சில பல வேலைகளால் நிகழ்ந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்.

காலிறுதி ஆட்டங்களில் முதலாவதாக பிரேசிலும் நெதர்லாந்தும் மோதின.

வழக்கமான பிரேசில் அணியை விட, இந்த வருட அணியின் மீது அதிக நம்பிக்கை இருந்தது. ஜிகினா வேலைகள், தனி நபர் ஆட்டம் பொன்றவற்றை கோச் டுங்கா அரவே நீக்கி இருந்தார். கிட்டத்தட்ட தேர்ந்த ஐரோப்பிய கிளப் அணியைப் போலத்தால் பிரேசில் செயல்பட்டு வந்தது. இதனால், இரண்டாம் சுற்று வரையிலான ஆட்டங்களில் பிரேசிலின் தற்காப்பு கன கச்சிதமாய் அமைந்திருந்தது.

நெதர்லாந்தோ ரோபனின் வருகைக்குப் பின்னர்தான் சோபிக்கத் தொடங்கியிருந்தது. இருப்பினும், ரொபினோ, காகா, ஃபாபியானோ, நில்மார் போன்றோரின் தாக்குதல்களை டச்சு தற்காப்பு தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்களுக்கு பிரேசில் நிதானமின்றி காணப்பட்டது. நிறைய ஃபௌல்கள். அதன் பின் சுதாதரித்துக் கொண்ட பிரேசில் அட்டாக், அடுத்த ஐந்து நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தது. அதில் முதலாவது ஆஃப்ஸைட் கோல். பத்தாவது நிமிடத்தில் ஃபெலிபே மெல்லோவின் பாஸ் ஆளில்லாத ரோபினோவை அடைந்த பின் கோலானது. மைதானத்தின் மத்தியில் இருந்து நேராக கோல் நோக்கி செலுத்திய பந்தை வேடிக்கை பார்த்தது டச்சு தற்காப்பு. எங்கே இங்கிலாந்து வீரர்களிடம் பாடம் பயின்றனரோ டச்சு வீரர்கள் என்று சந்தேகிக்க வைத்தது.

ரொபினோவின் இன்னொரு அற்புதமான முயற்சி பந்தை பெனல்டி ஏரியாவுக்குள் எடுத்துச் செல்ல, அதை வாங்கி கண நேரத்தில் Back heel-ஆல் ஃபாபியானோ காகாவிடம் அனுப்ப, Full Blooded curling drive ஒன்றை கோல் நோக்கி செலுத்தினார் காகா. கோல்கீப்பரின் அற்புதமான முயற்சி காகாவின் முதல் கோலை மறுத்துவிட்டது.

முதல் அரையின் முடிவில் ஒரு கோல் முன்னிலையில்தான் பிரேசில் இருந்தது என்றாலும், நெதெர்லாந்து ஆட்டத்தில் மீண்டு வர முடியும் என்று அப்போது தோன்றவில்லை.

பிரேசிலின் அட்டாக் நன்றாக இருந்தாலும் டிஃபென்ஸில் முந்தைய ஆட்டத்தில் காணக் கிடைத்த ஸ்திரம் அன்று இல்லை. இன்னொரு வினோதமான விஷயம்: ரோபனிடம் பந்து செல்லும் போதெல்லாம் அவர் வீழ்த்தப்பட்டார். அவர் நல்ல ஆட்டக்காரர்தான். அதற்காக அவரிடம் பந்து சென்றாலே கோலாகிவிடுமா என்ன? பிரேசிலின் இந்தப் பதற்றம் தேவையற்றது. வேறொரு ரெஃப்ரீயாக இருந்திருந்தால் முதல் அரையிலேயே சில பிரேசில் வீரர்கள் வெளியேற்றபட்டிருப்பர். சமயத்தில் ஸ்டேல் மேட்டில் மாட்டிய ராஜா போல ரோபனைச் சுற்றி நீலச் சட்டைகள் மயம். தன் அரையினுள் எண்ணற்ற முறை ரோபனை வீழ்த்தி ஃப்ரீ கிக்குகளை வாரி வழங்கியது பிரேசில்.

ரொபினோ போன்றோர் அமைதியாக ஆடாமல், சிங்கம் பட சூர்யா கணக்கில் எக்ஸ்ப்ரெஷன்களைக் காட்டி ரெஃப்ரீயையும் எதிர் அணியினரையும் முறைத்துக் கொண்டே இருந்தது அனாவசியம்.

53-வது நிமிடத்தில் நெதர்லாந்துக்குக் கிடைத்த ஃப்ரீ கிக்கில் சம்பிரதாயமாக ஸ்னைட்டரும், ரோபனும் காலால் பந்தைத் தொட்டதும், ஸ்னைடர் பந்தை கோல் நோக்கி கிராஸ் செய்தார். பந்தின் திக்கில் எதிர்பட்டவரெல்லாம் பிரேசில் வீரர்களே. பந்தை கோல்கீப்பர் ஜூலியோ சீஸார் கையால் குத்தி வெளியனுப்ப எம்புகையில், அவருக்கு மேலாய் ஃபெலிப்பே மெலோ எம்பினார். பந்து அவர் எம்பலுக்கு சற்று அதிக உயரத்தில் சென்று, அவர் தலையை வருடிக் கொடுத்தபடி கோல்கீப்பரை ஏய்த்து, கோலுக்குள் பிரவேசித்தது.

முதலில் own goal-ஆகக் கருதப்பட்ட இந்த கோல், பின்னால் ஸ்னைடரின் கோலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் சமமானதும் பிரேசில் நிதானத்தை சுத்தமாக இழந்தது. நெதர்லாந்தோ அதைக் கச்சிதமாய் பயன்படுத்தி பிரேசிலை நெருக்க ஆரம்பித்தது. சற்றைக்கெல்லாம் இன்னொரு கோல்.

ரோபனின் கார்னரை Kuyt தலையால் டீ-க்குள் அனுப்ப, ஸ்னைட்டரின் துல்லிய ஹெட்டர் 2-1 ஆக்கியது. அற்புதமான டீம் கோல்.

கடைசி 22 நிமிடங்களுக்கும் நெதர்லாந்தின் கையே ஓங்கியிருந்தது. ஃபாபியானோவை நீக்கி நில்மாரை அனுப்பியும் பிரயோஜனம் இல்லை. Own Goal அடித்த மெலோ திரும்ப ஊருக்குப் போக பயந்திருக்கலாம். ஒரேடியாய் டச்சு குடியுரிமை வாங்கி நெதர்லாந்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்திருக்கலாம். இன்னொரு முறை ரோபனை அநியாயமாய் வீழ்த்தி ரெட் கார்டு வாங்கி வெளியேறினார்.  பதினொரு பேருடனேயே தடுமாறிக் கொண்டிருந்த அணி பத்து பேருடனா ஜெயிக்க முடியும்? கடைசி பத்து நிமிடங்களில் நெதர்லாந்து முன்னிலையை அதிகப்படுத்தாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவே ப்ரேசிலுக்கு சரியாயிருந்தது.

பிரேசிலுக்கு அறாவது உலகக் கோப்பை இந்த ஆண்டு இல்லை.

மூன்றாவது ஆட்டத்தில் ஜெர்மெனியும் அர்ஜெண்டிவாவும் மோதின. மரடோனா, பெக்கன்பாயரைப் போல கேப்டன், கோச் என்று இரு நிலைகளில் அர்ஜெண்டினாவுக்கு உலகக் கோப்பை வாங்க வழி செய்வார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது.

சென்ற உலகக் கோப்பையில் காலிறுதியில்தான் இந்த இரு அணிகளும் மோதின. பெனல்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி வென்றது. இவ்வாண்டு அர்ஜெண்டினா பழி வாங்கும் என்று ஆக்டோபஸ் ஜோசியத்தைத் தவிர அனைத்தும் கூறின.

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஷ்வைன்ஸ்டைகரின் ஃப்ரீ கிக்கை முல்லர் தலையால் அடித்தார். பந்து சரியாக அவர் தலையில் படக் கூட இல்லை. கோல் கீப்பருக்கு கைக்கு சுலபமாக எட்டக் கூடிய தூரத்தில் அதிக வேகமின்றி வந்த பந்தை கவர முடியாமல் போனதால் ஜெர்மனி முன்னிலை பெற்றது.

1-0 என்றாலும் 87 நிமிடங்கள் இன்னும் இருந்தன. என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

ஜெர்மனியின் பாஸிங் கன கச்சிதம். காற்று கூடப் புக முடியா வண்ணம் தற்காப்பும் இருந்தது. இரு அணிகளும் பல தாக்குதல்களைத் தொடுத்து வந்தன என்றாலும் வழக்கமாக அர்ஜெண்டினா ஆட்டம் காணக் கிடக்கவில்லை.

அர்ஜெண்டினாவின் ஆட்டங்களில் எது இல்லாத போதும் வேகத்துக்கு குறைவு இருககது. பந்து கிடைத்துவிட்டால் பறந்தடித்து கோல் நோக்கிச் செல்வதில் வல்லவர்கள். ஆனால் இன்றோ ஒவ்வொரு அர்ஜெண்டீன வீரரும் அவரை மார்க் செய்த ஜெர்மன் வீரரை விட ஒரு மாற்று குறைவான வேகத்திலேயே ஓடினார். பந்து கிடைத்த மாத்திரத்தில் அடிக்காமல், தயங்கித் தயங்கி ஆடியது போது, ஆடுவது அர்ஜெண்டினாதானா என்ற சந்தேகம் எழுந்தது.

முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன்னிருந்தே ஜெர்மனி முன்னிலையை தக்க வைத்தால் போதும் என்று ஆடத் தொடங்கிவிட்டது. One goal lead is non-existent, என்று பலர் கூறினாலும், பெரும்பாலான அணிகள் முன்னிலையை அடைந்ததும் தற்காத்து ஆடுவதே நிதர்சனமாய் நடக்கும் உண்மை. 1990-ல் பல முக்கிய ஆட்டங்களில் மரடோனாவின் அணி இப்படி ஆடித்தான் வென்றது.

இரண்டாம் பாதியிலும் இதே நிலை தொடர, அர்ஜெண்டினாவும் கோலடிக்க முழு முனைப்புடன் களமிறங்கியது. இதில் பாதகம் என்னவென்றால் கவனமெல்லாம் கோலடிப்பதில் இருக்க தற்காப்பு பலவீனமாகிவிடும். போதாக் குறைக்கு அர்ஜெண்டினா கோல்கீப்பரும் ரொம்பவே சுமாராக விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அர்ஜெண்டினாவின் தாக்குதல் முடிந்த கணத்தில் ஜெர்மனி ஒரு தாக்குதலைத் தொடுத்தால் அதை அர்ஜெண்டினா எதிர்கொள்வது கஷ்டம். இங்கிலாந்து தோற்ற ஆட்டத்திலும் இதுவே நடந்தது.

இந்த ஆட்டத்திலும் இரண்டாம் பாதி முழுவதும் இதுதான் நடந்தது. விளைவு அடுத்தடுத்து க்ளொசாவுக்கு இரண்டு கோல்கள். மூன்று கோல் பிந்தங்கிய நிலையில் அர்ஜெண்டினா மீள்வது சாத்தியமே இல்லை என்ற நிலையில், ஏற்கெனவே சுமாராக ஆடிய வீரர்கள் சுரத்தின்று ஆட ஆரம்பித்தனர்.

வீடியோ கேம் கார் ரேசில் ஸ்டியரிங்கைத் திருப்பித் திருப்பி வாளாயிருக்கும் இடர்களைச் சுற்றிச் சுற்றி வண்டியை செலுத்தி முன்னேறுவது போலத்தான் ஜெர்மனியின் நான்காவது கோல் அமைந்தது. அர்ஜெண்டின வீரர்கள் சும்மாயிருக்க அவர்களைக் ஒற்றை ஆளாய் கடந்து வந்த ஷ்வைன்ஸ்டைகர், கோலருகில் இருந்த ஃப்ரெட்ரிச்சிடம் கொடுக்க ஸ்கோர் 4-0. மரண அடி.

அர்ஜெண்டினாவின் தோல்விக்கு மரடோனாவே காரணம் என்று சொல்ல முடியாது. அவர் என்னதான் களனமைத்தாலும் ஆடுவது வீரர்கள்தானே? வழக்கமாய் ஆடுவதைப் போல அரவே ஆடாவிடில் எந்த கோச்தான் என்ன செய்ய முடியும்? ஒரு அணி சுமாராக ஆடி இன்னொரு அணி சின்ன் அ சொதப்பல் செய்தாலே ஆட்டம் சாய்ந்துவிடும். இந்த ஆட்டத்திலோ ஒரு அணியோ மிகச் சிறப்பாக ஆட, இன்னொரு அணியோ படு கேவலமாய் விளையாடியது. விளையை சொல்லவும் வேண்டுமா என்ன?

எந்த நேரத்தில், “என்னதான் ஐரோப்பாவில் காசை தண்ணியாய் செலவழித்து கால்பந்தை வளர்த்தாலும் தென்னமெரிக்க வீரர்களின் ரேஞ்சே தனிதான்.”, என்று போன கட்டுரையில் சொன்னேனோ தெரியவில்லை. நான்கில் மூன்று அணிகள் வெளியேறிவிட்டன. அதுவும் ஐரோப்பிய நாடுடன் ஆடிய மூன்று அணிகளுக்கும் சங்கு.

நான்காவது ஆட்டத்தில் ஸ்பெயின், பாரகுவேயை எதிர்த்து ஆடியது.

போர்ச்சுகலை வென்ற அணியையே இந்த ஆட்டத்திலும் களமிறக்கினார் ஸ்பெயினின் கோச் Vicente del Bosque. பாரகுவேயோ ஜப்பானை வென்ற அணியில் ஆறு மாற்றங்கள் செய்திருந்தது. சாண்ட கிரஸ், பெனிடெஸ், பாரியோஸ் போன்ற முன்கள வீரர்களுக்கு துவக்க அணியில் இடமில்லை.

Under achievers tag-ஐ நீக்க ஸ்பெயினுக்கு நல்ல வாயப்பிருந்தது போலவே, Dream run-ஐத் தொடர பாரகுவேக்கும் நல்ல வாய்ப்பு.

முதல் பாதியின் ஸ்பெயினின் பாஸிங்க் கேமை விளையாட முடியாதபடி பாரகுவே குறிக்கீடு செய்தது. டேவிட் வியா போன்ற வீரர்கள் முன்னேற முடியாமல் நெருக்கப்பட்டனர். பாரகுவேயின் இரண்டு மூன்று லாங் ரேஞ்ச் முயற்சிகளில், பாரகுவே வீரருக்கும் பந்துக்குமான தூரம் இன்னும் சில செ.மீ குறைந்திருந்தால் கச்சித ஹெட்டர் மூலம் பாரகுவே கோல் பெற்றிருகக்க் கூடும்.

இரண்டாம் பாதியிலும் இந்த வகை ஆட்டமே தொடர்ந்து இரு கோல்கீப்பர்களும் அதிகம் சிரமமில்லாமல் இருந்தது.

அறுபதாவது நிமிடத்தில் ஸ்பெயினின் பிகே (Piquet) பனல்டி ஏரியாவுக்குள் பாரகுவேயின் கர்டோஸொவை வீழ்த்தியதால் பாரகுவேக்கு பெனல்டி. முன்னணி பெற மகத்தான வாய்ப்பு. மிகப் பெரிய அப்ஸெட்டுக்கு மிக அருகில் இருந்த கர்டோஸோ அடித்த பெனல்டியை சரியாக கணித்துப் பிடித்தார் ஸ்பெயின் கோல்கீப்பர் காஸியாஸ்.

இது நடந்த சில நொடிகளில் டேவிட் வியா பாரகுவே வீழ்த்தப்பட்டு பெனல்டியை வென்றார். Xabi Alonso-வின் பெனல்டி கிக் கோலுக்குள் செல்ல ஸ்பெயின் குதூகலித்தது. அந்தக் குதூகலம் அரை நொடிக்குள் அடக்கப்பட்டது. பந்தை அலோன்ஸொ அடிப்பதற்குள் ஸ்பெயின் வீரர் ராமோஸ் பெனல்டி ஏரியாவுக்குள் வந்துவிட்டதால், முதலில் அடித்தது ரத்தாகி மீண்டுமொரு முறை அடிக்க வேண்டியதாகிவிட்டது. சென்ற முறை அடித்த இடத்திலேயே இரண்டாம் முறையும் அடித்தார் அலோன்ஸோ. இம்முறை உஷாராக இருந்த பாரகுவே கோல்கீப்பர், பந்தை தடுத்தாலும் பிடிக்க முடியவில்லை. ரீபவுண்டில் அடிக்க வந்த வியாவை கோல்கீப்பர் வீழ்த்தினாலும் ரேஃப்ரீ கண்ணில் படாததால் ஸ்கோர் 0-0 என்றே தொடர்ந்தது.

ரீப்ளேயில் பார்த்த போது பாரகுவே அடித்த பெனல்டியின் போதும் அடிப்பதற்கு முன் வீரர்கள் பெனல்டி ஏரியாவுக்குள் நிழைந்திருப்பது தெரிய வந்தது. ரெஃப்ரீயின் கவனத்தைப் பெறாததால், ஸ்பெயின் பிழைத்துக் கொண்டது. இரு அணிகளும் இழந்த வாய்ப்பை எண்ணி வருந்திய போதும், எதிரணி முன்னிலை பெறாததை எண்ணி அமைதியுற்றிருக்கும்.

இந்தக் குழப்பங்கள் முடிந்த சில நிமிடங்களுக்குள் இனியஸ்டாவின் அற்புதமான முயற்சியை கோல் போஸ்ட் தடுத்தது. போஸ்டில் பட்டு திரும்பி வந்த பந்தின் திக்கில் வியா இருந்ததால், இன்னொரு கோல் முயற்சி. இம்முறையும் பந்து போஸ்டில் பட்டாலும், பந்து கோலுக்குள் சென்றது.

ஏழு நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் பாரகுவேயால் தக்க பதிலடி கொடுக்க முடியவில்லை.

ரொம்பவே காலம் தாழ்த்தி சாண்ட கிரஸ் போன்ற முன்கள வீரர்களை களமிறக்கியதற்கு பாரகுவே அதிகம் வருந்தியிருக்கும்.

கடைசி நிமிடத்தில் சாண்ட கிரஸும் பாரியோஸும் செய்த முயற்சிகளை காஸியாஸ் லாவகமாய் தடுத்து, தன் அணி அரை இறுதிக்குள் முதன் முறையாகச் செல்வதை உறுதி செய்தார்.

அரையிறுதியில் ஸ்பெயின் ஜெர்மனியுடன் மோத, உருகுவே நெதர்லாந்திடம் மோதுகிறது.

1,3,4 ஆட்டங்களைப் பற்றி எழுதி, இரண்டாம் ஆட்டத்தைப் பற்றி எழுதாமல் இருப்பதை எண்ணி சிலர் வியக்கக் கூடும்.

ஆட்டத்தைப் பார்க்காத போதும், பார்த்தது போலவே எழுதும் அளவிற்கு ஓர் எழுத்தாளனாக நான் இன்னும் வளரவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

நன்றி: இட்லிவடை

கிரீஸ் 2004-ல் விளையாடியது போல விளையாடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் தென் கொரியாவிடம் ஆடிய விதத்தைப் பார்த்தால், அனேகமாய் சீக்கிரமே வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

2002-ஐப் போலவே இந்த ஆண்டும் தென் கொரியா பட்டையைக் கிளப்புகிறது.

பெரிய அணிகள் வரிசையில் ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் மூன்றுமே மகா மட்டமாய் விளையாடின. முதல் இரு அணிகளிடம் இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் ஸ்பெய்ன் கோல் அடிக்காமல் அதிர்ச்சித் தோல்வியுற்றது எதிர்பாராதது. Under Achieving Championship-ல் ஸ்பெயினுக்கு முதல் இடம் கிடைக்கும்.

கிரிஸ்டியானோ ரொனால்டோ, டெக்கோ போன்ற சிறந்த ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்த போதும், ஐவரி கோஸ்ட் அணியே போர்ச்சுகலை விட சிறப்பாக விளையாடியது. டிரோபா பட்டையைக் கிளப்புவார் என்று பார்த்தால், கையில் பட்டையைக் கட்டிக் கொண்டு விளையாடி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

பராகுவேயும் உருகுவேயும் சிறப்பாக ஆடுகின்றன. ஏதேனும் பெரும் தலைகளை இவர்கள் வீட்டுக்கு அனுப்பக் கூடும்.

பிரேசில் ஜெயித்தாலும் Samba flair missing. ”என்ன இப்படிப் பண்ணிட்டீக” என்று பிரேசில் கோச் டுங்காவைக் கேட்கத் தோன்றுகிறது.

கோச் என்றதும் மரடோனா நியாபகத்துக்கு வருகிறார். மைதானத்தின் மையப்புள்ளியாய் மெஸ்ஸி ஆடினாலும், ரசிகர்களின் கவனம் எல்லாம் மரடோனாவின் ஒவ்வொரு அசைவுக்கும் இசைந்த வண்ணம் இருக்கின்றது.

ஒரு வழியாய் எந்த noise filter-ஐ உபயோகித்தால் voice கேட்கும் என்று டிவிக்காரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஜெர்மனி நாலு கோல் போட்டாலும் ஜெயிக்குமா என்று தெரியவில்லை. ஜெர்மனியின் defense கொஞ்சமாவது test செய்யப்பட்டால் அவர்கள் உண்மை நிலை தெரிய வரலாம்.

இங்கிலாந்தின் பிரச்னை கோல்கிப்பர் Green. அது ever-green problem-ஆக மாறாமல் இருந்தால் சரி.

இன்று குரூப் பி-யின் சிறந்த அணிகள் மோதுகின்றன. 86-ல் அதிரடி ஆட்டத்தால் காயத்திலிருந்து மீண்டு வந்த மரடோனாவை கலங்க வைத்த அணி தென் கொரியா. “அவர்கள் ஃபுட்பால் ஆடவில்லை டேக்-வாண்டோ விளையாடினர்”, என்றார் மரடோனா.

ஆபீஸில் அரை நாள் ஸிக் லீவ் சொல்லியாயிற்று. Hope it is worth it.