anand1

உலக சாம்பியன் ஆனந்துக்கு இன்று 41 வயதாகிறது. இன்று காலை விழித்த போது, லைவ் ரேட்டிங்கிலும் நம்பர் 1-ஆக ஆனந்த் பெயர் இருந்திருக்கும். போன வருடம் அவர் பிறந்த நாளன்று சொல்வனத்தில் வெளியான என் கட்டுரையின் மீள் பதிவு.

விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்று (11, டிசம்பர்) 40 வயது! மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு 25-ஐ தாண்டி வயசாகி பல வருடங்கள் ஓடிவிட்டன என்றால் நம்பக் கஷ்டமாயிருப்பது போல, ஆனந்துக்கு வயசாகி விட்டதென்றாலும் நம்புவது கடினம். இதற்கு அர்த்தம், அவர்கள் உருவத்தில் இளைஞர்களாய் தெரிகிறார்கள் என்பதல்ல. என் சிறு வயது முதலே prodigy-ஆக இவர்களைப் பார்த்துப் பழகிவிட்டு,  திடீர் என்று இவர்களுக்கும் வயதாகிவிட்டது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கிறது. நண்பர் பிரகாஷ், சுஜாதா மறைந்த போது, “இவர் எல்லாம் செத்து போவார் என்று கனவில் கூட நினைக்கவில்லையே” என்று சொன்னது போலத்தான் இதுவும்.

பதினேழு வயதில் உலக ஜூனியர் சாம்பியன், பதினெட்டு வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமை என்று, 1980-களின் கடைசியிலிருந்து வெற்றிகளைக் குவிக்கத் துவங்கிய ஆனந்தால் சதுரங்கத்தின் பக்கம் உந்தப்பட்டோர் ஏராளம். சசிகிரண், ஹரிகிருஷ்ணா, ஹம்பி, நெகி என்று உலக அரங்கில் வெளுத்து வாங்கும் எண்ணற்ற இந்தியர்களின் ஆதர்ச புருஷர் ஆனந்த். எந்த அரங்கிலும் எதுவும் வாங்காத எனக்கும் ஆனந்த்தான் ஆதர்ச புருஷன். 1990-களில், இண்டர்நெட்டில் செஸ் ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க முடியாத காலங்களில் கூட பேப்பரில் வரும் ஆட்ட நகர்த்தல்களை மணிக்கணக்காய் வைத்துப் பார்த்த எண்ணற்ற பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன்.

1991-ல் காஸ்பரோவ், கார்போவ் இருவரும் (மற்றும் பலரும்) பங்கு பெற்ற போட்டியில் நிச்சயமான வெற்றியாளராக ஆனந்த் ஜெயித்ததிலிருந்து ஆனந்தின் ஒவ்வொரு ஆட்டத் தொடரையும் தவறாமல், புரிந்தும் புரியாமலும், தொடர்ந்து வருகிறேன். 18 வருடங்களில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்! அவர் ஜெயித்தபோது மகிழ்ந்து, தோற்றபோது துவண்ட கணங்கள் கணக்கிலடங்கா. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் துவளாமல் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் ஆனந்தின் வாழ்க்கையில் சதுரங்கத்தைத் தாண்டியும் படிப்பினைகள் உண்டு.

young-anand1எட்டு வயதிலிருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆனந்தின் முதல் செஸ் குரு அவரது தாய் சுசீலா. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறிய ஆனந்த், “எனக்கு ஆறு வயதான போது என் அம்மா சதுரங்கம் ஆடச் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அந்த ஆட்டம் நன்றாக வருவதை உணர்ந்த்தும், தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். கொஞ்ச நாளில், என் அப்பாவின் பணி நிமித்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சில வருடங்கள் தங்க நேர்ந்தது. அப்போதுதான் பிலிப்பைன்ஸில் ‘Karpov-Korchnoi’ சாம்பியன்ஷிப் ஆட்டம் நடந்து முடிந்திருந்தது. அந்த ஆட்டம் நடந்த இடத்தை நாங்கள் சென்று பார்த்தோம். பின்னாளில் அங்குதான் எனக்கு உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்று நான் அப்போது உணரவில்லை. செஸ் அலை அப்போது அங்கு வீசிக் கொண்டிருந்தது. டிவி-யில் மத்தியான நேரத்தில் சதுரங்கப் புதிர்களை ஒளிபரப்புவார்கள். என் அம்மா அந்தப் புதிர்களைக் குறித்து வைத்துக் கொள்வார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், நானும் அம்மாவும் சேர்ந்து விடை கண்டுபிடிப்போம். சரியான விடை சொல்பவருக்கு ஒரு புத்தகம் வழங்குவார்கள். நாங்கள் பல முறை அந்தப் பரிசை வென்றோம். ஒரு நாள், என்னை போட்டி நடத்துபவர்கள் அழைத்து, எங்களிடம் இருக்கும் புத்தகங்களில் உனக்கு வேண்டியவற்றை எல்லாம் எடுத்துக் கொள். ஆனால், இனி போட்டியில் கலந்து கொள்ளாதே. வேறு யாராவது ஜெயிக்கவும் வாய்ப்பு கொடு என்றனர்.”, என்று நினைவு கூர்கிறார்.

தனது பத்தாவது வயதில் இந்தியா திரும்பிய ஆனந்தின் சதுரங்கப் பசிக்கு ‘Tal Chess Club’ தீனி போட்டது. Blitz எனப்படும் வேகமாக விளையாடக்கூடிய ஆட்டங்கள் அங்கு நடை பெற்றன. ஐந்து நிமிடத்துக்குள் ஒரு ஆட்டம் முடிந்து விடும். அந்த கிளப்பின் வழக்கப்படி ஜெயித்தவர் தொடர்ந்து ஆடலாம். பத்து வயது சிறுவனிடம் ஒருவர் மாற்றி ஒருவர் தோல்வியைத் தழுவுவது வழக்கமானது. ஆனந்தின் ஆட்டத்தில் முக்கியமான அம்சம் அவரது வேகம். நொடிப் பொழுதில் காய்களை நகர்த்தும் சாமர்த்தியம், அவர் இள வயதில் ஆடிய Blitz ஆட்டங்கள் மூலமே கிடைத்ததென்று ஆனந்த் கூறியுள்ளார்.

1983 நடந்த தேசிய அளவில் நடந்த போட்டியில், சப்-ஜூனியர் பிரிவில் ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்று பட்டத்தை வென்றதன் பின், International Master பட்டம், தேசிய சாம்பியன் பட்டம் (மூன்று முறை) என்று அடுத்தடுத்து பல வெற்றிகள். Manuel Aaron, Max Euwe என்ற கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்ததே இந்தியாவின் அதிக பட்ச சாதனையாக இருந்த காலகட்டமது. “கிராண்ட்மாஸ்டர் ஆவதில் உள்ள கஷ்டங்கள் நமக்குத் தெரியும் சமயத்தில், நாம் ஒரு கிராண்ட்மாஸ்டரை எதிர்த்து விளையாடும் போது அவர்களை ஒரு பிரமிப்போடு பார்க்கிறோம். அதனாலேயே ஒரு மனத்தடை உருவாகிவிடுவதுண்டு”, என்கிறார் ஆனந்த். 1985-ல் Mestel என்ற கிராண்மாஸ்டரை வென்றபின், வரிசையாகப் பல கிராண்ட்மாஸ்டர்கள் ஆனந்தின் சூராவளி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்தனர். இந்தியா கிராண்ட்மாஸ்டரையே பார்த்திராத வேளையில் ஆனந்தின் வெற்றிகள் நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் ஒரு முறையும், லண்டனில் ஒரு முறையும், கடைசி ஆட்டத்தை வென்றால் தகுதிக்குத் தேவையான புள்ளிகள் கிடைக்கும் என்ற நிலையில், அரைப் புள்ளி வித்தியாசத்தில் கிராண்ட்மாஸ்டர் தகுதி கிடைக்காமல் போனது. 1987-ல் பிலிப்பைன்ஸில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றபோது, சர்வதேச சதுரங்க உலகம் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. ஸ்பாஸ்கி, கார்போவ், காஸ்பரோவ் போன்ற உலக சாம்பியன்கள் எல்லாம் ஒரு காலத்தில் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடம், தன் பதினெட்டாவது வயதில் பத்மஸ்ரீ விருதினை ஆனந்த் பெற்றார்.

உலக செஸ் என்றாலே ரஷ்யாதான் என்ற நிலை பத்து வருடங்களுக்கு முன் வரை கூட இருந்தது. கார்ல்ஸன், டொபலோவ், ஆனந்த் என்று ரஷ்யர் அல்லாதவர் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கும் இந்நாளில் கூட ரஷ்யா ஒரு வலுவான செஸ் நாடாகத்தான் திகழ்கிறது. இள வயதிலேயே திறமை வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி தரக்கூடிய நல்லதொரு அமைப்பு ரஷ்யாவில் இருந்தது. கார்போவ், காஸ்பரோவ், கிராம்னிக் போன்ற சாம்பியன்கள் எல்லாம் போட்வினிக் ஸ்கூலில் இருந்து வந்தவர்களே. இன்று 17 வயதுக்குள் கார்ல்சனைப் போன்றவர்கள் ரஷ்யாவிலிருந்து வராத போதும், சதுரங்க உலகைக் கோலாச்சவில்லையா என்று கேட்கலாம். அதற்கான பதில், இன்று இருக்கும் கணினியும், இணையமும் அன்றிருக்கவில்லை. சக்தி வாய்ந்த கம்ப்யூடர் எஞ்சின்கள், எண்ணற்ற ஆட்டங்களின் திரட்டல்கள் என்று விரல் சொடுக்கும் நேரத்தில் கணினி கொடுக்கும் விவரங்கள் குவிந்து கிடக்கும் இந்நாளில் ரஷ்யரல்லாத ஒருவர் முன்னணி ஆட்டக்காரராக இருப்பது ஆச்சரியம் இல்லை. தகவல்கள் அதிகம் கிடைக்காத சமயத்தில், ரஷ்யாவில் சாம்பியன்களிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வசமே சதுரங்கப் பட்டம் நிலைத்து நின்றது. ரஷ்யரல்லாத ஒரே சாம்பியன், அந்தக் காலத்தில் பாபி ஃபிஷர்தான். அவரும் கூட அமெரிக்கா போன்ற ஒரு பணக்கார நாட்டிலிருந்து வந்தவர்.

இந்தியாவில் பிறக்காமல் ரஷ்யாவில் பிறந்திருந்தால் ஆனந்த் என்னவாகியிருப்பார்? அதற்கு ஆனந்த் கூறிய பதில்:

“சோவியத் யூனியனில் வளர்ந்திருந்தால், நான் வேறு விதமாக வளர்ந்திருப்பேன். பயிற்சிக்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்தியனாக இருந்ததில் பல சாதகங்கள் இருந்தன. எட்டாவது சிறந்த ரஷ்யன் என்னைவிட நல்ல பயிற்சியைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால், அவனுக்குப் பெரிய போட்டிகளில் விளையாட அழைப்பு கிடைக்க அவன் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவாவது வர வேண்டியிருக்கும். அந்த அளவு பயிற்சி இல்லாத போதும், நான் ‘சிறந்த இந்தியன்’ என்பதாலேயே எனக்குப் பல போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை நான் சரி வரப் பயன்படுத்திக் கொண்டேன்.”

சில புத்தகங்களையும், Tal club-ல் விளயாடக் கிடைக்கும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் வளர்ந்த சிறுவன் உலக ஜூனியர் பட்டம் வெல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை, அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும் போது உணர முடியும். 1991-க்கு முற்பட்ட இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவத்தை பின்வருமாறு ஆனந்த் ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தேவையான அன்னியச் செலாவணியை வாங்க முதலில் டில்லிக்குச் சென்று விளையாட்டி அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்குப் பின், Civil aviation ministry-க்குச் சென்றால், அவர்கள் ஏர் இண்டியாவில் டிக்கெட் கொடுப்பார்கள். அந்த டிக்கெட் இருந்தால்தான் அன்னியச் செலாவணியைப் பெற முடியும். அதை வாங்க டில்லியில் ஒரு ஸ்டேட் பாங்க் கிளையும், ஒரு தாமஸ் குக் கிளையும் இருந்தன.  ஏர் இண்டியா டிக்கட் மாலை ஐந்து மணிக்குத்தான் கிடைக்கும். அதற்குள் SBI மூடிவிடும். அதனால் தாம்ஸ் குக் செல்வோம். அன்னியச் செலாவணியைப் பெறவே இரவு 9 மணி ஆகிவிடும். இரவு 11 மணிக்கு விமானம் ஏற வேண்டியிருக்கும். சென்னையிலிருந்து கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, டில்லி சென்று ஒப்புதல் பெற்றுதான் ஸ்ரீலங்கா செல்ல முடியும். சில சமயங்களில் அமைச்சகங்களிலிருந்து வர வேண்டிய ஒப்புதலில் நிகழ்ந்த தாமதங்களால், போட்டிகள் தொடங்கிய பின் கூடச் சென்று விளையாடியிருக்கிறேன்.”

1987 உலக ஜூனியர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே, டில்லியிலும் கோயம்பத்தூரிலும் வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் தகுதியையும் ஆனந்த் பெற்றார். அதன்பின் எண்ணற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்று, லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை முடிக்கும் போது உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்தார். உலக அளவில் ஆடும் போதும், பயங்கர வேகத்தில் காய்களை நகர்த்திய ஆனந்தை ‘Tiger from Madras’ என்றழைத்தனர். 1991-ல் அறிமுகமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற பெருமையும் ஆனந்தை வந்தடைந்தது.

அப்போது செஸ் உலகு, Fide, PCA என்ற இரு அமைப்புகளாக பிளவுண்டிருந்தது. ஒரு பக்கம் கார்போவ் சாம்பியன். மறு பக்கம் காஸ்பரோவ் சாம்பியன். இவர்களை எதிர்த்து விளையாட இரு அமைப்புகளும் தகுதிச் சுற்றுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தன. 1994-ல் FIDE cycle-ன் காலிறுதிப் போட்டியில் காம்ஸ்கியை எதிர்த்து விளையாடினார் ஆனந்த். இந்தியாவில் நடந்த அந்த ஆட்டத்தில், மளமளவென வெற்றிகளைக் குவித்தார். அவர் பெற்ற வெற்றிகளே அவருக்கு எமனாகின. காம்ஸ்கியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இருக்கும் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதுமான நிலையில், ரொம்பவே தற்காப்பாக ஆடியதால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. வெற்றியின் விளிம்பிலிருந்த ஆனந்த், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஆட்டத்தை இழந்தார்.

anand-kasparov1995-ல் PCA Cycle-லிலும் ஆனந்தும் காம்ஸ்கியும் பல வெற்றிகளைக் குவித்தனர். Candidates இறுதிப்போட்டி ஆனந்துக்கும் காம்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்டது. இம்முறை ஆனந்த் சுலபமாக வென்று, உலக சாம்பியன் பட்டத்துக்காக காஸ்பரோவுடன் மோதினார். நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நடை பெற்ற அந்தப் போட்டியில் முதல் எட்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஒன்பதாவது ஆட்டத்தை ஆனந்த் வென்ற போதும், அடுத்த ஐந்து ஆட்டங்களில் நான்கைத் தோற்றார். 10.5-7.5 என்ற வித்தியாசத்தில் காஸ்பரோவ் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனந்தின் சதுரங்க வாழ்வின் மிகப் பெரிய சறுக்கல் என்றே அதைக் கூற வேண்டும். “சில ஆட்டங்களில் நான் நன்றாக விளையாடவில்லை. ஆனால் இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடவில்லை”, என்று ஆனந்த் சொன்னதை, என்னைப் போன்ற தீவிர ஆனந்த் ரசிகர்கள்தான் நம்பியிருக்கக் கூடும்.  ஆனால், சொன்ன படியே செய்து காட்டி உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக 1996-ல் இடம் பிடித்தார்.

1997-ல் ஆனந்தின் ஏறுமுகம் மீண்டும் தொடங்கியது. பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிக் கொண்ட போதும், உலக சாம்பியன் என்ற பட்டம் பெற ஆனந்த் 2000 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 2000-ல், தெஹரானில் நடந்த இறுதிப் போட்டியில் 3.5-0.5 என்ற வித்தியாசத்தில் ஷிரோவை வென்றதன் மூலம் உலக சாம்பியன் ஆனார். ஒரு உலக சாம்பியன் கிடைத்துவிட்டதை எண்ணி இந்தியா மகிழ்ந்திருந்த போதிலும், ‘Knock-out’ முறையில் நடத்தப்பட்ட போட்டியை, ஏற்காத பலரும் இருந்தனர். ”128 பேரில் ஆரம்பித்து, கடைசியில் ஒருவர் ஜெயிப்பதை விட, இருவர் பல ஆட்டங்கள் விளையாடி, கடைசியில் ஒருவர் ஜெயிக்கும் முறையில்தான் அனைத்து பெயர் பெற்ற சாம்பியன்களும் பட்டத்தை வென்றிருக்கின்றனர். அப்படி ஜெயிக்காத ஒருவர் உண்மையான சாம்பியன் ஆக முடியாது. காலிஃப்மென், பொனோமரியோவ் போன்ற FIDE knock out சாம்பியன்கள் வரிசையில் ‘also ran’-ஆகத்தான் ஆனந்தைக் கொள்ள முடியும்.” என்ற வாதமும் அப்போது பரவி இருந்தது. குறிப்பாக, அப்போது நம்பர் 1-ஆக இருந்த காஸ்பரோவை எதிர்த்து விளையாடாமல் ஆனந்த் பெற்ற வெற்றியின் மூலம் அவரை சாம்பியனாகக் கொள்ள முடியாது என்ற வாதமும் வலுவாக இருந்தது. இவற்றை எல்லாம் ஆனந்த் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஜெயித்த போதும் தோற்ற போதும் சலனமில்லாமல் இருப்பதே ஆனந்தின் நெடுநாள் வெற்றிக்கு முக்கிய காரணம்.

2002-ல் FIDE champion பட்டத்தை இழந்த பிறகு, Classical Chess-ல்fide-champion ஆனந்துக்கு அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்பட்ட போதும், Rapid Chess-ல் முடிசூடா மன்னன் இவர்தான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் போல், சதுரங்கத்தில், Dortmund, Linares மற்றும் Corus Tournaments-ஐ கொள்ளலாம். இந்த மூன்று போட்டிகளையும் மூன்று முறையாவது வென்ற பெருமை ஆனந்தைச் சேரும். 64 என்ற சதுரங்கப் பத்திரிகை அளிக்கும் செஸ் ஆஸ்கர் என்ற விருது, உலக ஆட்டக்காரர்கள், செஸ் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் வழங்கப் படும் விருது. 1997-ல் தொடங்கி, இந்த விருதினை ஆறு முறை பெற்ற ரஷ்யரல்லாதவர் ஆனந்த் ஒருவர்தான். (காஸ்பரோவும் கார்போவும் ஆனந்தை விட அதிக முறை இந்த விருதினைப் பெற்றவர்கள்.)  2000-ல் பத்ம பூஷண் விருதும் அவருக்குக் கிடைத்தது.

ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும். இப்படிப்பட்ட விபரீதமான முறையில் விளையாடிய போதும், பல வெற்றிகளைக் குவித்ததோடன்றி, எதிர்த்து விளையாடுபவரின் complicated home preparation-ஐ கூட துல்லியமாக defend செய்யக் கூடிய ஆனந்தின் ஆற்றல் வியப்பானது!

கணினியின் வருகை சதுரங்க உலகையே கலக்கிப் போட்டது. ‘Deep Blue’ என்ற செஸ் கணினியிடம் காஸ்பரோவ் தோற்ற போது பெரும் அதிர்ச்சி அலை எழும்பியது. காலப்போக்கில் கணினியின் பயனை வீரர்கள் உணர ஆரம்பித்தனர். கணினி இல்லாத காலத்தில் தொடங்கினாலும், வலிமை வாய்ந்த கணினிகள் துணை கொண்டு ஆய்வுகள் புரியக் கூடிய காலத்திற்கு ஏற்ப, தன் ஆட்டத்தை ஆனந்த் மாற்றிக் கொண்டது தனிச் சிறப்பு. காஸ்பரோவ் அறிமுகம் செய்த ‘Advanced Chess’ என்ற வகை ஆட்டத்தில், போட்டியின் போதே கணினியின் உதவியை நாடலாம். இந்த வகை ஆட்டம் நடை பெறும் Leon Tournament-ஐ பல முறை வென்ற பெருமையும் ஆனந்தைச் சாரும்.

2007-ல் Linares போட்டியை வென்ற போது, உலக தர வரிசையில் ஆனந்த் முதல் இடத்தைப் பெற்றார். ELO Rating-ல் 2800 புள்ளிகளைத் தாண்டியுள்ள சொற்பமானவர்களில் ஆனந்தும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. அந்த வருடம் அவருக்கு ‘பத்ம விபூஷண்’ அளித்ததன் மூலம் ஜனாதிபதி பெருமை தேடிக் கொண்டார்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். அப்போது ஒவ்வொரு ஆட்டத்தையும் இரவு எவ்வளவு நேரமானாலும் இணையத்தின் வழி ரசித்த எண்ணற்ற சதுரங்க ரசிகர்களுள் நானும் ஒருவன்.

மீண்டும், இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக்  சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார்.  மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா?  என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆனந்த் - க்ராம்னிக் 'Final Handshake'ஆனந்த் – க்ராம்னிக் ‘Final Handshake’ 

இம்முறை யாராலும் அவரது பட்டத்தைக் குறை சொல்ல முடியவில்லை. “மேதை என்றால் மனப்பிறழ்வு  (eccentricity) இருக்க வேண்டும். நல்ல ஆட்டக்காரர் என்றால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டும்”, என்பவை செஸ் உலகின் நிதர்சன நியதிகள். இது வரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ளாத ஆனந்த், “Nice guys always come second”, என்பதைத் தன் விடாமுயற்சியால் பொய்யாக்கியவர்.

“Knock out format”, “Tournament Format”, “Match Format” ஆகிய மூன்றிலும் வெற்றி வாகை சூடிய ஒரே சாம்பியன் ஆனந்த்தான்.

நாற்பது வயதைத் தாண்டியும் விளையாடிக் கொண்டிருந்த இவான்சுக்கும் சில வாரங்கள் முன் தன் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தன்னை விட பாதி வயதானவர்கள் பலருடன் இன்னும் உற்சாகமாய்ப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆனந்த். தரவரிசையில் முதல் பத்து இடங்களில் மூத்தவர் ஆனந்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவுடன், தன் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மோதுகிறார்.

1996-ல் தொடங்கி இன்று வரை (2008-ல் சில மாதங்கள் தவிர) உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக இருக்கும் ஆனந்த் வாழும் போதே நானும் வாழ்ந்து, அவர் ஆட்டங்களை ரசிக்கக் கொடுத்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு.

Advertisements

ஆனந்த் காஸ்பரோவிடமும் கிராம்னிக்கிடமும் பெற்ற உதவியைப் பற்றி போன பதிவில் கூறியிருந்தேன்.

அதன் பின் பத்தரிக்கைகள் இந்த விஷயத்தை ஊதி ஊதி குளிர் காய்ந்தன.

நமது தமிழ்ப் பத்திரிக்கைகள் சும்மா இருக்குமா? லேட்டாக என்றாலும், லேட்டஸ்டாகப் கோதாவில் குதித்துள்ளன.

தினமலரில் நேற்று வந்த செய்தி சூப்பரப்பு!

என்னே ஒரு தலைப்பு, “காஸ்பரோவ் உதவியில் வென்ற ஆனந்த் – ஜெர்மனி வீரர் அதிரடி புகார்”

காஸ்பரோவிடம் பெற்ற உதவியைப் பற்றி சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி புகார் கொடுக்க முடியும்? என்று நாம் குழம்பி மேலும் படிக்கையில், அது புகாரல்ல கருத்து என்று தெரிய வருகிறது.

“கூட்டுச் சதி” என்ற சப் டைடிலைப் பார்த்தவுடன் தினமலரை டேனைலோவ் வாங்கிவிட்டாரோ என்று எண்ணினேன்.

பாக்கி நியூஸை நீங்களே படித்து சிரியுங்கள்

ஆனந்துக்கு இது நிச்சயம் தேவைதான்.

வாழ்க தமிழ் மீடியா!

இட்லிவடைக்காக எழுதிய பதிவு:

இது ரிப்போர்டாக இல்லாமல் நாவலாக இருந்தால், பத்து பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, சஸ்பன்ஸை வளர்த்து, நகம் கடிக்க வைத்து, சீட் நுனிக்கு இழுத்து இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கலாம்..

இப்போது அதற்கெல்லாம் வழியில்லை.

ஆனந்த் மீண்டும் (செஸ்ஸில்) ‘விஸ்வநாதன்’ ஆனார்.

ஒரு சின்ன recap:

************

போட்டியின் பெரும்பான்மையான ஆட்டங்களில் அதிரடியாய் ஆடுவதைத் தவிர்த்து, எதிராளியைத் தவறு செய்யத் தூண்டும் விதமாகவே ஆட முயன்றார் ஆனந்த். போட்டியின் முதல் பகுதியில் வெற்றியும் கண்டார். ஆனால், இரண்டாவது பகுதியில் டொபலோவ் விழித்துக் கொண்டு துல்லியமாக ஆடினார். பெரும்பாலான தவறுகளை ஆனந்தே செய்தார். இதனால் எட்டாவது ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததோடன்றி, ஒன்பதாவது ஆட்டத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி டிராவாகிப் போனது.

************

பதினோறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு கடைசி வெள்ளை.

பத்து ஆட்டங்களில் சமநிலையில் முடியாத ஆட்டங்கள் அனைத்திலுமே வெள்ளைக் காய்களுடன் விளையாடியவரே வென்றிருந்தார். கிட்டத்தட்ட ஆனந்தின் வெற்றிக்கு அதுதான் கடைசி வாய்ப்பு.

இந்த சூழலில் ஆனந்த் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வாரா?

ஓபனிங்கைப் பொறுத்த வரை, நான்கு ஆட்டங்களில் விளையாடிய Catalan-ஐ டொபலோவ் மழுங்கடித்து விட்டார். ஒரு ஆட்டத்தில் விளையாடிய Nimzo Indian-ல் ஆனந்தின் கை ஓங்கியிருந்த போதும், கிடைத்த ஓய்வு நாளில் டொபலோவின் டீம் அந்த ஓபனிங்கை அலசித் தீர்த்திருக்கும். சர்வ நிச்சயமாய் வேறொரு ஓபனிங்கைத்தான் ஆனந்த் விளையாடியாக வேண்டும்.

ஐந்து ஆட்டங்களை 1.d4 என்ற நகர்த்தலில் தொடங்கிய ஆனந்த், ஆறாவது வெள்ளை ஆட்டத்தை 1.c4 என்ற நகர்த்தலில் தொடங்கினார்.

இந்த முடிவு டொபலோவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று ஆனந்த் எதிர்பார்த்திருக்கக் கூடும். English Opening-ல் ஆனந்த் ஆட்டத்தைத் தொடங்கிய போதும், ஆட்டம் சமமாகவே தொடர்ந்தது. ஆனந்தின் திட்டமென்ன என்று அறியும் வரை, டொபலோவ் கோதாவில் குதிக்கத் தயாராகயில்லை. ஆனந்தும் டொபலோவ் பொறுமையிழக்கும் வரை விடுவதாக இல்லை. இருவரும் சளைக்காமல் middle game-ஐ ஆடி, ஆட்டம் நிச்சயம் டிராதான் என்ற நிலைக்கு இழுத்துச் சென்றனர்.

48 நகர்த்தல்களுக்குப் பின், இருவரிடமும் 3 pawns, ஒரு குதிரை, ஒரு யானை மட்டுமே மிஞ்சியிருந்தது. 49-வது நகர்த்தலில் ஆனந்த் அதிரடியாய் விளையாடினார். தனது queen-side pawn-ஐ King-side play-க்காக தியாகம் செய்தார்.

ஆட்டம் சமநிலையிலிருந்து விலகியது.

கரணம் தப்பினால் மரணம்.

யாருக்கு? இருவருக்கும்தான்.

ஆனந்த் முதன் முறையாய் வெற்றிக்காக ஆட ஆரம்பித்தார். டொபலோவும் வெற்றியைப் பெற முனைந்தார்.

கடைசி வெள்ளை ஆட்டத்தில் ஜெயிக்க மிகப் பெரிய ரிஸ்கை ஆனந்த் எடுத்த போதும், இருவரும் துல்லியமாக ஆடினர்.

ஆட்டத்தை லைவாகப் பார்த்த ஆனந்த் ரசிகர்களுக்கு இதயத்துடிப்பு காய்கறி விலை போல எகிறியிருக்கும்.

கடுமையான போராட்டத்துக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்த நாள் ஒய்வுக்குப் பின், கடைசி ஆட்டம். டொபலோவுக்கு வெள்ளை.

கருப்புக் காய்களுடன் கடைசி ஆட்டத்தை ஆடுவது ஆனந்துக்கு சிரமம்தான் என்ற போதும், டொபலோவுக்கு வேறு வகையில் நெருக்கடிகள்.

ஒரு வேளை ஜெயிக்கவில்லை என்றால், போட்டி ராபிட் ஆட்டங்களுக்குச் செல்லும். ஆனந்தான் Best ever rapid player. டொபலோவை பல முறை வென்றும் இருக்கிறார். 2006-ல் கிராம்னிக்குடனான போட்டியிலும் டொபலோவ் ராபிட் ஆட்டங்களில்தான் தோல்வியுற்றார்.

ஆனந்துக்கு கடைசி ஆட்டத்தை ஜெயித்துதான் ஆக வேண்டும் என்றில்லை.ஆனால், டொபலோவுக்கோ நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி.

போட்டியைத் தொடர்ந்து பார்த்த எனக்கே, ஓய்வு நாளில் மிகவும் சஞ்சலமாக இருந்தது. போட்டியாளர் இருவரும் எப்படிக் கழித்தனரோ! பாவம்.

ஆனந்தின் strategy,

1. டொபலோவின் preparation-ல் மாட்டிக் கொள்ளக் கூடாது.
2. டொபலோவை drawish ஆட்டத்துக்குள் இழுக்க வேண்டும்.
3.டொபலோவ் டிராவுக்கு இசைந்தால் சரி. டிரா கூடாது என்று நினைத்து அதீதமாய் அதிரடி ஆட்டத்தைப் பயன்படுத்தி, தோல்வியை அடைந்தால் நல்லதாய் போயிற்று!

இந்த strategy-க்கு ஏற்ற தொடக்கததை ஆனந்த் தயார் செய்ய வேண்டும்.

மூன்று முறை டிரா செய்த Slav defense-க்கே ஆனந்த் திரும்புவாரா? அல்லது சமீபத்தில் பயன்படுத்திய Grunfeld-ல் தொடங்குவாரா?

இரண்டிலும் இல்லை. காலம் காலமாய் black-ல் தொற்காமல் இருக்கும் சூழல்களை எண்ணற்ற ஆட்டங்களில் அளித்து வந்த Queen’s Gambit Declined-ஐ தேர்வு செய்தார்.

முதல் இருபது நகர்த்தல்கள் கடகடவென்று வைத்தார் ஆனந்த். அந் நிலையில் அவரது C5 pawn சற்று weak-ஆக இருப்பினும், அவரது வெள்ளை பிஷப்பும் யானையும் டொபலோவின் back rank-ஐத் தாக்கத் தயாராக இருந்தன.

சில நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்தின் பிஷப் a8-h1 diagonal-ஐ வியாபித்து இருந்தது. அதே diagonal-ல் இருந்த ராஜாவை, டொபலோவின் e-pawn-ம், f-pawn-ம் காத்தன.

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் டிராவை நோக்கிச் செல்வதை டொபலோவ் உணர்திருக்க வேண்டும். எதையாவது செய்து சமநிலையைக் குலைக்க விழைந்தார் டொபலோவ். தனது 31 & 32-வது நகர்த்தலில் முன் குறிப்பிட்ட e மற்றும் f pawn-கள் கொண்டு ஆனந்தின் pawn-கள் இரண்டை வீழ்த்தினார். இதனால் டொபலோவின் ராஜாவைத் தாக்குவது சுலபமானது.

இவ்விரு நகர்த்தல்களை விளையாடியதுமே ஆனந்தின் கை ஓங்கிவிட்டது. ஆட்டத்தை லைவாக விமர்சனம் செய்த வல்லுனர்களை டொபலோவின் blunder அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Tiger from Madras had smelt blood.

அடுத்தடுத்து அதிரடியாய் ஆடி டொபலோவை நெருக்கினார்.

டொபலோவ் தனது 40-வது நகர்த்தலில் செக் வைத்தார். ஆனந்த் தன் ராஜாவை நகர்த்தியதும், Susan Polgar என்ற commentator & GM, அந்த நகர்த்தலை blunder என்றார். அதனைப் படித்த போது ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது. .

9-வது ஆட்டத்திலும் ஆனந்த் 40-வது நகர்த்தலில்தான் தவறிழைத்து கை மேல் இருந்த வெற்றியைக் கோட்டை விட்டார்

மீண்டுமொருமுறை வெற்றியின் விளிம்பில் இருந்து வீழ்வாரா ஆனந்த்?

நல்ல காலம் அப்படியொன்றும் ஆகவில்லை. சூசன் போல்கர்தான் அவசரக் குடுக்கை!

“இந்த நகர்த்தலை ஆடியதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். அப்புறம்தான் நான் செய்தது blunder அல்ல என்று உரைத்தது”, என்று press conference-ல் கூறியிருக்கிறார் ஆனந்த்

டொபலோவுக்கு தன் தவறு உடனே புரிந்திருக்க வேண்டும். இருப்பினும் தொடர்ந்து ஆடினார். ஒரு கட்டத்தில் தன் ராணியை ஆனந்தின் யானை மற்றும் பிஷப்புக்காக தியாகம் செய்தார்.

ஆனந்த் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று உணர்ந்ததும், பொறுமையாக ஆட ஆரம்பித்தார். எண்ணற்ற வழிகளில் வெற்றியைப் பெறலாம் என்ற நிலையில்,உள்ளதில் பாதுகாப்பான வழியிலேயே ஆட்டத்தைத் தொடர்ந்தார். டொபலோவின் காய்களை வீழ்த்தாமல், zugzwang சூழல்களை உருவாக்கினார். (zugzwang என்பது நம் கையாலேயே நம் கண்ணைக் குத்திக் கொள்ளும் நிலை. எதை நகர்த்தினாலும் நிலைமை மோசமாகிவிடும்.)

ஒரு ராணியே பாடாய் அடுத்தும் நிலையில், இன்னொரு ராணியையும் ஆனந்த் passed pawn மூலம் பெற்றுவிடுவார் என்று உணர்ந்த போது, டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

பன்னிரெண்டு ஆட்டங்களில் முதன் முறையாய் கருப்புக்கு வெற்றி.

டொபலோவ் தோற்றாலும் நிச்சயம் பல இதயங்களை வென்றிருப்பார்.

போட்டியின் பல நேரங்களில் அவர் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் ஆனந்த் வென்றாலும், இருவரும் கடைசி நொடி வரை போராடினர்.

Kasparov-Karpov-க்குப் பின், மயிரிழையில் சாம்பியன் முடிவானது இந்தப் போட்டியில்தான். (கிராம்னிக்-டொபலோவ் ஆட்டங்கள் ராபிட் வரை சென்ற போதும், அங்கு ஏற்பட்ட சர்ச்சைகள் ஆட்ட முடிவை வெகுவாக பாதித்தன.)

Kasparov era-க்கும் carlsen era-க்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தை ஆனந்த் ஆக்கிரமித்தார் என்று நாளைய வரலாறு கூறுவதை ஆனந்த் இந்த வெற்றியின் மூலம் தவிர்த்துள்ளார்.

Post Kasparov era-வில் சிறந்த ஆட்டக்காரர்களான கிராம்னிக் மற்றும் டொபலோவை வீழ்த்தியதன் மூலம், ஆனந்த் தன் புகழை நிலைக்கச் செய்துள்ளார்..

இந்தப் போட்டியில் ஆனந்த் தோற்றிருந்தால், இன்னும் சில வருடங்கள் free-flowing chess விளையாடியிருப்பார். இப்போது, அடுத்த challenger-க்காகத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Preview மட்டும் எழுதி கடைசியில் ஒரு round up எழுதலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். இ.வ ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஏழு கட்டுரைகள்! இருபது நாட்களுக்குள்! என் போன்ற சோம்பேறியை இவ்வளவு எழுத வைத்ததற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சத்தை அடைவது கடினம். அதைவிடக் கடினம் உச்சத்தில் நீடிப்பது.

அதைச் சாதித்துக் காட்டிய ஆனந்துக்கு hats off!

லலிதா ராம்
பெங்களூர் (1.15 AM)

பி.கு: 12-வது ஆட்டத்தில் டிரா செய்தால், ஆனந்தை ராபிட் ஆட்டங்களில் சந்திக்க வேண்டுமே என்று டொபலோவ் பயப்படவில்லையாம். 13-ம் தேதி ராபிட் ஆட்டங்கள் ஆட நேரிடுமே என்று பயந்தாராம். 2006-ல் கிராம்னிக்குடனும் 13-ம் தேதி விளையாடிதான் டொபலோவ் தோற்றாராம். அதனால்தான் ஆட்டத்தை ராபிட் ஆட்டங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க முயன்றாராம். பாவம் டொபலோவ்! சென்டிமெண்டால் வடை போச்சு!

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

போட்டியின் ஒரு பாதி முடிந்துள்ள நிலையில் ஆனந்த் 3.5-2.5 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஐந்தாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் விளையாடினார். மூன்றாவது ஆட்டத்தைப் போலவே Slav Defence-யே ஐந்தாவது ஆட்டத்தின் Opening-ஆக தேர்வு செய்தார் ஆனந்த். மூன்றாவது ஆட்டத்தின் முடிவில், “ஒரு கட்டத்தில் வெள்ளைக் காய்கள் நல்ல நிலையில் இருந்தன, அதன் பின் சில நகர்த்தல்கள் துல்லியமாக அமையாததால், கருப்புக் காய்கள் சமநிலையை அடைந்துவிட்டன.”, என்றார். டொபலோவ் கிடைத்த ஓய்வு நாளில் விட்டதைப் பிடிக்கும் நகர்த்தலகளைக் கண்டுபிடித்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பு மேலெழுந்தது. ஆட்டத்தின் முதல் 14 நகர்த்தல்கள் மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களாகவே அமைந்தன.

15-ஆவது நகர்த்தலில் ஆனந்த் மூன்றாவது ஆட்டத்திலிருந்து மாறுபட்டார். இந்த மேட்சிலும் சரி, கிராம்னிக்குக்கு எதிராக விளையாடிய மேட்சிலும் சரி, பெரும்பான்மையான ஆட்டங்களில் புதிய நகர்த்தலை ஆனந்தே முதலில் நகர்த்தியுள்ளார். அதன் மூலம், எதிராளியின் Preparation-க்குள் தான் சிக்காமல், எதிராளியை தனக்குப் பரிச்சியமான சூழலுக்குள் இழுத்துவிடுகிறார். இதுவே இவரது வெற்றியின் முக்கிய காரணங்களுள் ஒன்று.

17-ஆவது நகர்த்தலின் போது அரங்கில் மின்வெட்டு (அங்குமா?). ஆட்டம் தொடருமா? இது டேனைலோவின் சதியா? இருட்டிலும் ஆனந்தின் clock ஓடிக் கொண்டிருக்குமா?, என்ற கேள்விகள் இணையம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஆர்பிடர் வந்து ஆனந்தின் clock-ஐ நிறுத்தி வைத்திருந்தார். மின்சாரம் மீண்டதும் ஆட்டம் தொடர்ந்தது. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் இதைப் பற்றி இரு ஆட்டக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. யாரேனும் ஒருவருக்கு வெற்றி என்ற நிலை ஏற்பட்டிருப்பின், இந்த மின்வெட்டை இவ்வளவு சுளுவாக ஏற்றுக் கொண்டிருப்பரா என்பது சந்தேகமே. ஆட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இந்தத் தடைக்கு மன்னிப்பு கோரி, இனிமேல் நடக்காதிருக்க ஆவன செய்துவிட்டதாகவும் உறுதியளித்துள்ளனர்.

மின்வெட்டின் போது, “Nice tactic. Would be even more effective against a computer”, என்றார் மிக் கிரீன்கார்ட்

ஆட்டத்தின் 22-வது நகர்த்தலில் தனது f-pawn-ஐ ஆனந்த் f6 என்ற கட்டத்துக்கு நகர்த்தினார். ஆட்டத்தை நேரிடையாக ஆராய்ந்த பல கிராண்ட்மாஸ்டர்கள் இந்த நகர்த்தலை வெகுவாக சிலாகித்தனர். இந்த நகர்த்தலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறினர். இந்த நகர்த்தல் மூலம் தனது பிஷப் நகர வழி செய்து கொண்டார் ஆனந்த் என்பது புரிந்தாலும், இது ஏன் அவ்வளவு கஷ்டமான நகர்த்தல் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. (ஓநாயா இருந்தாத்தான் அதோட நியாயம் புரியும் என்பது போல, கிராண்ட்மாஸ்டராக இருந்தால்தான் அந்தக் கஷ்டம் புரியும் என்று நினைக்கிறேன்.) அடுத்த சில நகர்த்தல்களிலேயே, டொபலோவ் ஏதேனும் தவறு செய்தாலன்றி ஆட்டத்தில் ஒருவர் வெற்றி பெறுவது நடக்காது, என்ற நிலை ஏற்பட்டது.

டொபலோவ் டிரா செய்ய மறுப்பதால், செஸ் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் End Game பாடங்களாக அமைகின்றன. 23-ஆவது ஆட்டத்திலேயே டிரா என்று தேர்ந்தவர்களுக்கு வேண்டுமானாலும் தெரியலாம். அதிக பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த ஆட்டங்கள் சிறந்த பாடங்கள். அதற்காகவே டொபலோவுக்கு நன்றி சொல்லலாம். டொபலோவின் பிடிவாதத்தால், ஆட்டம் 41-ஆவது நகர்த்தல் வரை தொடர்ந்து repetition மூலம் டிராவில் முடிந்தது. ஆனந்த், ஆட்டம் முழுவது எவ்வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், சுலபமாக டிராவைப் பெற்றார்.

அடுத்த நாள் நடந்த ஆறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள். அதற்கு முன் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் ஆடியிருந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தார். இரண்டிலுமே catalan opening-ஐ தேர்வு செய்திருந்தார்.

ஆனந்த் மூன்றாவது ஆட்டத்திலும் அதே ஓபனிங்கை தேர்வு செய்வாரா? உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவரை ஒரே விதமாய் விளையாடி மூன்று முறை வெல்ல முடியுமா? Catalan-ஐ விளையாட டொபலோவும் அனுமதிக்க வேண்டுமே? டொபலொவ் தோற்ற இரண்டு ஆட்டங்களைப் பார்க்கின், அவர் தோற்றது ஓபனிங்கால் அல்ல என்பது தெளிவாகும். Middle Game-ல் செய்த தவறால்தான் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியுற்றார். இருப்பினும், இரு முறை சூடு பட்ட பின்னும் அதே ஓபனிங்கை விளையாட டொபலோவ் அனுமதிப்பாரா?

இப்படிப் பல கேள்விகள்.

ஆட்டம் தொடங்கிய போது, மீண்டும் ஒரு முறை Catalan-ஏ அரங்கேறியது.

இந்த ஆட்டத்திலும் ஆனந்தே முதலில் Novelty-ஐ அறிமுகப்படுத்தினார். முதல் இருபது நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்திடம் இரு குதிரைகளும், டொபலோவிடம் இரு பிஷப்களும் இருந்தன. End Game-ல் இரண்டு பிஷப்களும் இருப்பதென்பது சாதகமான விஷயம் என்ற போதும், டொபலோவின் காய்கள் ஒருங்கிணைப்புடன் அமையவில்லை. 22-ஆவது நகர்த்தலில் தொடங்கி 34-ஆவது நகர்த்தல் வரை ஆனந்த் தனது குதிரைகளையே மீண்டும் மீண்டும் நகர்த்தி, டொபலோவின் காய்கள் போதிய அளவு coordination-ஐப் பெற முடியாத படி பார்த்துக் கொண்டார். இறுதியில் தன் குதிரையைக் கொடுத்து டொபலோவின் கருப்பு பிஷப்பை வென்றார். ஆனந்தின் doubled rooks (அதாவது ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் யானைகள்), c-file-ஐ வியாபித்திருந்த போதும், ஆனந்தின் King Pawn (அதாவது e-file-ல் இருக்கும் pawn), எப்போது வேண்டுமானால் வீழ்ந்து ஆனந்தின் ராஜாவை expose செய்யும் அபாயமும் இருந்து வந்தது. இரு ஆட்டக்காரர்களும் தங்கள் நிலையை பலப்படுத்த கடுமையாக முயன்றனர். இறுதியில், 58-ஆவது நகர்த்தலுக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது. இம் முறையும் டொபலோவ் ஆர்பிடரை அழைத்து வந்தார்.

“எதிராளியுடன் பேச மாட்டேன். எதுவாகினும் ஆர்பிடர் மூலமாகவே தெரியப்படுத்துவேன்”, என்று டொபலோவ் பிடிவாதமாக இருப்பது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது.

போட்டியில் முதல் முறையாக, டொபலோவ் சற்றே நிறைவுடன் ஓய்வு நாளுக்குள் செல்வார்.

போட்டி தொடங்கு முன்னரே ஆனந்தின் வயதும் இப்போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் என்று பலர் கருதினர். அதிலும், டொபலோவ் ஒவ்வொரு ஆட்டத்தையும் கடைசி வரை கொண்டு செல்கிறார். ஆனந்தின் வயது அவரை தளர்த்தக் கூடும் எனில், டொபலோவின் இந்த யுக்தி அவருக்கு சாதகமாய் அமையக் கூடும். முதல் ஆறு போட்டிகளில், ஆனந்த் தளராமல் ஈடுகொடுத்து வருகிறார். அடுத்த பாதியிலும் ஆனந்தின் துல்லியம் தொடருமா என்பதும் முக்கியமான கேள்வி.

ஏழாவது ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. அதில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள். அந்த ஆட்டத்தை அவர் ஜெயிப்பின், கிட்டத்தட்ட போட்டியை வென்ற மாதிரிதான். ஆனால், டொபலோவ் டிராவைப் பெற்றால் கூட அவருக்கு அது நல்ல முடிவுதான். ஏனெனில், எஞ்சியுள்ள ஐந்து ஆட்டங்களில் அவருக்கு மூன்று ஆட்டங்கள் வெள்ளைக் காய்களுடன் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றை ஜெயித்து சமன் செய்தால் கூட momentum அவர் பக்கம் திரும்பிவிடும். சில ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆனந்தால் விட்டதைத் திரும்பிப் பெற முடியுமா என்பது பெரும் கேள்விக் குறி.

ஆனந்தின் நிலை தர்ம சங்கடானது.

பொதுவாக போட்டியில் ஒரு புள்ளி லீட் என்பது almost non-existent lead-தான். எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போய்விடும்.

லீட் இருக்கிறதே என்று தற்காத்து ஆடவும் முடியாது, இருக்கின்ற லீடை விட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதால் அதிரடியாகவும் ஆட முடியாது. கிட்டத்தட்ட இரண்டுங்கெட்டான் நிலை.

டொபலோவுக்கு அதிரடியாய் ஆடுவதற்கான Motivation நிறையவே உள்ளது. ஆக்ரோஷமாய் களமிறங்குவார். இம் முறையில் வெற்றியும் பெறக் கூடும் என்ற போதும், அதீதமாய் தன் அதிரடியைக் காட்டி, தன்னையே மாய்த்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

இதெல்லாம் நமக்கே புரியும் போது, பழம் தின்று கொட்டைப் போட்ட ஆனந்துக்கா தெரியாமல் இருக்கும்? வெற்றிகள், தோல்விகள் இரண்டையுமே கணிசமான அளவு பார்த்தவர் ஆனந்த். இது போன்ற தர்ம சங்கடங்களை எப்படி அணுக வேண்டும் என்று அவரை விட வேறு யாருக்குத் தெரிந்திருக்க முடியும்?

Game 6 படங்கள்: http://photo.chessdom.com/thumbnails.php?album=248&page=5

இட்லிவடைக்காக எழுதிய பதிவு.

சென்ற வார இறுதியில் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. ஆட்டங்களின் முடிவில் சமநிலை ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் தலா ஒரு ஆட்டத்தை வெல்வர் என்று அதிகம் பேர் ஊகித்து இருக்க முடியாது.

பொதுவாக, இது போன்ற Match-களில் முதல் சில ஆட்டங்கள் மொக்கையாக இருக்கும். சென்ற முறை ஆனந்த கிராம்னிக்கை எதிர்த்து ஆடிய போது கூட, முதல் ஆட்டம் அப்படித்தான் அமைந்தது. ஆனால், டொபலோவ் அப்படி ஆட மாட்டார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனந்தும் டொபலோவுக்கு இணையாக, முதல் ஆட்டத்திலேயே பல sharp position நிறைந்த Grunfeld Opening-ஐ எடுத்து ஆடியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

To cut the long story short – முதல் ஆட்டம் டொபலோவுக்கு சுலபமான வெற்றியைத் தந்தது. ஆனந்த் டொபலோவ் போன்ற தேர்ந்த ஆட்டக்காரர்கள் ஆடும் போது, வெற்றி தோல்வி சகஜம்தான். எனினும், ஆனந்த் தோல்வியடைந்த விதம் அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கும்.
செஸ் ஆட்டக்காரர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை tactical players. அதிரடியாய் ஆடி, புதிய கோணங்களை உருவாக்கி, சில காய்களை பலி கொடுத்து, அதற்கு ஈடாய் சிலவற்றைப் பெற்று, ஒரு வழியாய் அமளி அடங்கும் போது, வலுவான நிலையில் இருக்கும் ஆட்டக்காரர்கள் இவர்கள். காஸ்பரோவ், ஃபிஷர், டொபலோவ் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

இரண்டாவது வகை Positional Players. இவர்கள் வலிக்காமல் அடிப்பதில் வல்லவர்கள். சிறிது சிறிதாய் முக்கிய கட்டங்களைப் பிடித்து, எதிராளி தனக்கு எந்த பாதகமும் இல்லை என்ற மாயை வலையைப் பின்னி, சிறிது சிறிதாய் ஆட்டத்தை தன் வசப்படுத்தும் ஆட்டக்காரர்கள் இவர்கள். கார்போவ், கிராம்னிக் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

ஆனந்தைப் பொறுத்த மட்டில் அவரை ‘universal player’ என்றே வகைப்படுத்துகின்றனர். அதாவது இரண்டு வகை ஆட்டத்தையும் சரளமாக ஆடக் கூடியவர் ஆனந்த். எதிராளிக்கேற்ப தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதே ஆனந்தின் பெரிய பலம். கிராம்னிக்குக்கு எதிராக ஆனந்த் பெற்ற மகத்தான வெற்றிக்கும் இதுவே முக்கிய காரணம். Positional Player, நன்கு ஆராயப்பட்ட நிலைகளில் காய்களை வைத்திருக்கவே விரும்புவார். Tactical Player-ஓ அதிகம் ஆராயப்பட்டிராத நிலைகளை நோக்கி ஆட்டத்தை நகர்த்துவார்.

Tactical Player-ஆன டொபலோவுடன் ஆடும் பொது, ஆனந்த் Positional Play-வையே விளையாடி, அவரை பொறுமையிழக்கச் செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆனந்தோ முதல் ஆட்டத்தில், டொபலோவுக்கு பிடித்த வகையில், complicated சூழலை உருவாக்கினார்.

இருவரும் முதல் இருபது நிமிடங்களுக்குள் 20-க்கும் மேற்பட்ட நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் நகர்த்தினர். ஆட்டத்தைக் காண்பவர்களுக்கு அங்கு ஒரு ரேபிட் செஸ் ஆட்டம் நடப்பதாகவே தோன்றியது. இரு ஆட்டக்காரர்களும், ஆர அமர கணினியின் துணை கொண்டு வீட்டில் அமர்ந்து உருவாக்கிய திட்டங்களையே செயல்படுத்தி வந்தனர். முதல் 22 நகர்த்தல்களுக்குப் பின்னும் ஆட்டம் சமநிலையிலேயே இருந்தது. 23-ஆவது நகர்த்தலுக்கு ஆனந்த் நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். பிஷப்பை நகர்த்துவதே சரியான தற்காப்பாக இருக்கும் பட்சத்தில், ஆனந்த் சம்பந்தமே இல்லாமல் தனது ராஜாவை நகர்த்தினார். அந்த ஒரு நகர்த்தலே ஆனந்தின் தோல்விக்கு வழி வகுத்தது.

ஆட்டத்தை கவனித்த வல்லுனர்கள், “ஆனந்த் 23-வது நகர்த்தலின், ஆட்டத்தின் எந்த காயை நகர்த்தினால் நல்லது என்று யோசிக்கவில்லை. தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த home preparation-ஐ ஆட முயன்றார். அவர் தயார் செய்திருந்த நகர்த்தல் மறந்து விட்டதால், ஞாபகப்படுத்துக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டார். கடைசியில் ராஜாவை நகர்த்துவதுதான் தான் திட்டமிட்ட நகர்த்தல் என்று நினைத்து அதை ஆடவும் செய்தார். Most probably he mixed up on the order of the moves he memorized.”, என்கின்றனர்.

ஆனந்துக்கு இது மிகப் பெரிய சறுக்கல். எதிராளியின் பலத்துக்குள் தானே போய் சிக்கிக் கொண்டு, எண்ணி வந்த ஆட்டத்தை மறக்கவும் செய்வார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

டொபலோவ் முன்பு சொன்னது போல, ஆனந்தின் வயது அவருக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதா?

40 மணி நேர கார் பயணமும், சாம்பியன் பட்டத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் கொடுக்கும் மன அழுத்தமும் ஆனந்தின் ஆட்டத்தை பாதிக்கின்றனவா?

12 ஆட்டங்கள் மட்டுமே நடக்கும் தொடரில், ஒவ்வொரு தோல்வியும் costly-ஆக அமையக் கூடும். ”இந்த அடியில் இருந்து ஆனந்த் மீள்வாரா?”

போன்ற கேள்விகள் செஸ் உலகெங்கும் எதிரொலித்தன.

“இதே போல ஆடினால், ஆனந்த் மிகப் பெரிய புள்ளி வித்தியாசத்தில் தோற்க நேரிடும்”, என்றெல்லாம் டொபலோவ் ரசிகர்கள் கொக்கரித்தனர். என் போன்ற தீவிர ஆனந்த் ரசிகனுக்குக் கூட, இவர்கள் சொல்வது உண்மையாகிவிடுமோ என்ற எண்ணம் எழாமலில்லை.

அடுத்த நாள் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் களமிறங்கினார். ஆனந்த் வெற்றியைக் குறி வைத்து ஆடுவாரா? அல்லது டிராவுக்காக ஆடுவாரா? டிராவுக்கு ஆடப் போய், over defensive-ஆகி அதுவே அவர் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டால்? இரண்டாவது ஆட்டத்திலும் தோற்றால், கிட்டத்தட்ட இந்தத் தொடரையே தோற்றார்ப் போல்தான். ஆனந்துக்கு, இரண்டாவது ஆட்டம் மிக மிக முக்கியமான ஒன்று.

இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் தனது positional player அவதாரத்தில் களமிறங்கினார். டொபலோவுக்கு எதிராக கிராம்னிக் வெற்றிகரமாக உபயோகித்த Catalan Opening-ல் ஆட்டத்தைத் துவக்கினார். 14 நகர்த்தல்கள் முடிந்த போது, ஆனந்தின் காய்கள் நல்ல நிலைகளை அடைந்திருந்த போதும், அவர் ஒரு pawn-ஐ பலி கொடுத்திருந்தார். டொபலோவின் காய்களின் அமைப்பு முழுவதுமாய் வளர்ந்திராத நிலையில், ராணியை exchange செய்ய ஆனந்த் அழைப்பு விடுத்தார். ஆட்டத்தை live-ஆக அலசிய பலருக்கு இது ஒரு புதிரான நகர்த்தலாக இருந்தது. ஆட்டம் நடக்கும் போது ஆனந்தை ஷார்ட் போன்ற கிராண்ட்மாஸ்டர்கள் திட்டித் தீர்த்தாலும், ஆட்டம் முடிந்த பின், “This was a weaker move. But, this may be pure genius from a psychological point of view.”, என்றனர்.

ராணியுடன் ஆடியிருந்தால், டொபலோவ் புதியதொரு நிலைக்கு ஆட்ட்த்தை எடுத்துச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம். இருவரிடமும் ராணி இல்லாத போது, பொறுமையாய் முக்கிய கட்டங்களைப் பிடித்தல் அவசியமாகிறது.

டொபலோவை நன்குணர்ந்த ஆனந்த், அவர் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து சமநிலையைத் தகர்க்கும் நகர்த்தலைச் செய்யக் கூடும் என்று ஊகித்திருப்பார். அது, இருபத்தி ஐந்தாவது நகர்த்தலில் நடந்தது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தான் டிரா offer-கள் கொடுக்கப் போவதில்லை என்று டொபலோவ் அறிவித்திருந்தார். அதனால், எப்படியும் வெற்றியை நோக்கியே ஆட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். டொபலோவின் 25-ஆவது நகர்த்தலுக்குப் பின், ஆனந்தின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கியது. முன்பு பலி கொடுத்த pawn-ஐ மீட்டெடுத்தோடு, இன்னொரு pawn-ஐயும் ஆனந்த் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் ஆனந்தின் இரண்டு passed pawn-கள் டொபலோவை துன்புறுத்த ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், 43-ஆவது நகர்த்தலில் டொபலோவ் தோல்வையை ஒப்புக் கொண்டார்.

ஆனந்த் வெற்றி பெற எப்படி ஆட வெண்டும் என்று வல்லுனர்கள் ஊகித்தனரோ அதே வகையில் ஆனந்தின் ஆட்டம் அமைந்தது.

சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்தல், 40 மணி நேர கார் பயணம், எதிரியின் நாட்டில் வாசம், முந்தைய நாள் தோல்வி என்று ஆனந்தின் மனநிலையைக் கெடுக்கும் எண்ணற்ற காரணங்களுக்கிடையில், துல்லியமாய் ஆடிய ஆனந்தின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்குப் பெறும் நிறைவை அளித்திருக்கும்.

மூன்றாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுகிறார். சென்ற முறை ஆடியதை விட, ஆக்ரோஷமாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனந்த் மீண்டும் டொபலோவ் வழிக்கே சென்று அவரை வெல்ல முயல்வாரா அல்லது பொறுமையாய் டொபலோவை தவறு செய்யத் தூண்டுவாரா?

நாளை தெரிந்துவிடும்.

40 மணி நேர மாரத்தான் கார் பயணத்துக்குப் பின் ஆனந்த் பல்கேரியா அடைந்தார். முதல் ஆட்டம், ஒரு நாள் தாமதத்துக்குப் பின், இன்று தொடங்குகிறது.

ஆனந்தைப் பற்றி இங்கு ஏற்கெனவே விவரமாய் எழுதியுள்ளேன். (ஏனோ இன்று சொல்வனம் வேலை செய்யவில்லை. சீக்கிரம் செய்யும் என்று நம்புகிறேன்) அதனால் டொபலோவைப் பற்றி பார்க்கலாம். 1975-ல் பிறந்தவரான டொபலோவ், World Under-14 & World Under-16 பட்டங்களைப் பெற்று செஸ் உலகில் முன்னேறத் துவங்கி, 1992-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப் பெற்றார்.  செஸ்ஸைப் பொறுத்த மட்டில், இந்தியாவுக்கு ஆனந்தைப் போல பல்கேரியாவுக்கு டொபலோவ்.  உலக விளையாட்டு அரங்கில் பல்கேரியாவின் பெயரை முன்னிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், டொபலோவ் அந் நாட்டின் அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண ரசிகர் வரை அனைவராலும் விரும்பப்படுபவர். (நல்ல காலம் பல்கேரியாவில் ஐபிஎல் நுழையவில்லை).

டொபலோவ் தன் ஆட்டத்தை பெரும்பாலும் அதிரடியாகவே ஆடுவார். நிறைய நேரம் எடுத்துக் கொண்டு உள்ளதில் மிகச் சிறந்த நகர்த்தல்களைக் கண்டுபிடித்து ஆட்டத்தை தொடர்வதை விட, யாரும் பார்த்திராத ஆட்ட நிலைகளை உருவாக்கி, எதிராளியை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர். இந்த வகை ஆட்டத்தில் ரிஸ்க் ரொம்ப அதிகம். டொபலோவின் மிகப் பெரிய பலம் அவரது துணிச்சல்தான். தன் துணிச்சலான நகர்த்தல்களினால் பல முறைத தோல்வியைச் சந்தித்திருப்பினும் டொபலோவ் தன் aggressive approach-ஐ மாற்றிக் கொள்ளாமல் ஆடி வருகிறார். முதலில் தற்காத்துக் கொள்வோம். எதிராளி தவறு செய்தால், அதை வைத்து ஆட்டத்தை ஜெயிப்போம் என்ற வகை ஆட்டக்காரர்களுக்கிடையில் டொபலோவ் தனித்துத் தெரிகிறார்.  இவர் தோல்வியை அடைந்த பல ஆட்டங்கள் கூட ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன.  (உதாரணமாக இந்த ஆட்டத்தைக் கூறலாம்.)

பல மறக்க முடியாத ஆட்டங்களை டொபலோவ் ஆடி வந்த போதும், 1995-லிருந்து 2005-வரை உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேறாமலே இருந்து வந்தது. (இப்போது கூட இவர் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் சாம்பியன் அல்ல.)  காஸ்பரோவ் ஏற்படுத்திய பிளவால், ஒரே சமயத்தில் செஸ் உலகில் இரு சாம்பியன்கள் இருந்து வந்தனர். 2005-ல் FIDE என்ற அமைப்பின் போட்டியின் மூலம் டொபலோவ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆனந்த் முதலான எட்டு முன்னணி வீரர்கள் ஆடிய டயுள்-ரவுண்ட் ராபின்  டோர்னமெண்டில் முதல் ஏழு ஆட்டங்களில் ஆறு வெற்றியைப் பெற்று, சுலபமாக பட்டத்தை வென்றார் டொபலோவ்.

2005-ல் காஸ்பரோவ் ஓய்வு பெற்றார். அதன் பின், செஸ் உலகம் இணைவதற்கான சாத்தியகூறுகள் உருவாகின. 2006-ல் பொதுவாக ஒரு சாம்பியனைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு, அப்போதைய சாம்பியன்களான கிராம்னிக்கும், டொபலோவும் எலிஸ்டாவில் பன்னிரெண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவது என்று முடிவானது. (போட்டியின் முடிவிலும் முழுமையான unification நடக்கவில்லை. அது 2008-ல் ஆனந்த் கிராம்னிக்கை வென்றவுடன்தான் நடந்துள்ளது).

இந்தக் கட்டத்த்தில், டொபலோவின் மேனேஜர் சில்வியோ டேனைலோவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

இவர் செஸ் இண்டெர்னேஷனல் மாஸ்டராக இருந்திருக்கிறார் என்பதை விட டொபலோவின் மேனேஜராக இருப்பவர் என்றே அனைவராலும் அறியப்படுபவர். இன்று, டொபலோவை ‘bad boy of chess’ என்று பலர் அழைக்க முக்கிய காரணமாய் விளங்குபவர். அநேகமாய், டோபலோவ் சார்பில் நேர்காணல்கள் இவர்தான் வழங்குவார். பேசும் போது எடுத்தே கவிழ்த்தேன் என்று எதையாவது சொல்வார். எதிராளியைத் தூண்டிவிடுவதில் இவருக்கு நிகரே இல்லை எனலாம். 90-களில் டொபலோவின் கோச்சாக இருந்து பின்பு அவரது மேனேஜர் ஆனவர். இந்தப் பின்னணியின் டொபலோவ் கிராம்னிக்கின் ஆட்டங்களைக் காண்போம்.

முதல் நான்கு ஆட்டங்கள் முடிந்த போது கிராம்னிக் 3-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். அப்போது டேனைலோவ் ஒரு அறிக்கை கொடுத்தார்:

“ஒவ்வொரு நகர்த்தலுக்குப் பின்னும் கிராம்னிக் தன் இருக்கையை விட்டு எழுந்து செல்கிறார். சராசரியாக ஒரு ஆட்டத்தில் 50 முறையாவது relaxation room-க்குப் போகிறார். 25 முறையாவது toilet-க்கு போகிறார். வீடியோ சர்வைலன்ஸ் இல்லாத toilet(!!!)-க்கு அடிக்கடி கிராம்னிக் செல்வது சந்தேகத்தை அளிக்கிறது.  இந்த முறைகேட்டை உடனடியாக சீர் செய்யாவிட்டால் டொபலோவ் தொடர்ந்து விளையாடமாட்டார்.”

இந்த அறிக்கையைத் தொடர்ந்து நடந்த பரிசீலனையில், டேனைலோவ் கூறிய குற்றச்சாட்டுகள் மிகப் படுத்தப்பட்டவை என்று தெரிய வந்தாலும், இரு ஆட்டக்காரர்களுக்கு தனித் தனி கழிப்பறைகள் கொடுப்பதை நிறுத்தி, இருவருக்கும் ஒரே கழிப்பறையைக் கொடுப்பது என்று முடிவானது. இதற்கு கிராம்னிக் மறுப்பு தெரிவித்து, ஐந்தாவது ஆட்டத்தை forfeit செய்தார். அதன் பின் இரு பக்கமும் மாறி மாறி அவதூற்றினை வாரி இறைத்துக் கொண்டனர். கடைசியாக, “ஆட்டம் தொடரும். பழைய படியே கிராம்னிக் பிரத்யேக கழிப்பறைக்குச் செல்லலாம். ஆனால், அவர் forfeit செய்த ஆட்டம் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் டொபலோவ் வென்றதாகக் கருதப்படும்”, என்று முடிவானது.  இது நியாயமா? டேனைலோவ் இருக்கும் இடத்தில் எல்லாமே நியாயம்தான்.

அதன் பின் நடந்த ஆட்டங்களில் இரு முறை டொபலோவ் வென்று முன்னணியில் இருந்தார். பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அபாரமாக விளையாடி சமநிலைப் படுத்தினார். 12 ஆட்டங்களும் முடிந்த போது இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனால், ராபிட் ஆட்டங்கள் தொடங்கின. மூன்று ராபிட் ஆட்டங்கள் டிராவில் முடிந்த பின், கடைசி ஆட்டத்தில் கிராம்னிக் வென்று உலக சாம்பியன் ஆனார். அதன் பின், கிராம்னிக்கின் toilet-ன் கூரையில் கேபிள்களைக் கண்டுபிடித்ததாகவும், கிராம்னிக்கின் நகர்த்தல்கள் பல Fritz9 என்ற கம்ப்யூட்டர் பேகேஜ் சிபாரிசு செய்த நகர்த்தல்களாகவே இருப்பதாகவும் டேனைலோவ் புதிய சர்ச்சையைக் கிளப்பினார்.  “I believe that his (Kramnik’s) play is fair, and my decision to continue the match proves it” என்று முதலில் சொன்னவரும் டொபலோவ்தான்.  தோல்விக்குப் பின் பேச்சை மாற்றி அவதூறை இறைக்க ஆரம்பித்தார்.  இதற்குப் பின்னும் “severe reprimand” உடன் டோபலோவ் தப்பித்துக் கொண்டார்.

2006-ல் கிராம்னிக் சாம்பியன் ஆனாலும், 2005-ஐப் போலவே 2007-லும் டோர்னமெண்ட் நடத்துவதாக FIDE அறிவித்து இருந்தது. கிராம்னிக் உலக சாம்பியன் என்றால், 2007 ஆட்டங்களுக்கு அர்த்தமே இல்லை. இந்தக் குழப்பம் தீர கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார், டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராவின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையிலான போட்டி 2008-ல் ஜெர்மனியில் நடை பெற்றது. கூடவே இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

2008-ல் FIDE ஒரு Super GM டோர்னமெண்ட் நடக்கும், அதில் வெற்றி பெறுபவர் டொபலோவுடன் மோதுவார். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் ஆனந்த்-கிராம்னிக் போட்டியில் வென்று சாம்பியன் ஆனவருக்கு சேலஞ்சராக ஆடுவார் என்றது ஒப்பந்தம்.

இதெல்லாம், எந்த ஊர் நியாயம் என்றெல்லாம் கேட்கப்படாது. அதான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே டேனைலோவ் ஜெகஜால கில்லாடி என்று. சென்ற வருடம் டொபலோவும் காம்ஸ்கியும் ஆடிய போட்டியில் டொபலோவ் வென்று ஆனந்துக்கு சாலஞ்சரானார்.

உலக சாம்பியன் போட்டி எங்கு எப்பொது நடத்தலாம் அதற்கு தேவையான பொருளையும் prize money-ம் யார் தருவார்கள்? எவ்வளவு தருவார்கள்? என்றெல்லாம் குழப்பங்கள் தொடர்ந்தன. கடைசியில் பல்கேரியாவின் பிரதமரின் ஆதரவுடன், அந் நாட்டின் தலைநகரில் ஆட்டம் நடக்கும் என்று முடிவானது.  போட்டி ஆரம்பிக்கும் சில வாரங்கள் முன், “ஆனந்த் போட்டியை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்தியாவில் ஸ்பான்ஸர்கள் பிடித்திருக்கலாம். என்னையே எல்லா வேலையும் செய்ய வைத்துவிட்டார்.”, என்று டொபலோவ் புலம்ப ஆரம்பித்துவிட்டார். தன் சொந்த நாட்டில் ஆடுவது மிக மிகக் கஷ்டமான விஷயம். இருப்பினும் வேறு வழியேயில்லாமல் ஆடுவதாக அவர் தெரிவித்த போது சிரிப்புதான் வந்தது.

இன்று தொடங்கவிருக்கும் ஆட்டம், நேற்றே தொடங்கி இருக்க வேண்டியது. ஐஸ்லேண்ட் எரிமலையால் தாமதமாகத் துவங்குகிறது. இருவருக்கும் நடக்கவிருக்கும் போட்டியில் ஜெயிக்கப் போவது  யார்?

இந்தக் கேள்வி, பல முன்னணி செஸ் வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவரின் பதில், “இருவரும் மிக மிக நல்ல ஆட்டக்காரர்கள். ஆனந்தின் நிதானம் அவரது பலம். வெறும் செஸ் பலத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், ஆனந்த் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆட்டங்கள் பல்கேரியாவில் நடக்கின்றன.  அது சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை அடக்குவதற்கு சமானம். ஒரு சிங்கம் மட்டுமென்றால் பரவாயில்லை. இரண்டு சிங்கங்கள் இருக்கின்றன. உலக சாம்பியன் ஆவதற்கு இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காத என்ற நிலையில் இரு சிங்கங்களும் பசியுடன் இருக்கின்றன. ஜெயிப்பதற்காக அவை எதை வேண்டுமானாலும் செய்யும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது டொபலோவுக்கு வாய்ப்புகள் அதிகம்”.

பல்கேரியாவில் ஆடுவதற்கு ஆனந்த் ஒப்புக் கொண்டதை, “A Terrible Blunder”, என்றே பலர் கருதுகின்றனர். (உதாரணம்: இதையும், இதையும் பார்க்கலாம்) பல்கேரியத் தரப்பு தன் சத்தாய்ப்பை சென்ற வருடமே தொடங்கிவிட்டது.  “ஆனந்த் செஸ் ஆடாமல், உலக சாம்பியன் ஆன மிதப்பில் இருக்கிறார்.  அப்படி அவர் ஆடினாலும், இன்று இருக்கும் இளம் வீரர்களுடன் அவரால் தாக்கு பிடிக்க முடியாது. சாம்பியன்ஷிப்பை தக்க வைக்க ஆனந்த் வேண்டுமென்றே போட்டி நடைபெறாமல் இருக்கும்படி அலைக்கழிப்பார். இதன் மூலம் நாங்கள் nervous ஆகிவிடுவோம் என்பதே ஆனந்தின் எண்ணம்”, என்றெல்லாம் போன வருடமே டேனைலோவ் உளறிக் கொட்டினார்.

ஆனந்தை விட ஐந்து வயது இளையவராதலால், இது போன்ற தொடர்களுக்குத் தேவைப்படும் Stamina தன்னிடம் அதிகம் இருப்பதாக டொபலோவ் சில வாரங்களுக்கு முன் கூறியுள்ளார்.  இதெல்லாம் ‘part of mind games’. டொபலோவ் ஆட்டத்தின் போது டிரா offer செய்ய மாட்டார். ஆனந்த் பேசினாலோ, draw offer செய்தாலோ அதை சட்டை செய்ய மாட்டார், என்று கூறியுள்ளார். பழம் தின்று கொட்டை போட்டவரான ஆனந்துக்கு இவை எல்லாம் சலனத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

முதல் சில ஆட்டங்களுக்குள் ஆனந்த் முன்னிலையை அடைந்தால் டொபலோவ் குழுவினர் என்ன செய்வார்கள் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இதுவரை ஆனந்தும் டொபலோவும் ஆடிய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும் போது, ஆனந்த் டொபலோவை விட நிறைய வெற்றியைப் பெற்றுள்ளார். கூர்ந்து நோக்கின், அதில் நிறைய வெற்றிகள் வேகமாக ஆடும் ரேபிட் ஆட்டங்களின் வந்துள்ளன. கிளாசிகல் ஆட்டங்களில் டொபலோவ் ஆனந்தை விட ஒரு ஆட்டம் அதிகமாக ஜெயித்துள்ளார். இதிலிருந்து, இரு ஆட்டக்காரர்களும் சம வலிமை கொண்டவர்களே என்பது தெளிவாகிறது.

எது எப்படியோ செஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது. என்னைப் பொறுத்த மட்டில் ஆனந்த் ஜெயித்தால் ரொம்ப சந்தோஷம் தோற்றால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏனெனில், சென்ற முறை பட்டத்தை வென்றவுடன், ஆனந்தின் கவனமெல்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே இருந்து வருகிறது. இதனால், இடைப்பட்ட காலங்களின் அவர் ஆடிய ஆட்டங்களின் தற்காப்பாக ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வருட போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும், ஆனந்த் தன் பெயரை என்றும் நிலைக்கும்படி செய்துவிட்டார். இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்த ஆட முடியும் என்று டெஹ்ரியாத நிலையில், இந்த உலக சாம்பியன் என்ற பாரத்தைச் சுமக்காமல் இருந்தால், பழைய Tiger from Madras மீண்டும் ரசிகர்கள் அடிக்கடி பார்க்க முடியும்.

இந்த அட்டத்தைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி: 1920-களுக்குப் பின் இரு ரஷ்யரல்லாதவர் ஆடும் முதல் சாம்பியன்ஷிப் போட்டி இதுதான்.

விக்ருதி வ்ருட முதல் நாளில், அசுர சந்தி வேளையில், ஆண்டி முர்ரேயும் ஃபிலிப் கோல்ஷ்ரைபரும் மோன்டே கார்லோ களிமண் தளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணமான மாலைப் பொழுதில் இந்த வலைப்பூவின் முதல் பதிவை வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.

சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். பெரும்பாலான இந்தியர்களைப் போலவே எனக்கும் கிரிக்கெட்டின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது, “இதெல்லாம் கிரிக்கெட்டா?” என்று ஐபிஎல்-ஐப் பார்த்து அலுத்துக் கொண்டாலும்,  தொடர்ந்து பார்ப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. இருப்பினும் இந்தப் பதிவில் கிரிக்கெட்டைப் பற்றி எழுதக் கூடாது என்று எண்ணியுள்ளேன்.

ஒரு விளையாட்டை நுட்பமாக ரசிப்பது என்பது ஒரு வகை இசையை ஆழ்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவம்.  போரிஸ் பெக்கரும், ஸ்டிஃபான் எட்பர்கும் ஆடும் போது, ஆலத்தூர் சகோதரர்கள் மாறி மாறி ஸ்வரம் பாட்வது போல இருக்கும். ஃபெடரரின் backhand winner-கள் மதுரை மணியின் தார ஸ்தாயி கார்வைகள் போலத் துல்லியமானவை. சமீபத்தில், ஆர்ஸெனலுக்கு எதிரான ஆட்டத்தில், மெஸ்ஸி கோல்கீப்பரின் தலைக்கு மேல், அநாயசமாக பாலை உந்திவிட்ட போது, யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் வந்து விழுந்த மோராவைப் போலத் தோன்றியது.  சரி சொல்ல வந்து விஷயத்தை விட்டு எங்கெங்கோ செல்கிறேன்…

குறிப்பாக டென்னிஸ், கால்பந்து, ஃபார்முலா ஒன் ஆகியவற்றுக்கு இந்தியாவில் பெரும் following இருக்கிறது. (செஸ்ஸும், பேட்மிண்டனும் என்னைப் போன்ற ஒரு சிலரால் பார்க்கப்படும் விளையாட்டுகள்). நேற்று கூட ஸ்கிலாச்ச்சி, க்ளின்ஸ்மென், ஹாகி,  வால்டராமா, ரொமாரியோ என்று பல நாட்டு கால்பந்து ஆட்டக்காரர்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ் வலைப்பூ உலகில் இவற்றைப் பற்றி தொடர்ந்து யாரும் எழுதுவதாக (எனக்குத்) தெரியவில்லை (தெரிந்தால் தெரியப் படுத்தவும்). ஆர்வம் இருப்பின் இவ் வலைப்பூவைக் கூட்டுப் பதிப்பாகக் கூட கொண்டு வரலாம்.

இந்த வருடம் விளையாட்டு ரசிகர்களுக்கு வரப் பிரசாதம். வருடம் தவறாமல் வரும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபார்முலா ஒன் போட்டிகள், கால்பந்து சேம்பியன்ஸ் லீக் போன்றவற்றைத் தவிர கால்பந்து உலகக் கோப்பை, செஸ்ஸில் உலக சாம்பியம் போட்டி ஆகியவையும் நடைபெற உள்ளன.

பழைய விம்பிள்டன் நாயகர்கள், மரடோனாவின் மாயக் கால்கள், மெஸ்ஸியின் மந்திர ஜாலங்கள், ஷுமாக்கரின் சூறாவளிப் பயணங்கள் என்றெல்லாம் எழுத ஆசை. பார்ப்போம் நடக்கிறதா என்று.