இங்கு இணையத்தில் இந்தப் பதிவுகளைப் படிப்பவர்கள் யாரும் இன்றோ நேற்றோ நடந்த டென்னிஸ் போட்டியில் யார் வென்றார்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கு வரவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டுதான் நான் இங்கு பதிவுகளை எழுதுகிறேன். ஒரு குறிப்பிட்ட டென்னிஸ் ஆட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரிப்பைவிட, அந்த ஆட்டத்தைப் பார்த்தபின் என்ன சொல்லத் தோன்றுகிறது என்பதையே எழுத நினைக்கிறேன்.

எதற்கு இப்படி முழ நீளத்துக்குப் பீடிகை போடுகிறேன் என்றால், இப்போது நான் நேற்று மாலை பார்த்த ஒரு ஆட்டத்தைக் குறித்து அப்போது எடுத்து வைத்த குறிப்புகளைக் கொண்டு இந்தப் பதிவை எழுதப் போகிறேன்.

அந்த ஆட்டம் ஹெவிட்டும் நால்பண்டியனும் ஆடிய அற்புதமான ஆட்டம்- ஆட்ட முடிவில் நால்பண்டியன் 3-6 6-4 3-6 7-6 (7-1) 9-7 என்று வென்றார். பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆடுகிற ஹெவிட்டுக்கு இது மிகுந்த துக்கத்தைத் தந்திருக்கக் கூடிய தோல்வி. அவர் ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டம் இது.

டென்னிஸ் விளையாட்டு தொலைக்காட்சியில் பார்க்கும்போது எளிதாக இருக்கிறது. பெடரர் அடிக்கிற வாலிக்கும் தோனி அடிக்கிற ஸ்ட்ரைட் ட்ரைவுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு தெரிவதில்லை. உடலின் இயக்கம், பாலன்ஸ் என்று பார்த்தால் எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான்.

ஆனால் டென்னிஸ் களத்தின் அகலம் சரியாக எழுபத்து எட்டு அடிகள். கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆடும் வீரர்கள் போடும் சர்வீஸ் சர்வ சாதாரணமாக மணிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பட்டுத் தெறிக்கிறது. இந்தப் எரிபந்துகள் எழுபத்து எட்டு அடி தாண்டி உங்கள் மட்டைக்கு வரும் நேரத்தில் உங்களுக்கு அதைத் திருப்பி அடிக்கக் கிடைக்கும் அவகாசம் இரு முறை கண் சிமிட்டும் காலப் பொழுதே! சர்வீஸ் வேகத்தை விட ராலிகளில் பந்து பறக்கும் வேகம் சற்றே குறைவு- மணிக்கு எண்பதில் இருந்து நூற்று எண்பது கிலோ மீட்டர் வேகம்- இந்தப் பந்துகளைத் திருப்பி அடிக்க உங்களுக்கு இருக்கும் நேரம் ஒன்று முதல் மூன்றரை நொடி அளவே.

வரும் பந்தை டவுன் தி லைனில் அடிக்கலாமா, கிராஸ் கோர்டில் திருப்பலாமா என்று முடிவெடுக்க காலேஅரைக்கால் வினாடிதான் அவகாசம். கல்பனை ஸ்வரத்தில் இதுக்குப் பின் இதுதான் வரும் என்று ஊகித்து வயலின்காரர் வாசிப்பார். அப்படி வாசிக்கச் செய்வது அவர் உள்ளுணர்வு. 99% அது சரியாகவே அமையும். டென்னிஸில் இந்த Anticipation-தான் தேர்ந்த வீரருக்கும் சுமாரான வீரருக்கும் வித்தியாசத்தைக் காட்டும்.

டென்னிஸ் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பது குறித்து ஓரளவு கவனம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறேன். வேகத்தைவிட இன்னும் முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதை சொல்லத் தேவை இல்லை.

“You have no idea of speed when you watch a game on Television”, என்று ஹர்ஷா போக்ளே அடிக்கடிச் சொல்வார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் நான்காவது செட்டில் முதல் இரண்டு கேம்களிலும் ஹெவிட்டின் கை ஓங்கி இருந்தது. இரண்டாவது கேமில் நால்பண்டியன் பிரேக் ஆனார். ரொம்பவே தடுமாறினாலும் ஆறாவது கேமில் நால்பண்டியன் ஹெவிட்டை ப்ரேக் செய்தார். ஐந்தாவது கேமில் நால்பண்டியன் அடித்த இரண்டு பந்துகள் எல்லைக் கோட்டைத் தாண்டி ஓரிரு அங்குலங்கள் தாண்டி வெளியே விழுந்தன. இவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரியிருந்தார் நால்பண்டியன். இரண்டும் ஹெவிட்டுக்கே சாதகமாக இருந்தன. ஆனாலும் மனம் தளராமல் அடுத்த கேமில் ஹெவிட்டை அவர் ப்ரேக் செய்தார். அதன் பின் அசாத்திய ஷாட்கள் சிலவற்றை ஆடிய நால்பண்டியன் எட்டாவது கேமில் ஹெவிட்டை மறுபடியும் ப்ரேக் செய்தார். அதற்கு அடுத்த ஆட்டத்தில் ஹெவிட் நல்பண்டியனை ப்ரேக் செய்து டை பிரேக்கர் வரை காலத்தைத் தன் கையில் வைத்திருந்தார். டை பிரேக்கரில் நல்பண்டியன் ஏழு ஒன்று என்று ஜெயித்தார்.

ஹெவிட்டின் தோல்விக்கு ஒரே ஒரு காரணம்தான் – அவருக்கு நல்பண்டியனை பிரேக் செய்ய முப்பது வாய்ப்புகள் கிடைத்தன- அவற்றில் ஏழே எழு முறைதான் அவரால் தன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

அப்படியானால் ஹெவிட்டின் கை ஆட்டம் முழுதும் ஓங்கியிருந்தது, முக்கியமான கட்டங்களில் நல்பண்டியன் தன் ஆட்டத்தை உயர்த்தி வெற்றி பெற்றார் என்றுதானே பொருள் வருகிறது? உண்மைதான். இந்த லெவலில் ஆடுகிறவர்கள் ஏறத்தாழ ஒரே அளவு திறமை படைத்தவர்கள். முக்கியமான கணங்களில் எப்படி ஆடுகிறார்கள், என்ற மன வலு மற்றும் உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களே முடிவைத் தீர்மானிக்கின்றன.

—–

அபூர்வ ராகம் என்ற கதையில், லா.ச.ரா எழுதுகிறார், “சற்றே காற்றடித்தாலும் சப்திக்கும் முறுக்கேறிய தந்தி போல் அவள் ஒரு புது கலகலப்பாய் இருந்தாள். அவள் சிரிப்பில் கண்ணாடி உடையும் சத்தம் போல் ஒரு சிறு அலறல் ஒலித்தது,” என்று.

இது போன்ற சம அளவில் திறமை படைத்த உயர்நிலை ஆட்டக்காரர்கள் ஆடுவதை லாசராவின் வரிகள் வர்ணிக்கின்றன என்றுகூட சொல்லலாம். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் உள்ள தொலைவு ஓரிரு அங்குலங்கள், வேறுபாடு பந்து ராக்கெட்டில் பட்டுத் தெறிக்கும் கணப்போழுதின் ஓரிரு டிகிரி கோண திருப்பம்- அவ்வளவுதான். இதை கத்தி முனையில் உயர்வேகத்தில் பாடும் பாடல் என்று சொல்லலாம். எவ்வளவு நளினமான ஷாட்டானாலும் சரி, அதில் ஒரு சிறு அலறல் இருக்கிறது: இருவரையும் இணைத்து இறுக்கிக் கட்டிய திறன் உச்சமடைந்து பொறி தட்டும் ஒலி அது.

நான் நினைத்துக் கொள்கிறேன்: பந்து ராக்கெட்டில் படும் சத்தம், பந்தை எட்டிப் பிடிக்க விரைந்தோடும் பாதங்களின் சத்தம், இவற்றோடு கூட பந்தின் திசைகேற்பவும் சுழற்சிக்கேற்பவும் ஒலியின் பிட்ச்சை மாற்றிக் கேட்க முடிந்தால், நாம் தொலைக்காட்சியை இருட்டடித்துவிட்டு ஒரு சிம்போனியைக் கேட்கிற மாதிரி கண்ணை மூடி டென்னிஸ் ஆட்டத்தை ரசிக்கலாம் என்று.

இதில் யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என்பது தவிர்க்க முடியாத ஒரு இழப்பு போன்ற ஒன்றே- நிகழ்தகவு சாத்தியங்களால் விதிக்கப்பட்டது என்பதைத் தவிர இதில் பொருளேதும் இல்லை. யாரோ ஒருவர் ஜெயித்தாக வேண்டும்- அதற்காக யாரும் தோற்றதாக நினைப்பதற்கில்லை.

இன்றைக்குக் கூட பாருங்கள், பெடரர் கைல்ஸ் சைமனை 6-2, 6-3, 4-6, 4-6, 6-3 என்று ஜெயித்திருக்கிறார். இதில் பெடரர் ஜெயித்தார், சைமன் தோற்றார் என்பது இந்த விளையாட்டின் நியதிகளால் நிர்பந்தப்படுத்தப்பட்ட விதி. அவ்வளவுதான்.

டென்னிஸ் விளையாட்டு ஒரு இனிய சங்கீதம் மாதிரி- தொலைக்காட்சியை ஊமையாக்கி வைத்துப் பாருங்கள், புரியும். கிரிக்கெட் கண்களுக்கு விருந்து என்றால், டென்னிஸ் செவிக்கினிய கீதம். இங்கு களத்தில் நடப்பது மோதல் அல்ல, ஜுகல்பந்தி.

லாசரா அதே கதையில் வேறு இடத்தில் “அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல் கட்டத்தில் ராகம் தவறில் அதைவிட அவமானம் உண்டோ?” என்று கேட்டு விட்டு பதில் சொல்வார், “ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமா? ராகம் தன் இயல்பு மாறாதவரை எப்படியிருந்தாலும் சுஸ்வரந்தான்,” என்று.

டென்னிஸில் இந்த ஹெவிட்- நல்பண்டியன், பெடரர் சைமன் ஆட்டங்கள் அந்த மாதிரியான அபூர்வ ராகங்கள்.

-நாட்பாஸ்

Advertisements

மூன்றாம் சுற்றில் பெரும் தலைகளுக்கு எல்லாம் சுலபமாக வெற்றி.

ஃபெடரர், கடந்த ஆண்டுகள் போல சுலபமாய் நேர் செட்களில் கிளிமெண்டை வென்றார்.

டென்னிஸில் மிகச் கடினமான ஷாட்களுள் backhand down the line-ஐ சொல்லலாம். அதைக் கட்டுபடுத்தி சரியான இடத்தில் பந்தைச் செலுத்துவது சுலபமல்ல. ஃபெடரர் திருமத் திரும்ப அந்த ஷாட்டை அலட்சியமாகவும் துல்லியமாகவும் விளையாடியது, அவருடைய எதிராளிகளுக்கு ஓர் எச்சரிக்கை.

எட்டு கேம்கள் மட்டுமே இழந்து சுலபமாய் அடுத்த சுற்றுக்குள் நுழைகிறார் ஃபெடரர்.

விம்பிள்டனில் ஃபெடரரி விட John Isner-க்கே நேற்று ரசிகர்கள் அதிகம் தென்பட்டனராம். 11 மணி நேர போராட்டத்துக்குப் பின் Mahut-ஐ வென்று சாதனை படைத்த Isner-ஐ உடனே அடுத்த ரவுண்டில் ஆடச் சொன்னால் எப்படி முடியும்? Sore feet, Stiff neck, Tired shoulders….ஹ்ம்ம்ம் பாவம் 75 நிமிடங்களில் பொட்டலம் கட்டப்பட்டுவிட்டார்.  எதிர்பார்த்ததுதான்.

போன ரவுண்டில் Isner-ன் சர்வீஸை பிரேக் செய்ய Mahut பாடாய்ப் பட்டார். இந்த ரவுண்டிலோ முதல் கேமிலேயே பிரேக் செய்துவிட்டார் De Bakker.

அடுத்த Isner ஆண்டு Mahut உடன் மோத வேண்டும் என்றால் ஒரு வாரம் முனனாடியே ஆடிவிடுவது நலம்.

Djokovic, Hewitt ஆகியோருக்கும் சுலபமான வெற்றிகள். ஹெவிட் – மொன்ஃபிஸ் ஆட்டத்தில் ஒரு பாயிண்டை Play of the day-ல் காட்டினார்கள். எட்டவே முடியாத பேக்ஹேண்டை மொன்ஃபிஸ் திருப்பி அனுப்ப, புல் தலையில் சறுக்கிய படி full stretch-ல் பந்தை மீட்டு பாயிண்டை வென்ற ஹெவிட்டின் ஷாட் சூப்பர். விம்பிள்டனுக்கு முன்னால் நடந்த புல்தரை போட்டியில் ஃபெடரரை ஹெவிட் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2002-ல் விம்பிள்டன் சாம்பியனான இவர், அடுத்தடுத்த வருடங்களில் பெரும்பாலும் ஃபெடரரால் தோற்கடிக்கப்பட்டவர்.  இந்த ஆண்டும் அதே நிலை தொடருமா?

சென்ற வருட ரன்னர்-அப் ஆண்டி ராடிக் 4 செட்களில் தன் மூன்றாவது சுற்றை வென்றார். ராடிக்கின் பலம் அவர் சர்வீஸ். சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் அவரது முதல் சர்வ் சதவிகிதம் கணிசமாக இருந்து அவர் வெற்றிகளைச் சுலபமாக்குகின்றது. தொடர்ந்து சர்வீஸ் சமர்த்துப் பிள்ளையாய் இவர் சொன்ன படிக் கேட்டால் இந்த வருடமும் இவர் இறுதிச் சுற்று வரை முன்னேற முடியும்.

இன்று நடால், முர்ரே முதலானோரும் மூன்றாம் சுற்று ஆட்டம் நடக்கும்.

பெண்கள் பிரிவில் Comeback Belgians, Henin-ம் Clijsters-ம் நான்காம் சுற்றில் மோதுகின்றனர். இருவருமே முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள். இருவருமே ரிடையர் ஆகி, பிறகு ரிடையர்மெண்டுக்கு ரிடைரர்மெண்ட் கொடுத்திருப்பவர்கள்.  பழைய மாதிரி என்றால் இந்த இரு தலைகளும் அரை இறுதிப் போட்டிக்கு முன் மோதியிருக்காது. வெகு நாள் கழித்து ஆடுவதால், அவர்களுடைய ராங்கிங்/சீடிங்குக்கு ஏற்ப போடப்பட்ட டிராவின் படி நான்காம் சுற்றிலேயே மோதுகின்றனர். குழந்தை பெற்ற பின் ஆடிய முதல் கிராண்ட் ஸ்லாமான 2009 அமெரிக்க ஓபனை Clijsters வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஃபெடரர் ஆட்டத்தின் போது மட்டும் ஸ்டார் கிரிக்கெட்டில் விம்பிள்டன் ஒளிபரப்பினார்கள். தொடர்ந்து செய்தால் புண்ணியமாய் போகும்.