நேற்று சாய்னா நெஹ்வால் இரு ஆட்டங்களில் வென்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிக்கு தேர்ச்சியுற்றார்.

முதல் ஆட்டத்தில் ஆடிய அயர்லாந்தின் காரொலின் பிளாக்குக்கு நேற்று “பிளாக் அவுட்” என்று சொல்லும் வகையில், 21-0, 21-2 என்று வெகு சுலபமாய் வென்றார். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பிளாக்கை வெகு எளிதில் தவறிழைக்க வைத்தார் சாய்னா. ஆட்டம் முடிந்து பேசுகையில், “ஒரு கட்டத்தில் நான் ரேலி ஆட முயன்றேன். ஆனால் பிளாக் பதட்டத்தில் நிறைய முறை கார்க்கை வெளியில் அடித்து பாயிண்டை இழந்தார்”, என்றார்.

அடுத்த ஆட்டத்தில், கனடாவின் ரைஸை எதிர்த்து சாய்னா ஆடினார்.

30 வயது ரைஸ் சாய்னாவின் நெடுங்கால நண்பராம். சில வருடங்களுக்கு முன் வரை ஆட்டங்களின் போது சாய்னாவுக்கு பல அறிவுரைகளைக் கூறுவாராம். குருவை மிஞ்சிய சிஷ்யையாகிவிட்டார் சாய்னா. தன்னை விட வயதில் இளையவர்கள் பலர் வந்துவிட்ட நிலையில், மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை சாய்னாவிடம் தோற்றுவிட்ட ஆனா ரைஸ், ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.

“நான் ஆட வந்த போது, எனக்கு பிரத்யேக பயிற்சியாளர் யாருமில்லை. பல ஆட்டங்களின் போது என் எதிராளிகளைப் பற்றிய, அவர்களை எதிர்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றி எல்லாம் ஆனா எனக்கு நிரைய டிப்ஸ் வழங்கியுள்ளார். சில காலம் அவருடன் சேர்ந்து நான் இரட்டையர் ஆட்டம் விளையாடினேன். அதுவும் நான் வளர பேருதவியாய் இருந்தது.”, என்கிறார் சாய்னா.

கண்கள் பனிக்க ஆட்டத்தை விலகினாலும் உள்ளம் ஆட்டத்திலேயே இருப்பதாகக் கூறும் ஆனா, “I know I am not fast enough to compete with these youngsters”, என்றும் கூறுகிறார். ”இப்படி grace-உடன் ரிடையராக இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போது அறிவு வரும்”, என்று கேட்டார் ஒரு நண்பர் :-).

சாய்னாவுக்கு தங்கத்துக்கும் இடையே இன்னும் இரு ஆட்டங்களே உள்ளன. அவர் வெல்லும் வரை டெல்லி அரங்கங்கள் அவர் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும். அவர் ஆட்டம் பார்க்க வரும் கூட்டத்தைத் தவிர, சாய்னா வெல்வதைப் பார்ப்பதற்கே டெல்லி வந்திருக்கும் தீபிகா படுகோனுக்காகவாவது கூட்டம் அலை மோதும்:-)

Advertisements