கடைசியாக நடந்த இரண்டு ஆட்டங்கள் நடப்பதற்கு முன், யாரேனும் இரண்டும் டிராவில்தான் முடியும் என்று சொல்லியிருப்பின், அந்த முடிவு ஆனந்துக்கு சாதகமான ஒன்று என்றே எண்ணியிருப்பேன். எட்டாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின் டொபலோவின் பக்கம் இருந்த momentum இரு டிரா ஆட்டங்கள் மூலம் குறைந்திருக்கும் என்றும் கூறியிருப்பேன்.
இரு ஆட்டங்களைப் பார்த்த பின், இரு ஆட்டங்களும் சமநிலையின் முடிந்த போதும், முடிவு ஆனந்துக்கு சாதகமாக அமையவில்லை என்ற எண்ணமே எழுகிறது. அதற்கு முக்கிய காரணம், நான் bias இல்லாமல் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை. 100% ஆனந்த் ரசிகனின் பார்வையிலேயே எழுதுகிறேன்.
ஒன்பதாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை. நான்கு முறை Catalan Opening-ஐ ஆடிய ஆனந்த், ஒரு வழியாய் அதைத் தவிர்த்து, Nimzo Indian-ல் ஆட்டத்தை தொடங்கினார். ஆட்டம் Middle Game-ஐ அடைந்த போது, ஆனந்த் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ஆடுவதை விட, நிச்சயம் தோற்றுவிடாமல் இருப்பதை உறுதிசெய்து கொண்டுவிட்டு, அதன் பின், ஜெயிப்பதைப் பற்றி யோசிக்கலாம் என்று ஆடுவது போலவே தோன்றியது. முதல் 19 நகர்த்தல்களுக்குப் பின், இருவரின் காய்களும் நல்ல நிலைகளை அடைந்திருந்தன. இருபதாவது நகர்த்தலில் டொபலோவ், ஆனந்தின் d-pawn-ஐ வெட்டியதன் மூலம், இரு யானைகளுக்காக ஆனந்த் தனது ராணியை தியாகம் செய்வதற்கான வாய்ப்பையளித்தார்.
அதன் பின், ஆனந்தின் வளர்ந்த நிலைக் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. 39-ஆவது நகர்த்தலில் ஆனந்தின் யானை டொபலோவின் 7-th rank-ஐ ஆக்கிரமித்து, கருப்பு ராஜாவை 8-th rank-ஐ விட்டு வெளி வர முடியாதபடிச் செய்திருந்தது. (ஆட்டம் தொடங்கும் போது, கருப்பு pawn-கள் அணி வகுத்து நிற்கும் கட்டங்கள் 7-th rank. அதற்கு பின் இருக்கும் கட்டங்கள் 8th rank.)
7th rank யானையை அங்கேயே நிலைக்க வைத்து, டொபலோவின் ராஜாவை 8-th rank-ல் எங்கு வைத்தாலும் check என்ற சூழலை ஏற்படுத்தினால் ஆட்டம் க்ளோஸ். எட்டாவது ராங்கிலும் ராஜா காலி, ஏழாவது ராங்குக்கும் வர முடியாது. Check and Mate. சாதாரண லாஜிக்தானே?
இதெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும் நமக்குச் சுலபமாகப் புரியும். உலக சாம்பியன் பட்டம் ஏற்படுத்தும் அழுத்தத்துக்கு இடையில், time control-ஐ அடைய இன்னும் ஒரு நகர்த்தல் வைத்தாக வேண்டும் என்ற நிலையில், சாதாரணமாய் புரியும் விஷயங்களில் கூட மிகச் சிறந்த ஆட்டக்காரருக்கும் தவறு ஏற்படலாம்.
ஏற்பட்டது!
ஆனந்த் தனது ஏழாவது ராங்க் யானையை எட்டாவது ராங்கில் வைத்து செக் வைத்தார். இதனால் கருப்பு ராஜா, சுலபமாக ஏழாவது ராங்குக்குத் தப்பித்து, அதன் பின், மெது மெதுவாய் queen side-ல் தப்பிக்க வாய்ப்பு உண்டானது.
டொபலோவ் ஆட்டத்தை சமன் செய்துவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டான சமயத்தில், அவரும் அவர் பங்கிற்கு 46-ஆவது நகர்த்தலில் ஆனந்தின் h-pawn-ஐ வெட்டி ஆனந்துக்கு இன்னொரு வாய்ப்பை அளித்தார். ஆனந்தின் கை ஓங்கியே இருந்த போதும், அவரது நகர்த்தல்களுக்கு நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார். ஆட்டம் ஐந்து மணி நேரத்துக்கு மேலும் தொடர்ந்த போது, ஆனந்தின் நகர்த்தல்களில் துல்லியம் சற்றே குறைய ஆரம்பித்தது. அதனால், ஒரு கட்டத்தில் தனது குதிரையை பலி கொடுத்து டொபலோவின் “ராணியான pawn-ஐ” வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
74-ஆவது நகர்த்தலுக்குப் பின் ஆனந்தின் யானைகள் a3, a4 கட்டங்களில் இருக்க, வெள்ளை ராஜாவோ G-file-ல் இருந்தார். டொபலோவ் தனது ராணியின் மூலம் எத்தனை நகர்த்தல்களுக்கு வேண்டுமானாலும் செக் வைத்துக் கொண்டே போகலாம். இதற்கு Perpetual Check என்று பெயர். முடியவே முடியாத செக் வரிசையை இறுதியில் டிராவாகத்தான் கொள்ள முடியும்.
டொபலோவின் சாமர்த்தியத்தை விட, ஆனந்தின் கவனக் குறைவே இந்த முடிவுக்குக் காரணம். வெற்றி கை நழுவிப் போனதில் ஆனந்த் பெரிய ஏமாற்றத்தை அடைந்திருப்பார். என் போன்ற ரசிகனுக்கே அடுத்த நாள் முழுவதும் இந்த முடிவு நெருடலாகவே இருந்த நிலையில், ஆனந்த் எப்படி கருப்புக் காய்களுடன் ஆடுவார், என்ற கவலையும் மேலிட்டது.
கடைசி மூன்று போட்டியின் டொபலோவுக்கு இரண்டு முறை வெள்ளை. இரண்டு முறை டிரா செய்ய உதவிய Slav defense-ம் எட்டாவது ஆட்டத்தில் கைவிட்ட நிலையில், ஆனந்த் மீண்டும் ஒரு முறை அதே ஓபனிங்கை ஆடுவாரா? அல்லது கைவிட்ட ஓபனிங்கை நிராகரிப்பாரா?
ஆனந்த் Slav defense-ல் ஆட்டத்தைத் தொடங்கவில்லை என்ற போதும், அவர் முதல் (தோல்வியை அடைந்த) ஆட்டத்தில் ஆடிய Grunfeld-யே மீண்டும் உபயோகித்தார். முதல் ஆட்டத்தில் தோல்வியுற்றாலும், அதற்கு ஓபனிங் காரணம் இல்லை. ஆனந்த் நகர்த்தல்களை மறந்ததே காரணம். அதனால், மீண்டும் ஒரு முறை Grunfeld-ஐ அரங்கேற்றியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
பத்தாவது ஆட்டத்தில் டொபலோவ் தன் வழக்கத்துக்கு மாறாக ஆடினார் (Something really really fishy!!!!). டொபலோவ் ஆனந்த் தவறிழைப்பார் என்று எண்ணினார் போலும். தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை அரவே தவிர்த்தார். ஆனந்தே முதலில் novelty-ஐ விளையாடினார். டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடும் ஆட்டங்களில் ஆனந்தே நகர்த்தல்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வார். இந்த ஆட்டத்தின் டொபலோவே நேரத்தில் பின் தங்கினார். நிறைய exchange-களை டொபலோவ் சுலபமாகவே அனுமதித்தார். ஆட்டம் முப்பது நகர்த்தல்களைத் தாண்டுவதற்கு முன், இருவரும் யானைகளையும், ராணியையும் இழந்திருந்தனர்.
ஆட்டம் end game-ஐ அடைந்த போது, டொபலோவிடம் இரு பிஷப்களும் இருந்தன. அவரது ராஜாவும் நடு நாயகமாய் அவரது நன்கு முன்னேறிய d-pawn-ஐ காத்த படி வீற்றிருந்தது. ஆனந்திடம் ஒரு பிஷப்பும் ஒரு குதிரையும் இருந்தன. ஆனந்தின் நிலை மோசம் என்று சொல்ல முடியாவிடினும், டொபலோவ் தோற்க வாய்ப்பேயில்லை. ஆனந்த் தவறாக விளையாடினால் தோல்விதான்.
இது போன்ற நிலைகளில் டொபலோவ் திளைப்பார். அனால் இந்த ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாய் ஆனந்தின் தவறுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆனந்தின் பெரிய பலம், அவரது வேகம். இந்தத் தொடரில் பல ஆட்டங்களில் அந்த வேகம் காணக் கிடைக்கவில்லை. இந்த ஆட்டத்திலோ மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தி, டொபலோவை சங்கடப் படுத்தினார். ஒரு கட்டத்தில், டொபலோவ் தவறான நகர்த்தலை வைத்து ஆனந்தின் அடங்கியிருந்த குதிரையை விடுவித்தார். இந்த நகர்த்தலே அடுத்த சில நகர்த்தல்களில் Bishop Exchange நிகழ வழி வகுத்தது.
அறுபது நகர்த்தல்களுக்குப் பின், நிச்சயம் டிராதான் என்ற நிலை ஏற்பட்ட போது, ஆனந்த் draw offer செய்தார். டொபலோவோ draw offer கொடுக்கவும் மாட்டேன். ஏற்கவும் மாட்டேன் என்று கூறியிருந்தார். பல ஆட்டங்களில், டிரா என்று தெரிந்த பின்னும் offer செய்யாமல், repetition மூலம் டிரா ஆகும் வரை ஆடினார். இந்த ஆட்டத்தில் டிராவை ஆனந்த் முன் மொழிந்ததும், டொபலோவ் முரண்டு பிடிக்காமல், சமர்த்தாக ஏற்றுக் கொண்டார்.
போட்டி முடிய இன்னும் இரண்டு ஆட்டங்களே உள்ளன. Rest day-க்கு அடுத்த நாள் ஆனந்துக்கு வெள்ளை என்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும், ஆனந்த் safe-ஆக ஆடுவார் என்றே படுகிறது. ”கடைசி ஆட்டத்தில் டொபலோவின் டீம் முற்றிலும் புதிய சூழல்களுக்குள் ஆனந்தை இழுத்தால் என்ன ஆகும்? கடைசி ஆட்டத்துக்காக பிரம்மாஸ்திரத்தைப் பதுக்க வேண்டித்தான், பத்தாவது ஆட்டத்தில் பதுங்கினாரா டொபலோவ்?”, என்றெல்லாம் இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.
பன்னிரெண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் புள்ளிகள் சமநிலையில் இருந்தால், நான்கு Rapid ஆட்டங்கள் நடை பெறும். பொதுவாகப் பார்த்தால், அதில் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனந்த்தான் best ever rapid chess player என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், இந்தத் தொடரில் ஆனந்தின் துல்லியமின்மையும், வேகமின்மையும் முன் கூறிய கூற்றுக்கு முரணாக இருக்கின்றன. rapid ஆட்டங்களுக்குப் பிறகும் சமநிலை என்றால் இரண்டு Blitz ஆட்டங்கள். அதிலும் முடிவு தெரியவில்லை எனில் ஒரு Armageddon ஆட்டம். இந்த ஆட்டத்தின் விதிமுறைகளை விருப்பம் இருப்பவர் தேடிப் பார்த்துக் கொள்ளலாம். சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில், கிட்டத்தட்ட டாஸ் போட்டு ஜெயிப்பவருக்குப் பட்டம் கொடுப்பது போன்ற முறைதான் இந்த ஆட்டம்.
போட்டியின் முடிவில் ஆனந்த் பட்டத்தை இழந்தால், ஒன்பதாவது ஆட்டத்தில் அவர் கோட்டை விட்டவை அவரை வாழ்நாள் முழுவதும் வாட்டும். அப்படி நிகழாமலிருக்க, ஒரு வலுவான திட்டத்தை ஆனந்தின் டீம் உருவாக்கியிருக்கும் என்று நம்புவோம்.

இந்தப் பதிவை இடும் வேளையில் 11-வது ஆட்டம் டிராவில் முடிந்து விட்டது.  நாளை கடைசி ஆட்டம். டென்ஷன் தலைக்கேறுகிறது! ஆனந்த் குறைந்த பட்சம் டிராவாவது ஒப்பேற்றுவாரா?

பார்ப்போம்!

Advertisements