ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈ.எஸ்.பி.என் இரண்டிலும் கால்பந்து ஒளிபரப்பு என்பதால் இரண்டு ஆட்டங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் விம்பிள்டன் காட்டினார்கள். அவர்கள் காட்டிய நேரத்தில் ஃபெடரர் ஆடியது, அவர் ரசிகர்களின் அதிர்ஷ்டம்.

இரண்டாவது சுற்றில் முதல் செட்டை ஃபெடரர் வென்றிருந்தார். இரண்டாவதில் சமநிலை.

Bozoljac (இதைத் தமிழில் எழுத நான் தயாராக இல்லை) நல்ல உயரம். சர்வீஸில் நல்ல வேகம். சரிமரியாய் ஏஸ் தொடுத்த வண்ணம் இருந்தார். ஃபெடரரும் தன் பங்குக்கு அற்புதமான சர்வ் செய்து வந்தார். ஒவ்வொரு கேமும் 3 நிமிடங்களுக்குள் முடிந்தது.

ஒரு கட்டத்தில் கோரான் இவானிசிவிச்சும் பீட் சாம்பிராஸும் ஆடிய ஆட்டங்களை நினைவு படுத்திய வகையில் இருவரும் ஆடினர். இரண்டாவது செட் டை ப்ரேக்கில் ஃபெடரரின் சிறு தவறு செட்டை எதிராளிக்குக் கொடுத்தது.

ஃபெடரருக்குதான் ஜெயிப்பதைப் பற்றிய கவலை. எதிராளிக்கோ முடியைக் கட்டி மலையை இழுப்பது போலத்தான். போனால் ம….ப் போச்சு என்று இருந்துவிடலாம்.

அடுத்த செட்டில் ஃபெடரருக்கு அதிர்ஷ்டம். பிரேக் பாயிண்டில் டபிள் ஃபால்ட் போட்டு செட்டை தாரை வார்த்தார் Bozoljac.  ஆட்டம் முடிவதற்குள் கால்பந்துக்கு தாவிவிட்டனர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மஹானுபாவர்கள்.  அடுத்த செட்டும் சமநிலை தொடர்ந்து டை பிரேக்கில் Bozoljac-ன் சிறு பிழையால் ஃபெடரர் வென்றதை இணைய வழி அறிந்து கொண்டேன்.

Bozoljac போன்ற Serve and Volley Player-ஐப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. பெக்கர், எட்பர்க், சாம்பிராஸ் என்று நெட் கேமில் கலக்கிய சாம்பியன்கள் எல்லாம் இனிமேல் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். பந்துகளின் வேகமும், தரையில் வேகமும் கணிசமாக குறைக்கப்பட்டு பேஸ்லைன் ஆட்டக்காரர்களுக்கு சாதகமாகவே டென்னிஸ் மாறிவிட்டது. 20-20-யின் வருகைக்குப் பின் இன்னொரு லட்சுமண் போன்ற வீரர் இந்தியாவில் உருவாக முடியுமா என்பது பெரிய கேள்விக் குறி என்பது போலத்தான் இதுவும். (கிரிக்கெட் தவிர என்று பேர் வைத்தாலும், சமயத்தில் சில விஷயங்களை விளக்க கிரிக்கட்டை விலக்க முடியாமல் போய்விடுகிறது:-))

முதல் ரவுண்டில் ஃபெடரரின் பேக்ஹாண்டும், டிராப் ஷாட்டும் காணக் கிடைத்தன என்றால் இரண்டாவது ரவுண்டில் அவரது துல்லியமான சர்வீஸ் காணக்கிடைத்தது.

பொதுவாக ஃபெடரரின் ஆட்டம் சிறந்த நிலையில் உள்ளது. நடால், முர்ரே, ராடிக் ஆகியோரும் சிறப்பாகவே ஆடுகின்றனர். இன்னொரு நல்ல விம்பிள்டன் இந்த வருடமும் காத்திருக்கிறது.  (Mahut-Isner ஆட்டம் முடியும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். அது முடியாவிடில் இந்த வருட சாம்பியன்ஷிப்பே அம்பேல் ஆகிவிடும்:-))

கால்பந்து ஆட்டத்தின் போதும் ஃபெடரர் ஆட்டங்களை தடையில்லாமல் காண வழி உண்டா?

அடுத்த

Advertisements