காமன் வெல்த் போட்டிகள் தொடங்கி 3 நாட்கள் ஓடிவிட்டன. ஆபீஸில் உழைக்க வேண்டிய நிர்பந்தப்படுத்தப் படுவதால், பல ஆட்டங்களைப் பார்க்க முடியவில்லை. ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் பார்த்த ஆட்டங்களில் பேட்மிண்டனும், டேபிள் டென்னிஸும் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தன.

குறிப்பாக நேற்றைய பேட்மிண்டன் ஆட்டத்தில் சாய்னா நெஹ்வாலின் ஆட்டம் படு விறுவிறுப்பாய் அமைந்தது.

Of course, It takes two for TangO!.

Wong Mew Choo (என்ன எழவு பேரு இது என்று நாம் நினைத்தாலும் வங்கிபுரப்பு வெங்கடசாய் லட்சுமண் என்ற பெயரைப் படிக்க முயலும் சீன சகோதரனை எண்ணி ஏதும் சொல்லாமல் இருப்ப்பதே உசிதம்;-))…சரி மேட்டருக்கு வருவோம்…

சூ-வை எதிர்த்து சாய்னா களமிறங்கும் போதே இந்தியா 0-2 trailing. கலப்பு இரட்டையர் பிரிவில் ஜ்வாலாவும் (இந்தப் பேர் நல்லா இருக்கு), டிஜுவும் நன்றாக விளையாடினாலும், மூன்றாவது செட்டில் அதீத அதிரடி முயற்சியால் பல தவறுகள் செய்து தோல்வியுற்றனர்.

சாய்னா இந்த ஆண்டே இதற்கு முன் இரு முறை சூ-வை வென்றிருந்தார் என்ற போதும், it was back on the wall situation.

டிடி ஸ்போர்ட்ஸ் உபயத்தால் பாதி நேரம் சாய்னாவின் ஆட்டத்தையும், உபத்ரவத்தால் மெகா சைஸ் கோலி குண்டை உருட்டி இந்தியா இங்கிலாந்திடம் தோற்றதையும் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  அவ்வாறு பார்த்த போதெல்லாம் சாய்னாவின் கை ஓங்கியே இருந்தது.

முதல் செட்டில் பரபரவென லீடை குவித்து முதலில் 11 புள்ளிகளை அடைந்த சாய்னா, பிரேக்குக்குப் பின் எதிர் கோர்ட்டுக்குச் சென்றார். அப்போதுதான் சூ-வின் மந்திரக்காளி வேலைகள் தொடங்கின. உங்களில் எத்தனை பேருக்கு மைக்கேல் சாங் என்ற டென்னிஸ் வீரரை நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை. நிச்சயம் திருப்பி அனுப்பவே முடியாது என்று நினைக்கவல்ல ஷாட்-களை எப்படியோ அடைந்து எதிராளியின் கோர்ட்டுக்குள் அனுப்புவதில் வெகு சமர்த்தர். 1989-ல் எட்பர்கின் ஃப்ரென்ச் ஓபன் கனவை ஐந்து செட்டில் தகர்த்தவர். 1-ஸ்லாம் வொண்டர் என்று வரலாறு அவர் பெயரில் முத்திரை குத்திவிட்ட போதும், அவர் ஆட்டத்தை பார்த்தவர்கள் நெஞ்சத்தில் நிச்சயம் இடம் பெற்றிருப்பார்.

நேற்று சூ-வின் ஆட்டம் எனக்கு சாங்கை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. சாய்னா கச்சிதமாய் அடிக்கும் டிராப் ஷாட்-களை எப்படியோ அடைந்து துல்லியமாய், பேஸ்லைனுக்கு வெகு அருகில், ஆனால் வெளியில் செல்லாமல், லிஃப்ட் செய்த விதம் படு சூப்பர். பற்பல புள்ளிகளில் ராலிகள் வெகு நேரத்துக்கு தொடர்ந்தன. சாய்னா கோர்ட்டின் அத்தனை முனைகளுக்கும் சூ-வை அலைய விட்ட போதும், கார்க்கை திருப்பி அனுப்பி, சாய்னா-வின் சின்ன தவறைக் கூட பயன்படுத்தி துல்லியமாய் ஆடி புள்ளியை வென்று பெரும் நெருக்கடியை உருவாக்கி வந்தார் சூ.

முதல் கேமில் சமநிலை இருந்த போது ஆட்ட ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் அஞ்சல் செய்யப்பட்ட போது சூ முதல் கேமை வென்றிருந்தார். சாய்னா கேம் பாயிண்டுகளை உபயோகித்துக் கொள்ளாத நிலையில் 26-24 என்று சூ வென்றார் என்பதை கழிசடை கமெண்டேடரின் திராபை ஹிந்தியின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

இரண்டாவது கேமிலும் சாய்னா 10-4 என்று முன்னணியில் இருந்தார். பிரேக்குக்குப் பின் சாய்னாவின் தவறுகளாலும் சூ-வின் துல்லிய ஆட்டத்தாலும் ஸ்கோர் சமநிலையை அடைந்தது. ஒரு கட்டத்தில் 15-14 என்று சூ முன்னணியில் இருந்தார். அதன் பின் அதிரடியாய் ஆடாமல், எதிராளி தவறு செய்யும் வரை காத்திருக்கும் ஆட்டத்துக்குத் தாவினார் சாய்னா. Back of the court-ல் இருந்து சாய்னா ஆடிய டிராப் ஷாட்கள், ஸ்மாஷ் செய்வது போன்று பாவ்லா காட்டி கடைசி நிமிடத்தில் ஷாட்டை மாற்றி அதை டிராப்பாக்கிய  சாதுர்யம், mid-court-ல் இருந்தபடி அவர் செய்த அதிவேக interception எல்லாம் காணக் கிடைக்காத காட்சிகள்.

ஒரு வகையில் சாய்னாவின் அற்புத ஆட்டத்தை பார்க்க முடிந்ததற்கு நாம் சூ-விற்குதான் நன்றி சொல்ல வெண்டும்.

மிகுந்த போராட்டத்துக்குப் பின் 21-17 என்று இரண்டாவது கேமை சாய்னா வென்றார்.

மூன்றாவது கேமின் தொடக்கத்திலேயே சூ தளர ஆரம்பித்தார். அவர் நன்றாக விளையாடிய போதும், மனதளவில் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது போலவே தோன்றியது. முடிந்த வரை போராடினார் என்ற போது, “நிச்சயம் வென்றே ஆக வெண்டும்”, என்ற சாய்னாவின் உறுதி, சூ-விடம் மிஸ்ஸிங். முதல் இரண்டு கேம்களை வைத்துப் பார்க்கும் போது, மூன்றாவது கேம் இந்தியத் தங்க மங்கைக்கு (எப்படியும் சிங்கிள்ஸில் தங்கம் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கைதான்) சுலபமாகவே அமைந்தது.  சூ-வின் பல புள்ளிகள் அவரது சிறப்பான ஆட்டத்தால் கிடைத்தது என்று சொல்வதை விட சாய்னாவின் தவறுகளால் கிடைத்ததென்று சொல்வதே பொருத்தம்.

வெற்றியை நெருங்க நெருங்க ரசிகர் கூட்டத்தின் ஆரவாரமும் பெருகியது. ஒரு கட்டத்தில் அரங்கமே “சாய்னாஆஆஆஆ சாய்னா” என்று கோஷமிடத் துவங்கியது.  21-14 என்று மூன்றாவது செட்டை வென்று மலேசியாவுக்கு எதிராக 3-0 என்று கிளீன் ஸ்வீப் ஆகாத வண்ணம் கௌரவத்தைக் காத்தார் சாய்னா.

தனி நபர் பிரிவில், மகளிருக்கான போட்டியில் விரைவில் தங்கம் வெல்வார் என்று நம்புவோம்.

மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் போன்ற ஆட்டங்களில் இந்தியா வென்ற போதும், அந்த ஆட்டங்களின் நுணுக்கங்களை அறியாமல் அவற்றை ரசிக்க முடியவில்லை.

டென்னிஸில் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் இரண்டிலும் இந்தியாவின் தங்கக் கனவு தங்காமல் போனது. சிங்கிள்ஸ் பிரிவில் சோம்தேவ் வர்மன் வெல்லக் கூடும். சானியா மிர்சாவுக்கு இன்னொரு செத்த பாம்பு கிடைத்தால் அவரும் தங்கம் வெல்வார். ஸ்போர்ஸ்டாரின் ஸ்டார் போஸ்டரில் அவர் படம் வெளி வரக் கூடும்.

இந்த வலைப்பூவை தனி நபராய் நடத்துவது கஷ்டமாக இருக்கிறது.கூட்டுப் பதிவாக நடத்தினால் நிறைய ஆட்டங்களைப் பற்றி எழுத முடியும்.

ஆள் சேர்க்க நான் ரெடி, வந்து சேர நீங்க ரெடியா?

Advertisements