இன்னொரு உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது.

நான் பார்த்த முதல் கால்பந்துப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை அர்ஜெண்டினா வீழ்த்தி சாம்பியன் ஆனது. மரடோனாவின் மந்திரக் கால்கள் மாயம் புரிந்த தருணங்கள் அவை.

விவரம் தெரிந்து பார்க்க ஆரம்பித்தது 1990-ல் இருந்துதான். சூயிங் கம் வாங்கினால் ஒரு கால் பந்து வீரர் படம் போட்ட கார்ட் கொடுக்கிரார்கள் என்பதற்காக நூற்றுக் கணக்கில் சூயிங் கம் வாங்கிய ஆண்டு அது.

மரடோனா, கிளின்ஸ்மென், கனிகியா, கரேகா, வால்டராமா, லினேகர், வான்பாஸ்டன்…

இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் ஜெர்மனியும் மோதின. அன்றுதான் விம்பிள்டன் இறுதி ஆட்டமும். இரண்டு போட்டிகளிலும் நான் விரும்பியவர் தோல்வியுற்றனர். ஐந்து செட்டில் பெக்கர் தோற்றதை இன்று நினைத்தாலும் வலிக்கிறது.

1994 ஆட்டங்கள் எல்லாம் அர்ர்ர்ர்ர்ர்ர்ர்த்த ராத்திரியில். வீட்டில் பெர்மிஷன் வாங்கப் பாடாய் பட்டேன். பள்ளியில் தூங்கித் தூங்கி வழிந்தேன். மரடோனா நீக்கப் பட்டதும், ரொமாரியோ ஆதர்ச புருஷர் ஆனார்.

1998-ல் எதனாலோ ரொனால்டோவைப் பிடிக்கவில்லை. ரொமாரியோவை நீக்கியது காரணமாய் இருக்கலாம். இறுதியில் ஜிதான் ஜாலம் புரிந்து ஃபிரான்ஸ் வென்ற போது களிப்பில் துள்ளினேன்.

2002-ல் ஆசியாவில் ஆட்டம் நடக்கும் போது நான் அமெரிக்காவில் இருந்தேன். ரிவால்டோவும், ரொனால்டினோவும் ரொனால்டோவோடு சேர்ந்து அதகளப் படுத்தினர். இங்கிலாந்துக்கு எதிராக ரொனால்டினோ டேவிட் சீமனை ஏய்த்து அடித்த ஃப்ரீ கிக்…அப்பப்பா…..

2006 படு மொக்கை யாய் இருந்தது. கிளப்பில் கலக்கிய வீரர்கள் எல்லாம் உலகக் கோப்பையில் கோட்டை விட்டனர். அழுமூஞ்சி ஆட்டம் ஆடும் இத்தாலி வென்றது. போகட்டும். யாரோ ஒருவர் ஜெயித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த வருடம் பல நல்ல அணிகள். பெயர்களை மட்டும் பார்த்தால் அர்ஜண்டினாவுக்கு நல்ல வாய்ப்பு. மெஸ்ஸி மரடோனாவின் மறுஅவதாரம் ஆயிற்றே! கிழட்டு வெரோன் இன்னும் அணியில் இருக்கிறார். ஆடுவாரா தெரியவில்லை. ஸ்பெய்னும் நல்ல வலுவாகத் தெரிகிறது. இங்கிலாந்து ஊத்திக் கொள்ளும் என்று நினைக்கிறேன். காகா ஆடுவதைப் பொறுத்தே பிரேசிலின் தலையெழுத்து முடிவாகும். கிரீஸ் டார்க் ஹார்ஸாக இருக்கும். 2004-ல் யூரோ பட்டத்தை வென்றது போல இந்த வருடம் உலகக் கோப்பையில் சில முன்னணி நாடுகளை வீட்டுக்கு அனுப்பக் கூடும்.

யார் வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.

Advertisements