இன்றைக்கு காலையில் கறிகாய் வெட்டும்போது பெடரரும் இஸ்னரும் மோதிய ஆட்டத்தைப் பார்க்க நேர்ந்தது. மோதல் என்று சொல்வது கொஞ்சம், கொஞ்சமென்ன நிறையவே அதிகப்படிதான்- தன் கல்யாணத்திலே தான் மாப்பிள்ளையாக இல்லாத ஒருவனைப் போல் இருந்தார் இஸ்னர். இஸ்னரை டென்னிஸ் ரசிகர்கள் சுலபத்தில் மறந்துவிட முடியாது. போன விம்பிள்டனில் மஹூட்டுக்கு எதிரான ஆட்டத்தை11 மணி நேரத்துக்கு மேல் விளையாடி சாதனை படைத்தவர்.

ஆள் நல்ல உயரம்- எக்காரணத்தினாலோ அவரது தோற்றம் எனக்கு வைல் ஈ கொயோட்டை நினைவு படுத்துவதாய் இருந்தது.


image credit: Bite

இஸ்னரின் உயரம் எழடிக்கும் கொஞ்சம் கீழே, ஒரு மூன்று அங்குலம் கம்மி. உயர்ந்து இருந்தாலும் அதற்குத் தகுந்த பரப்பு வளர்ச்சி இல்லை. இவர் இன்னும் ஒரு நாற்பது அல்லது ஐம்பது கிலோ எடை கூட இருந்திருந்தால் இருந்திருந்தால் ரசிக ரசிகைகளின் இதயத்தில் இடம் பிடித்திருக்கக் கூடும். ஆனால் ஒல்லியாக ஒட்டடைக்குச்சி போல் இருப்பதால், பாவம், இவருக்குப் பரவலான ரசிகர்கள் இல்லை. என்ன ஒன்று, டென்னிஸ் விளையாடக் கடும் பயிற்சி எடுத்ததாலோ என்னவோ, இவரது தோள்கள் இரண்டும் நன்றாக விரிந்திருக்கின்றன. அதிலிருக்கிற சக்தியைத் திரட்டி வலுவான ஏஸ்கள் அடிக்கிறார். சர்வீஸ் போடும்போது பரவாயில்லையாய் இருக்கிற இவரது ஒல்லியான உடலும் விரிந்த தோளும், டென்னிஸ் கோர்ட்டில் பரபரப்பாக ஓடும்போது சிறகொடிந்த ஆஸ்ட்ரிச்சை நினைவு படுத்துகின்றன. “ஆஸ்ட்ரிச் ஓடி நீ எங்கப்பா பாத்தே?” என்றெல்லாம் அபத்தமாகக் கேட்கக் கூடாது. நான் இஸ்னர் ஓடிப் பார்த்திருக்கிறேன்.

image credit: New Balls, Please.

நான்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேனே தவிர, பெடரர் இந்த மாட்சை இஸ்னருடன் கை குலுக்கிய அடுத்த நிமிடத்திலேயே மறந்திருப்பார். இஸ்னருக்கும் இன்னும் இரண்டு மூன்று தடவை பெடரரோடு மோதினால் இந்த மேட்சில் குறிப்பிடும்படியாக எதுவும் நினைவிருக்கப்போவதில்லை. எந்த வகையிலும் முக்கியமாய் இல்லாத ஆட்டம் இது.

இருந்தாலும் நான் பெடரர் எப்படி ஆடுகிறார் என்பதற்காகவே இந்த ஆட்டத்தைப் பார்த்தேன். இஸ்னரும் முடிந்த வரை ஈடு கொடுத்துதான் ஆடினார். டென்னிஸ் தரவரிசையில் இருபதாவது இடத்தில் இருக்கிறார், அவரைப் பற்றி அலட்சியமாய்ப் பேசிய வாய்க்கு சோறு கிடைக்காது. இருந்தாலும் பாருங்கள், ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகவே இல்லை.

பெடரர் தினமும் அலுவலகத்துக்குப் போய் பைலைப் புரட்டும் குமாஸ்தாக்களின் ஆபிசர் போல் சுரத்தே இல்லாமல் “நெக்ஸ்ட், நெக்ஸ்ட்” என்றபடி அடுத்தடுத்து பந்துகளை டிஸ்போஸ் செய்து முடித்தார்.. இஸ்னராவது கொஞ்சம் வெறியோடு ஆடியிருக்கலாம். அவரும் பாலோ பண்டினி கார்டியனில் செய்த லைவ் பிளாக்கிங்கை படித்திருந்தாரோ என்னவோ, ஜாம்பியாகவே மாறி விட்டார்.

இரண்டாவது செட்டில் இரண்டு-இரண்டு என்ற நிலையில், ஒன்று நிகழ்ந்தது. அதை நான் பார்த்திருக்காவிட்டால் இப்படி பதிவு எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.

இஸ்னர் அழகாக பெடரரின் களப்பரப்பின் வலது மூலைக்கு ஒரு பந்தை அடித்தார். நாமாக இருந்தால் நின்ற இடத்திலேயே உறைந்திருப்போம். பெடரரோ நாலு கால் பாய்ச்சலில் அதைத் தாவிப் பிடித்து அடித்து விட்டார்- ஆனால் பாருங்கள், அதற்குள் இஸ்னர் சுறுசுறுப்பாக நெட்டுக்கு அருகில் வந்து விட்டிருந்தார். என்ன இருந்தாலும் உலகின் இருபதாவது ரேங்க் வீரராயிற்றே, இந்த மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பார்!

பெடரர் இஸ்னரைப் பார்த்தாரோ இல்லையோ தெரியாது, பார்த்திருக்காவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிப் போயிருக்காது- பெடரர் அடித்த பந்து சல்லிசாக இஸ்னரின் மட்டைக்கு வந்து சேர்ந்தது. நம்மை விடுங்கள், ஏழு வயது குழந்தைக்குக் கூட இந்த மாதிரி சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். பெடரர் களத்தின் வலது மூலையில். நாமோ நெட் அருகில். ட்ராப் ஷாட் ஆடுவதுதானே சரி?

ஆம், துல்லியமாக களத்தின் இடப்பக்கம் கோட்டை ஒட்டி விழுகிற மாதிரி இஸ்னர் பந்தை ட்ராப் செய்தார். நாமும் இஸ்னரும் இப்படியெல்லாம் யோசித்து அதை செய்து முடிப்பதற்குள் பெடரர் நாலு கால் பாய்ச்சலில், வேண்டாம், ஆறு கால் பாய்ச்சலில் அங்கு வந்து விட்டார். ட்ராப் செய்யப்பட்ட பந்து விழுந்து எழுந்து மீண்டும் தரையைத் தொட மிஞ்சிப் போனால் இரண்டு அங்குலம் இருக்கும்- பெடரரைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டது.

அப்புறம் என்ன, பெடரர் அதை குறுக்கு வெட்டாக ஒரு இருபது இருபத்தைந்து டிகிரி ஆங்கிளில் ஸ்லைஸ் பண்ணினார். டென்னிஸில் ப்ரேக் பாயிண்ட் ப்ரேக் பாயிண்ட் என்று சொல்வார்களில்லையா, அந்தா ஆட்டத்தில் அதுதான் ப்ரேக் பாயிண்ட். அதற்கப்புறம் இஸ்னர் பெடரர் அடிக்கிற ஷாட்களைப் பார்த்து தலையை ஆட்டிக்கொள்வதும் தனக்குத் தானே சிரித்துக் கொள்வதுமாக ஒரு மாதிரி ஆகி விட்டார்.

மேட்ச் ஓவர்.

— நாட்பாஸ்

Advertisements