இந்த வாரம் விளையாட்டு ரசிகர்களுக்கு எக்கெச்செக்க தீனி.

காமன் வெல்த் ஆட்டங்களில் இந்தியா பட்டையை கிளப்புகிறது. துப்பாக்கி சுடுதலை பார்பதற்கு ஒன்றும் சுவாரஸ்யமாக (எனக்கு) இல்லை என்ற போதும் இந்தியா நிறைய பதக்கங்கள் அள்ளியதைக் குறித்து மகிழ்ச்சி.

எனக்கு சுமாராக விளையாட வரும் ஆட்டம் டேபிள் டென்னிஸ் என்பதால், அதனை விரும்பிப் பார்த்தேன். யான்-ஓவ்-வால்ட்னர் காலத்திலிருந்து டேபிள் டென்னிஸை டிவி-யில் தொடர்ந்து பார்க்கும் பிரகஸ்பதி நானாகத்தான் இருப்பேன்.

90-களில் அவரைப் பற்றி எப்போதாவது ஸ்போர்ஸ்டாரில் வரும் செய்திகளை கத்திர்த்து வைத்துக் கொள்வேன். (அவை எல்லாம் எங்கே போயிற்றோ). இந்த காமன் வெல்த் ஆட்டங்களிலும் டேபிள் டென்னிஸை தொடர்ந்து பார்த்தேன்.

குழு ஆட்டங்களில் ஆண்கள் வெங்கலமும், பெண்கள் வெள்ளியும் வென்றனர். சைனா காமன்வெல்தில் இல்லாத நிலையில், தங்கமே வென்றிருக்கலாம். தனி நபர் ஆட்டங்களில் அசந்தா ஷரத்கமல் தங்கம் வெல்வார் என்று நம் இக்கை இருந்தது.அவரும் கவுழ்த்துவிட்டார். எதிர்பாரா வண்ணம் சாஹாவுடன் சேர்ந்து ஷரத் கமல் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். நேற்று இரவு ஹைலைட்ஸ் பார்த்தேன். த்ரில்லிங் ஆட்டம். ஆளுக்கு இரண்டு செட் வென்ற நிலையில், சாஹா அற்புதமாய் பல அதிரடி ஷாட்கள் ஆடினார். 11-8 என்று கடைசி செட்டை வென்று இன்னொரு தங்கம் இந்தியாவுக்குக் கிடைக்கச் செய்தனர்.

ஹாக்கியிலும், edge of the seat thriller. சினிமாவில் வருவது போல, கடைசி நிமிடம் வரை பின் தங்கி இருந்து, 1-3 deficit-ஐ நீக்கி, பினால்டி ஸ்ட்ரோக்கில் ஒரு கோல் வித்தியாசத்தில் இந்தியா வந்தது. ஷாருக் கான் கேமிராவை கொண்டு வந்திருந்தால், சக்-தே இந்தியா பட ஷூட்டிங் செலவு மிச்சமாயிருக்கும். இந்தியா முதன் முரையாய் இறுதி ஆட்டத்துக்குச் செல்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்வது கடினம் என்றாலும், India have nothing to lose என்பதால் கவலையின்றி ஆடலாம். ஒருவேளை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

பேட்மிண்டன் அரை இறுதியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னாவும், இரட்டைஅய்ர் பிரிவில் ஜ்வாலா-அஸ்வினி ஜோடியும் தகுதி பெற்றிருக்கிறது. காட்டிய கொஞ்ச நேரத்தில் இரட்டையர் ஆட்டம் பார்க்க படு சூப்பராய் இருந்தது. வழக்கமாய் ஜ்வாலாதான் அதிரடியில் இறங்குவார். அரை இறுதியில் அஸ்வினி சரமாரியாய் ஸ்மாஷ்களை அள்ளி வீசினார்.

சிங்கபூர் ஜோடியிடம் ஏற்கெனவே குழு ஆட்டங்களில் தோற்றிருந்தாலும், இப்போது ஆடுவது போலத் தொடர்ந்தால் நிச்சயம் தங்க மங்கைகள் ஆகலாம்.

ஒற்றையர் பிரிவில் சாய்னா அரை இறுதியில் சுலபமாக வென்றாலும், ஆட்டத்தில் zing மிஸ்ஸிங். அதிகம் அலட்டிக் கொள்லாமல் ஆடியது போலவே தோன்றியது. முன்பு நடந்த ஆட்டத்தில் போராட்டத்துக்குப் பின் தோற்ற மலேசிய வீராங்கனை வாங் மியூ சூ, இப்போது அடி பட்ட புலியாய் சீறுவார். சாய்னா பழைய துல்லிய ஆட்டத்துக்குத் திரும்பாவிடில் தங்கம் இழக்கும் வாய்ப்பும் உள்ளது.

இங்கிலாந்தும் இந்தியாவும் இரண்டாவது இடத்துக்கு மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு தங்கமும் மிக மிக முக்கியமானவை.

தங்கம் என்றதும் நினைவுக்கு வருவது தடகள தங்கங்கள்தான். இம்முறை இந்தியாவுக்கு டிஸ்கஸ் த்ரோ மற்றும் 400 மீட்டர் ரிலே ஓட்டம் இரண்டிலும் தங்கம் கிடைத்துள்ளது. டிஸ்கஸில் மூன்று பதக்கங்களையுமே இந்தியர்கள் வென்றுள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் வீட்டில் கோபத்தில் புருஷன்மார்களை நோக்கி பாத்திரங்களை வீசுவதுதான் என்று ஒரு வதந்தி உலவுகின்றது. ரிலே ரேஸும் பார்க்க விறுவிறுப்பாய் இருந்தது, முதல் இரண்டு leg-ல் பின் தங்கி இருந்த இந்திய அணி, மூன்றாவதில் விட்டததைப் பிடித்து, நான்காவதில் கிடைத்ததைத் தக்க வைத்து தங்கத்தை வென்றது.

கிரிக்கெட்டே கதி என்ற நாட்டில், இது போன்று மற்ற ஆட்டங்களில் உழைத்து, வெற்றியும் பெரும் இவர்களைப் பொன்றவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். ஜாவா கோர்ஸ், கமாஸில் ஜாவளி, நுனி நாக்கு ஆங்கிலம், அமெரிக்க மாப்பிளை என்று வாழ்க்கையை பிளான் செய்து கொள்ளாமல், சொந்த முயற்சியினால் இது போன்ற தடகள ஆட்டங்களில் தீவிரமாய் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

காமன்வெல்த் தவிர, தலைவர் ஆனந்த் பில்போ-வில் ஆடிக் கொண்டிருக்கிரார். கார்லசனை வென்றதன் மூலம், தற்போதைய தர வரிசையில் உலக நம்பர் 1 ஆகவும் விளங்குகிறார். இதுவரை நடந்த ஆட்டங்களில் 1 வெற்றியும் மூன்று டிராகளும் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். கிராம்னிக் இரண்டு வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

கார்ல்சன் சொதப்பலாய் ஆரம்பித்தாலும், இப்போது நன்றாக ஆட ஆரம்பித்துள்ளார். ஷுரோவுடனான ஆட்டம் 175 நகர்த்தல்கள் வரை சென்றது. பல நேரங்களில் கார்சனின் கை ஓங்கி இருந்த போதும், அதை வெற்றியாக்க முடியாமல் போனது. நேற்ரைய ஆட்டத்தில் one-pawn-down நிலையிலும், end game பிஸ்தாவான கிராம்னிக்கிடம் மிகவும் போராடி டிராவைப் பெற்றார். 2009-ல் தொட்டதெல்லாம் தங்கமான கார்ல்சனுக்கு, இந்த வருட ஒலிம்பியாடும், பில்போ மாஸ்டர்ஸும் சறுக்கல்கள்தான். மாடலிங்கில் கவனம், டீனேஜுக்குரிய கவனச் சிதறல்கள், over confidence, திமிர்த்தனன் என்று பல காரணங்களை ரசிகர்கள் கார்ல்சனின் சரிவுக்குக் காரணமாகக் கூறுகின்றனர். சரிவு வராத ஆட்டக்காரரே கிடையாது. இதெயெல்லாம் கார்ல்சன் பொருட்படுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த வருடம் போனால் அடுத்த வருடம். அவருக்கென்ன வயசுக்கா பஞ்சம்?

கலியுக பிரத்யட்ச அவதாரம் என்று பலரால் கன்னத்தில் போட்டுக் கொள்ளப்படும் திருவாளர் ரொஜர் ஃபெடரர் மகராஜ், ஷாங்காயில் ஆடிக் கொண்டிருக்கிறார். எப்படியோ நல்ல படியாய் ஆடி, அடுத்த வருட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை இன்னும் சில பட்டங்களை வென்று, குறிப்பாய் சம்பிராஸின் விம்பில்டன் ரிக்கார்டை உடைக்க வேண்டி பலர் பூ மிதிக்கு வேண்டிக் கொண்டிருப்பதாக நம்பவே முடியாத வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

Advertisements