நேற்று தனது தொண்ணூறாவது வயதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜூடோ ஆசான்பெர்சி செகைன் காலமானார். சரி, அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று கொஞ்சம்போல வலையில் படித்தேன்.

அப்போது பெர்சி செகைனின் ஆசிரியர் குஞ்சி கொய்சூமி, ஜூடோவை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்திய யூகியோ டானியின் நேர் சிஷ்யர் என்று அறிய நேர்ந்தது.

யூகியோ டானி குறித்த தகவல்கள் சுவாரசியமானவை.

ஜூடோ மேலை நாடுகளில் காலூன்றிய கால கட்டம் குறித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவல்: 1895ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவைத் தோற்கடித்திருந்தது. 1905ஆம் ஆண்டு அது ரஷ்யாவைத் தோற்கடித்தது! இன்றைக்கு நினைத்துப் பார்த்தால்கூட மலைப்பூட்டும் சாதனை இது.

இத்தனூண்டு இருக்கிற நாடு எப்படி அவ்வளோ பெரிய நாடுகளிடம் சண்டை போட்டு அவர்களைத் தோற்கடித்தது என்று உலக மக்கள் மூக்கில் விரலை வைத்து வியந்த காலமே ஜூடோ மேலை நாடுகளில் கால் பதித்த காலம். காலனியாதிக்கத்தின் க்ளைமாக்ஸ் நெருங்கின காலம் என்று அந்த நாட்களை சொல்லலாம். உலக நாடுகளை கட்சி கட்டிக்கொண்டு தன் குடையின் கீழ் கொண்டு வந்த நாடுகள் ஒன்றோடொன்று முரண்டி அதற்கடுத்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு உலகப் போர்களுக்குக் காரணமாக இருந்தன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏகாதிபத்தியத்தின் மீது ஈர்ப்பு இருந்த இந்தக் கால கட்டத்தில் ஜப்பானின் வெற்றியின் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம் என்று ஐரோப்பிய நாடுகள் ஆசைப்பட்டன.

படித்தவர்கள் வரலாற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள், சமூக, அரசியல், பொருளாதார காரணிகளை ஆய்வார்கள். ஆனால் நம்மைப் போன்ற பாமரர்களுக்கு கலையும் விளையாட்டும்தானே தெரியும்?

இங்கே வருகிறார் யூகியோ டானி.

1900ஆம் ஆண்டு ஜூடோ கலையைக் கற்பிப்பதற்காக ஜப்பானிலிருந்து இங்கிலாந்து வந்து இறங்குகிறார். அவரது வகுப்புகளில் கல்விக் கட்டணம் கூடுதலாக இருந்ததாலோ என்னவோ, அவரால் தான் வந்த காரியத்தில் வெற்றி பெற முடியவில்லை.

இப்போது சினிமா தியேட்டர்கள் போல் அந்த காலத்தில் இங்கிலாந்தில் வெகு பிரபலமாயிருந்த ம்யூசிக் ஹால்களில் தனது கைவரிசையைக் காண்பிக்க ஆரம்பிக்கிறார் அவர்.

யார் வேண்டுமானாலும் அவரோடு மோதலாம், சண்டையில் தாக்கு பிடிக்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு பவுண்ட் பரிசு கிடைக்கும். ஐந்து நிமிடங்களாவது சண்டை போட்டு அவரைத் தோற்கடித்தால் இடத்துக்குத் தகுந்த மாதிரி ஐந்து பவுண்ட் முதல் நூறு பவுண்டுகள் வரை ஜெயிக்கலாம்.

யூகியோ டானியின் உயரம் ஐந்து அடி என்று சில பேர் சொல்கிறார்கள். ஐந்தரை என்று சிலர் சொல்கிறார்கள். எதிராளியின் தன்னம்பிக்கைக்கேற்ப அவரது உயரம் கூடவும் குறையவும் செய்திருக்கிறது என்று நாம் அனுமானிக்கலாம். அவரோடு சண்டை போட்டவர்கள் அவரை எப்படி அனுமானித்திருந்தாலும் சொற்ப காலத்திலேயே தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்திருப்பார்கள். வந்தவர்களை எல்லாம் பிடி போட்டு அமுக்கி வெகு விரைவிலேயே பாக்கெட் ஹெர்குலிஸ் என்று நாடெங்கும் பிரபலமாகி விட்டார் அவர்.

தன்னை ஒரு மூன்றாந்தர ஜூடோய்கா என்று சொல்லிக் கொண்டார் டானி. “சாம்பியன்கள் காசுக்காக சண்டை போடுவதில்லை. அவர்கள் எங்கள் கலையை கேளிக்கைப் பொருள் ஆக்குவதில்லை. ஜூடோவில் ஆசான்களாய் இருப்பவர்களுக்கு இந்தக் கலை ஒரு மதம் மாதிரி”, என்றார் அவர்.. ஆனால் இந்த மூன்றாந்தர ஜூடோ வீரர் தான் போட்ட சண்டைகளில் ஒன்றில் கூட தோற்றதில்லை!

இல்லை. ஒன்றில் தோற்றிருக்கிறார். ஆனால் அவரைத் தோற்கடித்தவர் இன்னொரு ஜப்பானியர். அதனால் அதை கணக்கு பண்ணக் கூடாது.

ஒரு வகையில் அவருக்கு ஜூடோவில் சில சகாயங்கள் இருந்தன. போட்டி விதிகளில் முக்கியமான ஒன்று- ஜூடோ விதிகளின்படிதான் அவருடன் மோத வேண்டும் என்பது. ஜூடோ பற்றித் தெரியாதவர்களுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்- ஆனால் கூட, ஐந்தடி உயரம் இருக்கிற ஒருவரைக் கையைக் கட்டிக் கொண்டே தூக்கிப் போட்டு மிதித்துவிட முடியாது?

ஆனால் அதுதான் நடக்கவில்லை. அவரோடு மோதியவர்கள் அனைவரும் ஒருத்தர் விடாமல் மண்ணைக் கவ்வினார்கள். இதில் மல்யுத்தத்தைத் தொழிலாக வைத்திருந்தவர்களும் அடக்கம். இங்கிலாந்தின் தேசிய மல்யுத்த சாம்பியன்கள் கூட ஓரிருவர் மோதித் தோற்றார்கள். மற்றவர்கள் முதுகில் சுளுக்கு, தலையில் தசைப்பிடிப்பு என்று சாக்கு போக்கு சொல்லி எஸ்ஸானார்கள்.

மேலே இருக்கிற தென்னாப்பிரிக்க மல்யுத்த வீரர் ட்ரோம்ப் வான் டிக்கோலன் அவரோடு மோதியவர்களில் ஒருவர். பலத்தால் பிரயோசனப்படவில்லை, டானியின் பிடிகள் எதிராளியின் பலத்தையே அவருக்கு எதிராகத் திருப்பின, எவ்வளவு தீவிரமாக அவரது பிடியிலிருந்து தப்ப முயற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது இறுகி தாள முடியாத வலி தருவதாயிருந்தது, என்கிறார் அவர்.

இந்த வீடியோவைப் பாருங்கள். அவரைவிட உயரமான ஒருவர் அவரை அலேக்காகத் தூக்கி விடுகிறார்- இருந்தாலும் கூட டானி அந்த ஆளை அடித்து சாய்க்கிறார். அதற்கடுத்த இரண்டு மூவ்களையும் பாருங்கள். எவ்வளவு அழகாக எதிராளியின் பலத்தை அவனுக்கு எதிராக திசை திருப்புகிறார்.

இது எல்லாம் ஜப்பானியரின் வெற்றி ரகசியத்தை விளக்குவது போல் விளக்கினாலும் மர்ம முடிச்சை இன்னும் இறுக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

டானியிடம் ஜூடோ பயின்ற இங்கிலாந்து சாம்பியன் ட்ரவர் லெக்கிட் டானியின் பயிற்சி முறை பற்றி சொல்வது ஓரளவு வெளிச்சம் தருவதாய் இருக்கிறது. பயிற்சியின் துவக்க காலத்தில் லெக்கிட் கழுத்துப் பகுதியில் வீக்காக இருந்தாராம். அதை பலபடுத்த வேண்டி டானி சண்டையின் போது அங்கே பிடி போட்டு இறுக்குவார். சரண் என்பதைக் குறிக்க தரையில் கையை அடிக்க லெக்கிட் எத்தனிக்கும் வேலையில் பிடியைத் தளர்த்துவார்.

சற்று நேரத்தில் மீண்டும் கழுத்தில் பிடி. சரணடையும் கணத்தில் தளர்த்தல். லெக்கிட் மிகவும் ஆயாசப்பட்டுவிட்டாரென்றால் பிடி அங்கிருந்து நகர்ந்து முகத்தின் மேல் இருக்குமாம். இந்தத் தீவிர பயிற்சியின் காரணமாக என் கழுத்தை எவனும் ரொம்ப நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடியாதபடி அங்கு எனக்கு பலம் வந்தது என்கிறார் லெக்கிட். அது மட்டுமல்ல, எதிராளி வீக்காக ஆகிற கணமே அவனைத் தாக்கவும் கற்றுக் கொண்டேன், என்கிறார் கூடுதலாக.

போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. தோல்விகளில் துவண்டு விடாமல், தன் எளிமையை நினைத்து அஞ்சி நடுங்காமல், தன் குறைகளை வலுப்படுத்திக் கொண்டு எப்போதும் தயார் நிலையில் இருக்கப் பயிலும் பயிற்சிக் காலமாகி விட்டது இந்நாளின் ஜூடோ. எது நமக்கு வலி தருகிறதோ, அதுவே நமக்கு உரம் சேர்க்கிறது. நம் மீது ஆதிக்கம் செலுத்துபவனின் விசையே அவனை வீழ்த்தும் கருவி ஆகிறது. இதுபோல் இன்னபிற பாடங்களை தன்னகத்தே கொண்டு இன்று ஜூடோ வாழும் கலைகளில் ஒன்றாகி விட்டது.

“நீ அடுத்தவனை விட எவ்வளவு நன்றாய் இருக்கிறாய் என்பது முக்கியமில்லை, நேற்றைக்கிருந்ததற்கு இன்று வளர்ந்திருக்கிறாயா, அது!” என்கிறார் ஜூடோவின் தந்தை என்று சொல்லப்படுகிற ஜிகோரோ கானோ. சரிதானே?

சரி.

ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.

நேற்று காலமான பெர்சி செகைன் இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்தின் விமானப்படையில் சேர்ந்து சண்டை போட்டார். அவரது விமானம் ஹாலந்துக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது வீழ்த்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தன் சக கைதிகளுக்கு ஜூடோ கற்றுத் தந்தார் செகைன். அது போக இரண்டு முறை சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார் அவர்.

இரண்டு தடவையும் மாட்டிக் கொண்டதால் அவர் மனம் தளரவில்லை. இங்கிலீஷ்காரன் மாதிரி நான் இருப்பதால்தானே என்னை இவர்களால் ஈஸியாக அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது என்று சிறையில் ரூம் போட்டு யோசித்த செகைன், மூன்றாவது தடவை இங்கிலிஷ்காரனின் எதிரி ஜப்பான்காரன் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டுத் தப்பி ஓடினார்.

இருந்தும் மாட்டிக் கொண்டார்!

போர் முடிந்ததும் வைரத்துக்குப் பட்டை தீட்டுகிற வேலையில் சேர்ந்தாராம் செகைன். ஜூடோ வாத்தியாருக்கு சரியான வேலைதானே அது!

அதற்கப்புறம்தான் அவர் ஜூடோ பள்ளி துவக்கி தன் எண்பதாவது வயது வரை சின்னப் பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது என்ற கதையெல்லாம்.

தொடர்புடைய சுட்டிகள்:

telegraph.co.uk

wikipedia

bartitsu.org

InYo: Journal of Alternative Perspectives

– நாட்பாஸ்

Advertisements