.
ஏழாவது  ஆட்டத்தை ஆனந்த் Catalan-ல் தொடங்கிய சில நகர்த்தல்களிலேயே டொபலோவ் அதிரடியாய் ஆட ஆரம்பித்தார். முதலில் தனது யானையை ஆனந்தின் பிஷப்புக்காக பலி கொடுத்தார். அதன் பின், தனது குதிரையையும் வெட்டுக் கொடுத்தார். ஆனந்த் டொபலோவ் அளித்தவற்றை ஏற்றுக் கொண்டார் என்ற போதும், அதற்காக கணிசமான அளவு நேரத்தை செலவழிக்கும்படியாயிற்று.
முதல் இருபது நகர்த்தல்களை டொபலோவ் 3 நிமிடங்களுக்குள் நகர்த்திவிட்டார். ஆனந்துக்கோ ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது.
ஆட்ட விதிகளின் படி, முதல் நாற்பது நகர்த்தல்களை இரண்டு மணி நேரத்தில் வைக்க வேண்டும். இருவரும் கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் ஆடினால், நாற்பது நகர்த்தல்களுக்கு, இருவரின் நேரத்தையும் சேர்த்தால் நான்கு மணி நேரம் கிடைக்கும். ஆனால், ஒருவர் ஆட்டத்துக்கு வருவதற்கு முன்பே தயார் செய்து வைத்த நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் நகர்த்திக் கொண்டே போகும் போது, மற்றவருக்கு யோசிக்கும் நேரம் கணிசமாகக் குறையும். ஒருவரின் கிளாக்கில் மூன்று நிமிடங்களே செலவாகியிருக்கும் போது, மற்றவரின் கிளாக்கில் ஒரு மணி நேரத்துக்கு மேல் செலவாகியிருந்தால், அதுவே ஒருவித மன அழுத்தத்தைக் கொடுக்கும். நாம் வைக்கும் நகர்த்தல்கள் எல்லாம் எதிராளி ஏற்கெனவே ஆராய்ந்த நகர்த்தல்கள்தான் என்ற எண்ணம் நிச்சயம் free thinking-ஐ பாதிக்கும்.
இருபது நகர்த்தல்களுக்குப் பின், ஆனந்திடம் ஒரு குதிரை அதிகமாக இருந்தது. ஆனால், டொபலோவின் காய்கள் வலுவான இடத்தைப் பெற்றிருந்தன. குறிப்பாக, இரண்டு passed pawns, ஆனந்தின் அரையை அதிரடியாய் ஆக்கிரமித்து இருந்தன.
இந் நிலையில் ஆனந்த் தனது 21-ஆவது நகர்த்தலை ஒரு master stroke-ஆக விளையாடினார். சாதாரணமானவருக்குக் கூட, அந்த நிலையில் சிறந்த நகர்த்தல் எது என்று யூகிக்கக் கூடிய நகர்த்தலை ஆனந்த் தவிர்த்தார். அதை விட ஒரு மாற்று சுமாரான நகர்த்தலை விளையாடினார். இதனால், டொபலோவ் குழம்பினார். முதன் முறையாய். டொப்லாவ் தன் தயாரிப்பிலிருந்து வேறுபட்ட நகர்த்தலை சந்தித்தார். ஒரு piece down-ஆக இருக்கும் போது, ஒரு சிறு பிழை நேர்ந்தால் கூட நிச்சயம் தோல்விதான். அதனால், டொபலோவ் அதிக நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். ஆனந்துக்கோ, தன் கிளாக் ஓடாத நிலையில் சாவகாசமாக ஆட்ட நிலையை ஆராய அது ஏதுவாக அமைந்தது. Out of preparation-ல் இழுக்கப்பட்ட பின் டொபலோவ் வைத்த முதல் நகர்த்தலே சுமாரான ஒன்றாக அமைந்தது.
முப்பது நகர்த்தல்களுக்கு மேல், ஆனந்த் துல்லியமாய் நகர்த்தினால் நிச்சயம் தோற்க மாட்டார் என்ற நிலை ஏற்பட்டது. ஆனந்தும் துல்லியமாகவே விளையாடினார். டொபலோவ் ஒரு கட்டத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்து, டிராவுக்காக நகர்த்தல்களை repeat செய்ய ஆரம்பித்தார். ஆனந்தும் ஆமோதிப்பது போல போக்குக் காட்டி, time control-ஐ நிறைவேற்றுவதற்கு வழு செய்து கொண்டார். மூன்றாவது முறை ஆனந்த் அதே நகர்த்தலை மீண்டும் ஆடினால் டிரா என்ற நிலையில், ஆனந்த் தன் நகர்த்தலை வேறு படுத்தி, டொப்லோவை அதிர்ச்சியுறச் செய்தார்.
டொபலோவின் passed pawns தடை செய்யப்பட்ட நிலையில் ஆனந்தின் extra piece அவர் நிலையை வலுப்படுத்தின. இருப்பினும் வெற்றி பெற ஒரே ஒரு வழிதான் இருந்தது. பொறுமையாய் கணினியின் உதவி கொண்டு தேடினால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது சுலபம். அதையே on the board கண்டுபடிப்பது என்பது மிகவும் கடினம். அதனால், ஆனந்த் அந்த நகர்த்தலை காணாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒரு வழியாய் 58 நகர்த்தல்களுக்குப் பின் ஆட்டம்
டிராவில் முடிந்தது.
முதன் முறையாய் ஆனந்தை டொபலோவ் தன் சூழலுக்குள் இழுப்பதில் வெற்றி கண்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் ஆனந்தின் predictability. ஒரே ஓபனிங்கை நான்காவது முறை ஆடியதால் வந்த வினை. ஆட்டத்தின் முடிவில் ஆனந்த் தன் ஒரு புள்ளி லீடை தக்க வைத்த போதும் momentum டொபலோவ் பக்கம் இருப்பதாகவே தோன்றியது.
இப்படிப் பட்ட சூழலில், அடுத்த ஆட்டத்தில், ஆனந்துக்கு அதுவரை கைகொடுத்து வந்த Slav defense-ஐ மீண்டும் ஆடுவாரா?
ஆடினார். அதையே ஆடி மீண்டுமொரு முறை டிரா ஆனால், டொபலோவ் மிகவும் எரிச்சலடைவார் என்பதே ஆனந்தின் யூகமாக இருக்கும். இதைத்தான் ஆனந்த் ஆடுவார் என்று தெரிந்தும் டொபலோவால் வெல்ல முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் அது அவரை இன்னும் அழுத்தும் என்று ஆனந்த் நினைத்திருக்கலாம்.
கருப்பு காய்களுடனேயே ஆனந்தை திக்குமுக்காட வைத்த டொபலோவ், வெள்ளைக் காய்களுடன் எப்படி ஆடியிருப்பார் என்று சொல்லவா வேண்டும்?
இத்தனைக்கும், முதலில் novelty-ஐ விளையாடியது ஆனந்த்தான். ஆனால், டொபலோவ் அனத நகர்த்தலை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தன் திட்டத்தை செயல்படுத்தி வந்தார். முக்கியமாய், ஆனந்தின் novelty அவரை castling செய்யவிடாமல் தடுத்தது. இதனால், கருப்பின் காய்கள் develop ஆவதில் சிரமங்கள் ஏற்பட்டன. டொபலோவின் திட்டங்கள் அவருக்கு extra pawn-ஐக் கொடுத்தன. அவரது காய்களும் சிறந்த நிலைகளை அடைந்திருந்தன.
கூடுமானவரை ஆனந்த் சிறப்பாக ஆடினாலும், the best result that black could have got was a draw. ஒரு சிறு பிழை ஏற்பட்டால் கூட டொபலோவ் வென்றுவிடுவார். ஆனந்த் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் சிறப்பாகவே ஆடினார். ஆட்டம் opposite coloured bishop ending-ஐ நோக்கிப் பயணித்தது. பொதுவாக இது போன்ற நிலைகள் டிராவில்தான் முடியும். ஆனால், கருப்பின் அனைத்து நகர்த்தல்களும் துலியமாய் இருக்க வேண்டும். வெள்ளைக்கோ தோல்வி ஏற்படுமோ என்ற பயமேயில்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆட்டத்தை இழுக்கடித்துக் கொண்டே போகலாம்.
டொபலோவ் அதையே செய்தார். ஒரு கட்டத்தில் ஆனந்த் மிகவும் களைப்புற்றிருக்க வேண்டும். தனது 56-ஆவது நகர்த்தலில் ஆனந்த் தவறிழைத்தார். எவ்வலவோ கடினமான தடைகளை முறியடித்த பின், ஒரு சாதாரண நகர்த்தலில் கோட்டை விட்டதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது. அடுத்த நொடியிலேயே தன் தவறை உணர்ந்து, தன் தோல்வியையும் ஒப்புக் கொண்டார்.
டொபலோவ் இப்போது ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்.
ஆனந்தைப் பொறுத்த வரை, ஒரு நல்ல விஷயம் தற்காப்புக்கும், அதிரடிக்கும் இடையில் சிக்கித் தவிக்கத் தேவையில்லை. அதிரடியாகவே ஆடலாம். சர்வ நிச்சயமாய் இப்போது Catalan-ஐயும், Slav-ஐயும் தவிர்த்து வேறொரு ஓபனிங்கை ஆனந்த் ஆடியாக வேண்டும். இந்தத் தோல்விக்குப் பின் கூட, ஆனந்தின் ஆட்டத்தைப் பார்த்தோமெனில், அது மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது. டொபலோவின் அத்தனை திட்டங்களையும் on the board ஆனந்த் தகர்த்துள்ளார். Well. almost தகர்த்துள்ளார்:-). ஆனால், இந்தத் தோல்விக்குப் பின் ஆனந்தின் மனநிலை எப்படி இருக்கும்? ஆட்டத்தின் தொடக்கத்தில் தோல்விகள் ஏற்படின் திரும்பி வர வாய்ப்புகள் அதிகம். ஆட்டம் முடிவை அடையும் வேளையில் ஏற்படும் தோல்விகள் பெரும்பாலும் மரண அடியாகவே முடியும். இன்னும் நான்கு ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், It is only a matter of nerves.
டொபலோவ் பக்கம் இப்போது momentum இருக்கிறது என்ற போதும், அவரது பாணி எதிராளிக்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கும்.
அவற்றை ஆனந்த் எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பாரா?
வெற்றி இனி எதிராளியின் தவறுகள் மூலம் நிர்ணயிக்கப்படும்.
அடுத்த இரண்டு ஆட்டங்கள் இன்றும் நாளையும்.
பார்ப்போம் என்னவாகிறதென்று.
பிகு: ஆனந்தின் தோல்விக்குப் பின் கட்டுரை எழுதுவதென்பது மஹா மொக்கை படத்தை முப்பது முறை தொடர்ந்து பார்ப்பதற்கு நிகராக உள்ளது. அடுத்த இரு ஆட்டங்களிலும் ஆனந்துக்குத் தோல்வியே எனில், ஒரு final update மட்டுமே இந்தத் தொடரின் வரும் என்பதை முன் கூட்டியே தெரிவித்துவிடுகிறேன்.