நேற்று விம்பிள்டன் தொடங்கியது.

வீட்டுக்கு வந்து டிவியைப் போட்டால் ரோஜர் ஃபெடரர் ஆடிக் கொண்டிருந்தார்.

ஆளுக்கு நாலு கேம்களை வென்றுள்ளதைப் பார்த்ததும் எதேச்சையாய் ஸெட் விவரங்களை நோக்கினேன். 2-0 என்று இருந்தது. சரி இன்னும் 10 நிமிடங்களில் ஆட்டம் க்ளோஸ் என்று நினைத்தேன். அப்புறம்தான் உரைத்தது, முதல் இரு ஸெட்களை ஜெயித்தவர் ஃபாயா (Falla) என்று.

ஏழாவது பட்டம் வென்று சாம்பிராஸ் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கையில் இது ஏதடா மதுரைக்கு வந்த சோதனை?

ஃபெடரர் trailing என்று புரிவதற்குள் ஒன்பதாவது கேமின் ஸ்கோர் 0-40 ஆகிவிட்டது. ஃபாயாவுக்கு மூன்று பிரேக் பாயிண்டுகள். முதல் ரவுண்டில் ஒரு qualifier இடம் straight set-க்ளில் defending champion-க்கு தோல்வியா?

ஃபெடரர் மிக மோசமாக ஆடியிருக்க வேண்டும். வழக்கமாய் கை கொடுக்கும் சர்வீஸ் மக்கர் செய்திருக வேண்டும். ஃபெடரரின் நெட் கேமும், பேக் ஹேண்டும் துல்லியத்தை இழந்திருக்கக் கூடும், என்றெல்லாம் நான் காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கையில், இரண்டு நல்ல serves.

BBC தளத்தில் மெக்கன்ரோவின் கமெண்ட்: “It is just astounding to believe that the defending champoion is a set away from losing in the first round. To be quite honest it is not the worst I have ever seen him play – this guy is outplaying him.”

It is 30-40. மூன்றாவது பாயிண்டில் ஃபாயாவின் கை ஓங்கியது. மரண அடி கொடுக்கப் போகிறார் என்ற நினைத்த போது நெட்டில் அடித்தார். ஃபெடரர் போன்ற சாம்பியன்களுக்கு ஊசி முனையளவு இடம் கொடுத்தாலும் போதுமே, ஃபாயா ஆடிய பிரமாதமான டிராப் ஷாட்டை எப்படியோ ஃபெடரர் எடுத்தார். மீண்டு வந்த பந்தை ஃபாயா லாப் ஷாட் மூலம் ஃபெடரரின் தலைக்கு மேல் திருப்பி அனுப்பியதும் ஆட்டம் முடிந்தது என்று நினைத்தேன். ஒரு கண நேரத்தில் நம்ப முடியாத உயரத்துக்கு எம்பி தனக்கு பின்னால் சென்றுவிட்ட பந்தை ஓவர்ஹெட் பேக்ஹேண்ட் மூலம் ஃபெடரர் அடித்து பாயிண்டை வென்று ஸ்தம்பிக்க வைத்தார்.

அடுத்த கேமில் பிரஷர் ஃபாயாவுக்கு. 30-30-யில் ஃபாயாவின் ஷாட் வெளியில் செல்ல ஃபெடரருக்கு செட் பாயிண்ட். ஃபெடரரின் Single Handed Backhand மின்னல் வேகத்தில் கிராஸ்கோர்டிலும், டவுன் த லைனிலும் பந்துகளை அனுப்பிக் கொண்டிருந்தது.  வலக்கை ஆட்டக்காரர் எனில் ஃபெடரரின் பேக்ஹேண்ட் கிராஸ்கோர்ட் எதிராளியின் பேக்ஹாண்ட் முனையில் விழுந்து பந்தைத் திருப்பி அனுப்ப முடியாதபடி செய்திருக்கும். ஃபாயாவோ இடது கை ஆட்டக்காரர். ஃபெடரரின் வேகத்தைவிட ஒரு படி அதிகம் போய் தனது forehand-ல் திருப்பி அனுப்பி ஃபெடரரை திக்குமுக்காட வைத்தார். அப்படி ஒரு பாயிண்ட் மூலம் ஆட்டத்தை deuce-க்கு கொண்டர்ந்தார்.

இவ்வளவு நேரம் ஆடிய நல்ல ஆட்டமெல்லாம் வீணாகும் வகையில் அடுத்த பாயிண்டில் நெட்டில் அடித்து இன்னொரு செட் பாயிண்டை ஃபெடரருக்கு அளித்தார். இம்முறை ஃபெடரர் கச்சிதமாய் விளையாடி செட்டை வென்றார்.

Momentum திரும்பிவிட்டது. இனி ஃபெடரருக்கு வெற்…Oh wait…whatz happening. ஒரே கேமில் 3 double fault!

நான்காவது செட்டின் முதல் கேமிலேயே ஃபாயா பிரேக் செய்து முன்னணி அடைந்தார். இனி தனது சர்வீஸ் கேம்களை hold செய்தால் மட்டுமே ஆட்டத்தை அவர் வென்றுவிட முடியும்.

ஃபெடரர் தனது அனுபவத்தை எல்லாம் திரட்டி ஃபாயாவை அழுத்தத்துக்குள்ளாக்கினார். ஃபாயாவும் விடுவதாக இல்லை.

ஒன்று நிச்சயம். ஃபெடரர் மோசமாக விளையாடியதால் ஆட்டத்தில் பின் தங்கவில்லை. ஃபெடரரின் எதிராளி அவரைவிட ஒரு படி மேலாக விளையாடியிருக்கிறார். மாறி மாறி இருவரும் வின்னர்களை பரிமாறிக் கொண்டனர். ஃபெடரரின் பேக்ஹாண்டும், டிராப் ஷாட்டும் கண்கொள்ளாக் காட்சிகள். அத்தனை பரிட்சைகளையும் எப்படியோ சமாளித்து செட் ஸ்கோரை 5-4 வரை கொண்டு வந்துவிட்டார் ஃபாயா. இன்னும் ஒரே ஒரு முறை தனது சர்வீஸ் கேமை வென்றால் போதும். ஃபாயாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட முடியும்.  குறைந்த பட்சம் Lori Mcneil, Peter Doohan போல Greatest Upsetters வரிசையில் ஃபாயா சேர்ந்துவிடக் கூடும்.

ஃபெடரருக்கு ஆட்டத்தில் பிழைக்க கடைசி வாய்ப்பு. பிரேக் செய்தே ஆக வேண்டும். 7-வது விம்பிள்டன் கானல் நீராகவிடும்.

முதல் இரண்டு பாயிண்டில் முடிவில் ஸ்கோர் 0-30. ஃபெடரர் வெல்வாரா?

அடுத்த பாயிண்டில் அற்புதமான சர்வீஸ். ஃபெடரர் பந்தைத் தொட முடிந்ததே அன்றி அதை ஃபாயாவிடம் அனுப்ப முடியவில்லை. 15-30.

அடுத்த பாயிண்டில் அற்புதமான டிராப் ஷாட். பெரிய பாயிண்டில் மிகப் பெரிய ரிஸ்க். It pays off! ஃபாயா தன் பலத்தை முழுவதுமாய் செலுத்து பந்தை அடைந்து எப்படியோ அடித்து விடுகிறார். ஃபெடரர் பந்து வருக் திக்கில்முன்னரே தயாராய் இருந்ததால், சுலபமாய் ஓபன் கோர்ட்டில் அடித்து வெல்கிறார். 15-40.

அடுத்த பாயிண்டில் இருவருமே தற்காத்து ஆடுகின்றனர். கடைசியில் ஃபெடரரின் crunching forehand  பாயிண்டை வெல்கிறது.  செட் 5-5-ல் சமனாகிறது.

அந்தக் கணம்தான் ஃபாயாவின் பிரேக்கிங் பாயிண்ட்.  வெற்றியின் விளிம்பில் இருந்து தவறியதும் சலனமில்லாமல் ஆடுவது மிகக் கடினம். தன் பக்கம் வரும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையில் அப்போது ஃபாயா இல்லை. அடுத்த கேமில் ஃபெடரர் பிரேக் செய்ய வாய்ப்பளித்தும் ஃபாயாவில் வெல்ல முடியவில்லை. செட்டில் முதல் முறையாக ஃபெடரர் முன்னணியில்.  செட் விவரம் 6-5.

ஃபாயா செட்டில் ஜீவிக்க சர்வ் செய்கிறார். கேம் 30-30-க்கு சென்று ஃபாயாவை சலனப்படுத்தினாலும், அவரின் பிரமாதமான ஃபோர்ஹேண்ட் அவருக்கு கேமை அளிக்கிறது. 6-6 டை பிரேக்.

ஃபெடரர் முதல் பாயிண்டை வெல்ல, ஃபாயா அடுத்த பாயிண்டை வெல்ல, ஃபாயா எப்படியாவது வென்று விட வேண்டும் அதீத முயற்சியில் ஈடுபட்டதால் ஃபெடரர் மினி பிரேக்கை பெறுகிறார். 2-1.

ஃபெடரர் சர்வீஸ் துல்லியமாய் விழ ஸ்கோர் 4-1 ஆகிறது. ஃபாயாவின் ஆட்டத்தில் எரிச்சல் தென்படுகிறது. மேலும் சில பிழைகள். 7-1 என்ற கணக்கில் ஃபெடரர் டைபிரேக்கை வெல்கிறார்.

மனதளவில் ஃபாயா தோல்வியை ஒப்புக் கொண்டிவிட்டார். முதல் நான்கு செட் would have made a wimbledon final proud. ஐந்தாவது செட் முற்றிலும் one-side affair.

Forehand Pass, Deep Volleys, Backhand down the line, delicate drop-shots என்று ஃபெடரர் தன் ஆல்ரவுண்ட் கேம் மூலம் ஆட்டத்தை தன் வசமாக்குகிறார்.

நெட் அருகே நிற்கும் ஃபாயாவைத் தாண்டி ஃபெடரரின் ஃபோரெஹேண்ட் மறைகிறது. 6-0.

தும்பை விட்டு ஒரு வழியாய் வாலைப்பிடித்துவிட்டார் ஃபெடரர்.

What a start to the wimbledon.

The champ is looking ominous.

ஃபாயா தொடர்ந்து இப்படி ஆடினால், விரைவில் டாப் 10-ல் இடம் பெறக் கூடும்.

ஃபெடரர் இந்த வாரத்தில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் இதே போல ஆடினார் என்றால், இரண்டாவது வாரத்தில் மிகுந்த களைப்புடன் களமிறங்குவார்.

As Henman says: you can’t win the tournament in the first week but you can certainly lose it.

:-):-):-)

விக்ருதி வ்ருட முதல் நாளில், அசுர சந்தி வேளையில், ஆண்டி முர்ரேயும் ஃபிலிப் கோல்ஷ்ரைபரும் மோன்டே கார்லோ களிமண் தளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணமான மாலைப் பொழுதில் இந்த வலைப்பூவின் முதல் பதிவை வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.

சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். பெரும்பாலான இந்தியர்களைப் போலவே எனக்கும் கிரிக்கெட்டின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது, “இதெல்லாம் கிரிக்கெட்டா?” என்று ஐபிஎல்-ஐப் பார்த்து அலுத்துக் கொண்டாலும்,  தொடர்ந்து பார்ப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. இருப்பினும் இந்தப் பதிவில் கிரிக்கெட்டைப் பற்றி எழுதக் கூடாது என்று எண்ணியுள்ளேன்.

ஒரு விளையாட்டை நுட்பமாக ரசிப்பது என்பது ஒரு வகை இசையை ஆழ்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவம்.  போரிஸ் பெக்கரும், ஸ்டிஃபான் எட்பர்கும் ஆடும் போது, ஆலத்தூர் சகோதரர்கள் மாறி மாறி ஸ்வரம் பாட்வது போல இருக்கும். ஃபெடரரின் backhand winner-கள் மதுரை மணியின் தார ஸ்தாயி கார்வைகள் போலத் துல்லியமானவை. சமீபத்தில், ஆர்ஸெனலுக்கு எதிரான ஆட்டத்தில், மெஸ்ஸி கோல்கீப்பரின் தலைக்கு மேல், அநாயசமாக பாலை உந்திவிட்ட போது, யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் வந்து விழுந்த மோராவைப் போலத் தோன்றியது.  சரி சொல்ல வந்து விஷயத்தை விட்டு எங்கெங்கோ செல்கிறேன்…

குறிப்பாக டென்னிஸ், கால்பந்து, ஃபார்முலா ஒன் ஆகியவற்றுக்கு இந்தியாவில் பெரும் following இருக்கிறது. (செஸ்ஸும், பேட்மிண்டனும் என்னைப் போன்ற ஒரு சிலரால் பார்க்கப்படும் விளையாட்டுகள்). நேற்று கூட ஸ்கிலாச்ச்சி, க்ளின்ஸ்மென், ஹாகி,  வால்டராமா, ரொமாரியோ என்று பல நாட்டு கால்பந்து ஆட்டக்காரர்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ் வலைப்பூ உலகில் இவற்றைப் பற்றி தொடர்ந்து யாரும் எழுதுவதாக (எனக்குத்) தெரியவில்லை (தெரிந்தால் தெரியப் படுத்தவும்). ஆர்வம் இருப்பின் இவ் வலைப்பூவைக் கூட்டுப் பதிப்பாகக் கூட கொண்டு வரலாம்.

இந்த வருடம் விளையாட்டு ரசிகர்களுக்கு வரப் பிரசாதம். வருடம் தவறாமல் வரும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபார்முலா ஒன் போட்டிகள், கால்பந்து சேம்பியன்ஸ் லீக் போன்றவற்றைத் தவிர கால்பந்து உலகக் கோப்பை, செஸ்ஸில் உலக சாம்பியம் போட்டி ஆகியவையும் நடைபெற உள்ளன.

பழைய விம்பிள்டன் நாயகர்கள், மரடோனாவின் மாயக் கால்கள், மெஸ்ஸியின் மந்திர ஜாலங்கள், ஷுமாக்கரின் சூறாவளிப் பயணங்கள் என்றெல்லாம் எழுத ஆசை. பார்ப்போம் நடக்கிறதா என்று.