சென்ற வார இறுதியில் பல ஆட்டங்கள்.

சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோல்வியுற்றார். சமயத்தில் இது போன்ற தோல்விகளும் ஆட்டத்தை விருத்தி செய்ய உதவும். தோல்விக்குப் பின் புயலாக புறப்படுவார் என்று நம்புவோம். ராஜீவ் காந்தி கேல் ரத்னாவை வென்றிருக்கும் இவரை வாழ்த்துவோம்.

ஆனந்த் இரண்டு நாளாய் ரேபிட் ஆட்டங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் கார்ல்ஸன், நார்வேயின் சிறந்த வீரர் (கார்ல்ஸனைத் தவிர) ஹாமர் மற்றும் ஜூடி போல்கர் பங்கேற்கும் போட்டியில் டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரண்டு நாள் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனந்த் கார்ல்ஸனிடம் இரண்டு ஆட்டங்களிலும் டிரா செய்தார். மற்ற இருவரிடமும் நான்கு ஆட்டங்களில் சுலபமாகவே வென்றார்.

இன்று மாலை முதலிடத்துக்கான இறுதி ஆட்டம் கார்ல்ஸனுக்கும் ஆனந்துக்கும் இடையே நடக்கவிருக்கிறது.

எனக்கென்னமோ ராபிட் ஆட்டங்கள் பார்க்கப் பிடிப்பதில்லை. பிடிப்பதில்லை என்று சொல்வ்சதை விட, அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்துப் பார்க்க முடிவதில்லை. 4 மணி நேரம் நடக்கும் கிளாசிகல் ஆட்டங்களில் கணினி உதவியுடன் நகர்த்தல்களை ஆய்ந்து நாம் அறிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. 20 நிமிடங்களுக்குள் 60 நகர்த்தல்களுக்கு மேல் நடக்கும் ராபிட் ஆட்டங்களில் அவ்வாறு ஃபாலோ செய்வது கடினம்.

இறுதி ஆட்டத்தைப் பார்க்க விழைபவர்கள் இங்கு காணலாம்: http://www.chessdom.com/news-2010/anand-carlsen-hammer-polgar-live

chessbase.com-ல் போட்டி பற்றிய விவரங்கள், ஆட்டங்களின் அலசல், படங்கள், விடியோ என்று நிறையவே காணக் கிடைக்கிறது.

ஷுமாக்கர் மீண்டும் ஜெயிக்காததை இன்று பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். வெறு எவன் ஜெயித்தால் எனக்கென்ன?

அமெரிக்க ஓபன் இன்று தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்களுக்கு சிவராத்திரி ஆரம்பம். என் ஆதர்ச புருஷர்களுள் ஒருவரான போரிஸ் பெக்கர், பட்டத்தை ஃபெடரரோ, முர்ரேயோ வெல்லக் கூடும் என்கிறார். பார்ப்போம் என்ன ஆகிறதென்று.

பெண்கள் பிரிவில் ஏதோ வாயில் நுழையாத பெயரைக் கொண்ட டென்மார்க் வீராங்கனைக்கு முதல் சீடாம். இது வரை எந்த கிராண்ட் ஸ்லாமும் வெல்லாதவர் மற்ற போட்டிகளில் செர்த்துக் கொண்ட புள்ளிகளின் மூலம் மட்டுமே நம்பர் ஒன் சீடாக முடிவது ஆச்சரியம்தான். கிராண்ட் ஸ்லாமில் எல்லாம் தோற்றும் உலக நம்பர் 1-ஆக பல மாதங்கள் இருந்த சஃபினாவைப் பார்க்க இது தேவலாம். தனது சீடிங்குக்கு பொருத்தமாக ஆடுவாரா வோஸ்னியாகி என்று பார்ப்போம்.

இங்க்லிஷ் பிரிமியர் லீகில் லிவர்பூல் ஒரு வழியாய் முதல் வெற்றியைக் கண்டது. மான்சஸ்டர் சிடி-யிடம் தர்ம அடி வாங்கியதன் பாதிப்பிலிருந்த வெளி வர இந்த வெற்றி உதவக் கூடும். உலகக் கோப்பையில் சோபிக்காது போன டொரேஸ் அடித்த கோலில் 1-0 என்று West Bromwich Albion-ஐ வென்றது.

மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகளைப் பெற்று செல்ஸி முதல் இடத்தில் உள்ளது. சில வாரங்களுக்குள் இந்த நிலை மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அமெரிக்க ஓபன் அப்டேட்டுன் விரைவில் வருகிறேன். அது வரை ஃபெடரரின் இந்த சாகஸத்தைப் பார்த்து மகிழுங்கள்: http://www.huffingtonpost.com/2010/08/20/roger-federers-trick-shot_n_688197.html

Advertisements