இஸ்னர் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கிறார் என்று சொன்னேனல்லவா, நேற்று பெடரரோடு ஆடிய செப்பியை அப்படி சொல்ல முடியாது. செப்பியிடம் உங்கள் பெண்டாட்டியை என்ன, பூனைக் குட்டியைக்கூட தனியாக விட்டுவிட்டுப் போவதற்கு ஒருமுறைக்கு இரண்டு தடவை யோசிப்பீர்கள். அவரது பார்வையில் அப்படியொரு முரட்டுத்தனம். முகம்தான் இயல்பிலேயே அப்படியென்றால் கண்டகண்ட இடங்களில் தாடியை வளர்த்து விட்டுக் கொண்டு ஒரு வெறித்தனமான லுக்கை செட் பண்ணி வைத்திருக்கிறார் அவர். ஆனால் அதுவெல்லாம் பெடரரிடம் போணியாகவில்லை.


image credit: Zimbio

முதல் செட் பறி போய் விட்ட நிலையில் இரண்டாவது செட்டில் செப்பி பெடரரை ப்ரேக் செய்தார். அந்த கேமில் செப்பி உண்மையிலேயே மிக சிறப்பாக ஆடினார். பெடரரை இங்கும் அங்கும் ஓட விட்டு அழகாக பாயிண்ட்களை ஸ்கோர் பண்ணினார். ஆனால் அதற்கு அடுத்த கேமிலேயே பெடரர் செப்பியை ப்ரேக் செய்தார். என்ன நடந்தது என்றுத் தெரியவில்லை. இரண்டு பேருமே அந்த கேமை மிக சாதாரணமாகத்தான் ஆடினார்கள். செப்பி இரண்டு தடவையோ என்னவோ நெட்டில் செர்வ் பண்ணினார். அப்புறம் இரண்டு தடவை கோட்டுக்கு வெளியே அடித்தார்.

பெடரர் விசேஷமாக எதுவும் செய்யாமலேயே செப்பியை ப்ரேக் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கடுத்த முறை தான் செர்வ் பண்ணும்போது செப்பி 40-0 என்று முன்னே போனார். அப்பழுக்கில்லாத ஆட்டம். ஆனால் அதற்குள் ஏறத்தாழ எல்லாம் முடிந்து விட்டிருந்தது.

செப்பியிடம் பிரம்மாஸ்திரம் என்று சொல்லும்படியாக ஒரு ஷாட்டும் இல்லை. அதுதான் அவரது பிரச்சினை. ரோடிக் போன்றவர்கள், அவசர ஆத்திரத்தில் முயல்குட்டியை தொப்பியில் இருந்து தருவிக்கிற மந்திரவாதி மாதிரி ஏஸ்களை ஏவக்கூடியவர்களாக இருக்கிறார்கள். சில பேருக்கு பேக்ஹேண்ட் பலமானதாக இருக்கிறது, சில பேருக்கு கிரௌன்ட் ஸ்ட்ரோக் என்று ஏதேதோ. ஆனால் செப்பி தனக்கு வருகிற பந்துகளைத் திருப்பி அடிக்கக் கூடியவராக இருக்கிறார், அவ்வளவுதான். நீண்ட ராலிகளில் அவருக்கு ஜெயிக்கக் கூடிய வாய்ப்புகள் கூடுகின்றன. ஆனால் ஒரு ஏஸ்கூட அடிக்காமல் இந்த காலத்தில் பெரிய பெரிய ஆட்களிடம் டென்னிஸ் மேட்ச்களை ஜெயிக்க முடியாது. பெடரர் கூட என்னதான் நளினமாக ஆடினாலும், அவ்வப்போது சிதறுதேங்காய்மாதிரி பட்டுத் தெறிக்கிற ஏஸ்களை வீசவே செய்கிறார், இல்லையா?

செப்பி இன்னும் நன்றாக ஆடக் கூடியவர் என்று நினைக்கிறேன், இந்த ஆண்டு இறுதியில் அவரது ரேங்க் முதல் முப்பதுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அதற்கு அவர் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். முக்கியமாக, பெடரர் போன்றவர்களை ப்ரேக் பண்ணியதும் கவனத்தை சிதற விடக் கூடாது. அதே மாதிரி, முகத்தில் இருக்கிற வெறித்தனத்தை ஆட்டத்திலும் காட்ட வேண்டும்.

ஒரு தடவை அவரது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஒரு ஆட்டத்தில் 6-1 5-3 என்று லீட் பண்ணியிருந்தும் தோற்றுப் போனாராம். “ஏன் இப்படி ஆனது?” என்று நிருபர்கள் அவர்களிடம் கேட்டதற்கு, “தலைவலி, வயிற்று வலி” என்று ஏதாவது சாக்கு சொல்லியிருந்தால் பரவாயில்லை, “அதுவா, இதுக்கு பதில் சொல்றது ரொம்ப ஈஸி. நான் அவனைத் தோக்கடிச்சுட்டா அப்புறம் இந்த வருஷம் புல்லா யாரு நான் பாக்க படம் குடுப்பா?” என்று பதில் சொன்னாராம் செப்பி. விக்கிப்பீடியாவில் படித்தேன்.

போயும் போயும் திருட்டு டிவிடிக்கா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ன்னு கேக்கத் தோணுது, இல்லியா? இவ்வளவு நல்லவனா இருந்தா வேலைக்காவாது.

————————

சற்று முன் கிடைத்த தகவல் படி உலக நம்பர் 1 ஆட்டக்காரர் நடால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் அதிர்ச்சி தோல்வியுற்றார். வீட்டில் சாயங்கால வேளையாய்ப் பார்த்தி, கிழக்கு பார்க்க உட்கார வைத்து மிளகும், உப்பும் சுற்றிப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறாராம் நடாலின் பாட்டி.

—————————–

நேற்று பெடரர் இஸ்னரோடு ஆடியபோது அவரது மேஜிக் ஷாட்டை ஆடினார். அதன் காணொளி இன்றுதான் கிடைத்தது- கண்டு களியுங்கள்:

– நாட்பாஸ்

Advertisements