எப்போதும் வசீகரனாயிருக்கிற பெடரர், யாராவது மென்னியைப் பிடித்து அழுத்த ஆரம்பித்தால் எந்திரனாக மாறி விடுகிறார். அதற்காக அக்கம் பக்கத்தில் பந்து தருகிற பெண்களைப் பார்த்து வில்லத்தனமாய் சிரிக்கிறார் அவர் என்று சொல்லவில்லை- பெடரரின் ஆட்டத்தில் ஒரு இரும்புத்தனம் வந்து விடுகிறது. இது அவரது இயல்பான ஆட்டமா இல்லை இப்போதுதானா இப்படி என்றுத் தெரியவில்லை- பெடரரின் ஸ்க்ரூக்களை டைட் பண்ணினால் அவர் ரொம்ப ஜாக்கிரதையாக பந்து வெளியே போய் விடக் கூடாதே என்ற கவனத்துடன் பொத்தாம் பொதுவான ஷாட்களை ஆட ஆரம்பித்து விடுகிறார். வழக்கமாக அவரிடமிருந்து பொறி தெறித்தாற்போல வருகிற ஷாட்கள் வருவதில்லை, டல்லடிக்கிறார்.

செப்பியிடம் ஆடியதற்கு அடுத்தது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தே சோடர்லிங். தரவரிசையில் பெடரருக்கு இரண்டு இடம் கீழே, ஐந்து. நல்ல விறுவிறுப்பான ஆட்டமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு டிவியை ஆன் செய்தேன். இரண்டு பேரும் ப்ராக்டிஸ் பண்ணி முடித்துவிட்டு மேலே போட்டிருந்த கோட்டைக் கழட்டி கோதாவில் குதிக்கும் தருணத்தில், “காலங்காத்தால சரஸ்வதி பூஜையும் நாளுமா நல்லதா ரெண்டு சாமி பாட்டு கேக்கறதுக்கு இல்லாம எப்பப்பாரு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்தானா?” என்று பின்பாட்டு கேட்டது. நியாயம்தானே?

சரி, டயத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று கடைக்குப் போய் விட்டுத் திரும்பி வந்து, ஒரு வழியாக வீட்டில் கவனம் வேறு பக்கம் திரும்பியிருந்த சமயம் பார்த்து சத்தமில்லாமல் சேனல் மாற்றினால், பெடரர் 6-1, 5-1 என்ற நிலையில் செர்வ் செய்துக் கொண்டிருக்கிறார். சரிதான், இதைப் பார்ப்பதற்காக பழைய பாட்டையே மறுபடியும் கேட்கணுமா என்று தெய்வீக ராகங்களுக்குத் திரும்பி விட்டேன்.

சரியாக ஐம்பத்து மூன்று நிமிடங்களில் மொத்த ஆட்டத்தையே முடித்திருக்கிறார் பெடரர். அவரோடு ஆடியது உலகத்தில் ஐந்தாம் நிலையில் இருக்கிறவர். நல்ல பார்மில்தான் பெடரர் இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

அரை இறுதி ஆட்டதையாவது பார்ப்போம் என்று காத்திருந்து சாயந்தர வேளையாய் இருந்தாலும் பரவாயில்லை என்று செய்ய வேண்டிய வேலையை எல்லாம் முன்கூட்டியே முடித்துக் கொடுத்துவிட்டு ரிலேக்சாக ஜோகோவிச் பெடரர் ஆட்டத்தில் உட்கார்ந்தேன்.

இந்தப் பதிவின் துவக்கத்தில் எந்திர முகம் என்று சொன்னேனல்லவா, அது இரண்டாம் ரேங்கில் இருக்கிற ஜோகொவிச்சைப் பார்த்த பீதியிலேயே பெடரருக்கு வந்து விட்டது. மனுஷன் சாதாரண நாளிலேயே அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டான், அவங்க ஊர் வாட்ச் கால் முளைத்து கோர்ட்டுக்குக்கு வந்த மாதிரிதான்- அதன் ஆர்ப்பாட்டமில்லாத துல்லியம்தான் பெடரரின் ஸ்டைல். ஆனால் ஜோகோவிச் போன்றவர்கள் ஏமாந்த சமயம் பார்த்து பதம் பார்த்து விடுகிறார்கள் என்பதால் முதலிலிருந்தே பெடரர் ரொம்ப உஷாராக ஆடினார்.

அது ஏதோ கையைக் கட்டிக் கொண்டு சண்டை போடுகிற மாதிரி இருந்தது= பெடரரின் சர்வீசில் நீண்ட ராலிகள், தெரியாத்தனமாய் செய்யப்படுகிற பிழைகளை பொளேர் என்று இவர்களில் ஒருத்தர் வின்னராகக் கன்வர்ட் பண்ணுவார். பெரும்பாலும் அது ஜோகொவிச்சாகத்தான் இருக்கும். பெடருக்கு பர்ஸ்ட் சர்வ் கூட அவ்வப்போது கைவிட்டுப் போனது. ரொம்ப போராடினார் அவர்.

ஜோகோவிச் ஒரு வித்தியாசமான ஆள். அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முன்னெல்லாம் இவர் களத்தில் செய்கிற கோணங்கிச் சேட்டைகள் ரொம்ப பிரபலம்.

ஜோகொவிச்சின் கைதான் முதல் செட்டில் ஓங்கியிருந்தது. நான்காவது கேமில் ஜோகோவிச் ஒழுங்காக ஆடியிருந்தால் ரிசல்ட் வேறு மாதிரி வந்திருக்ககூடும். அவருக்கு நான்கு ப்ரேக் பாயிண்டுகள் கிடைத்தன. அத்தனையையும் பெடரர் எந்திரத்தனமான ஆட்டத்தினால் தாக்குப் பிடித்தார். அது தவிர இரண்டு தடவை பெடரர் கேமை எடுக்க சர்வ் செய்தபோது ஜோகோவிச் அவரை முறியடித்தார். இந்த கேம் மட்டும் பன்னிரெண்டு நிமிடங்கள் நடந்தது.

இதற்கு முந்தைய ஆட்டத்தில் பெடரர் சொடர்லிங்கை ஐம்பத்து மூன்றே நிமிடங்களில் தோற்கடித்திருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். பெடரர் பட்ட பாடு புரியும்.

எட்டாவது கேமில் ஜோகோவிச் ரொம்ப சீக்கிரமாகவே 0-30 என்று பெடரரைத் பிரேக் பண்ண முக்கால் கிணறு தாண்டி விட்டார்- திடீரென்று விழித்துக் கொண்ட மாதிரி பெடரர் ஒரு பிரமாதமான ஏஸ் அடித்தார், அடுத்ததாக ஜோகொவிச்சைப் பின்னுக்குத் தள்ளி விட்டு சாட்டையால் சொடுக்குகிற மாதிரி ஒரு க்ராஸ் கோர்ட் வாலி- ஜோகோவிச், “என்னடா மனுஷன் இவன்!” என்கிற மாதிரி பெடரரைக் காட்டி பார்வையாளர்களைப் பார்த்து முகம் சுளித்தார். பத்தாவது கேமில் பெடரர் ஏறத்தாழ இதே மாதிரியான கட்டத்தில் ட்ராப் ஷாட் ஆடினார். ஜோகோவிச் அதை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக தனது மட்டையில் கையைத் தட்டி கரவொலி எழுப்பினார்.

அதற்கு அடுத்த இரண்டு பாயிண்டுகள் கழித்து ஜோகோவிச்கூட அதைவிட நல்ல ஒரு ட்ராப் ஷாட் ஆடினார். பெடரர் ஜோகோவிச்சை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, அடுத்த பந்தை எதிர்கொள்வதற்காகப் போய்க கொண்டே இருந்தார். அடுத்த ஒன்றிரண்டு பாயிண்டுகளை ஜோகோவிச் சொதப்பவே, பெடரர் அவரை ப்ரேக் பண்ணி விட்டார்.

எந்திரனுக்கு லீவு கொடுத்துவிட்டு வசீகரன் அந்த இடத்துக்கு வந்தார். அதற்கப்புறம் ஜோகோவிச்சை ஊதித் தள்ளிவிட்டார் பெடரர்.

முதல் செட்டை மட்டும்தான் பார்த்தேன். அது முடியும் வேளை எங்கள் வீட்டுக்கு கொலு பார்க்க என் அத்தை வந்து விட்டார். அவர் ஒரு அரை மணி நேரத்துக்குக் கச்சேரி செய்தார். சக்கரம் இறங்க மறுக்கிற விமானம் மாதிரி லேண்டிங் நோட்களை ஒட்டி அவர் செய்த அசாத்திய சஞ்சாரம் குறித்து சொல்லியே ஆக வேண்டும்…

ஆனால் அதற்கான இடம் இது இல்லை என்று நினைக்கிறேன்.

அதற்கான ஆளும் நான் இல்லை.

அது கிடக்கட்டும், யார் ஜெயித்தது என்று சொல்லாவிட்டால் கோபித்துக் கொள்ளப் போகிறீர்கள்- பெடரர் 7-5, 6-4 என்று ஜெயித்து விட்டார். இறுதிப் போட்டியில் ஆண்டி மர்ரேவை எதிர்த்து ஆடுகிறார்.

இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டங்கள் பன்னிரெண்டு. அவற்றில் ஏழு போட்டிகளில் மர்ரே ஜெயித்திருக்கிறார். வரட்டும் பார்க்கிறேன், என்று சொல்லியிருக்கிறார் அவர்.

என்ன நடக்கிறது பார்க்கலாம். நீங்களும் நாளை வாருங்கள்- வேறு எங்கேயும் போய் விடாதீர்கள்.

– நாட்பாஸ்

************************************
இதை நாட்பாஸ் அனுப்பி 2-3 நாளாயிற்று. இணையத்தில் தொற்றிக் கொள்ள இப்போதுதான் நேரம் கிடைத்ததால், இப்போதுதான் வலையேற்ர முடிந்தது. பதிவில் ஊசிப் போன வாடை அடித்தால் அதற்கு முழு பொறுப்பு என்னுடையதுதான்.

போட்டியில் இறுதியாட்டத்தில் மர்ரே சுலபமாக வென்றார். ”செங்கல்பட்டு அருகில் இருக்கும் ஷாங்காயில் ஜெயிப்பதெல்லாம் மேட்டரே இல்லை. கிராண்ட் ஸ்லாமில் ஜெயித்தால்தான் ஆட்டத்தில் சேர்த்தி என்கின்றனர்”, தீவிர ஃபெடரர் ரசிகர்கள்.

காமன் வெல்தில் கோட்டை விட்ட பட்டத்தை ஷாங்காயில் வென்றுள்ளார் லியாண்டர். இப்படியே ‘தம்’ கட்டினால் 2012-ல் ஒலிம்பிக் வந்துவிடும். இம்முறையாவது உலோகம் (இரட்டையரில்) கிட்டும் என்று நம்புவோமாக.

– லலிதாராம்

************************

Advertisements