சில பல வேலைகளால் நிகழ்ந்த தாமதத்துக்கு மன்னிக்கவும்.

காலிறுதி ஆட்டங்களில் முதலாவதாக பிரேசிலும் நெதர்லாந்தும் மோதின.

வழக்கமான பிரேசில் அணியை விட, இந்த வருட அணியின் மீது அதிக நம்பிக்கை இருந்தது. ஜிகினா வேலைகள், தனி நபர் ஆட்டம் பொன்றவற்றை கோச் டுங்கா அரவே நீக்கி இருந்தார். கிட்டத்தட்ட தேர்ந்த ஐரோப்பிய கிளப் அணியைப் போலத்தால் பிரேசில் செயல்பட்டு வந்தது. இதனால், இரண்டாம் சுற்று வரையிலான ஆட்டங்களில் பிரேசிலின் தற்காப்பு கன கச்சிதமாய் அமைந்திருந்தது.

நெதர்லாந்தோ ரோபனின் வருகைக்குப் பின்னர்தான் சோபிக்கத் தொடங்கியிருந்தது. இருப்பினும், ரொபினோ, காகா, ஃபாபியானோ, நில்மார் போன்றோரின் தாக்குதல்களை டச்சு தற்காப்பு தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்களுக்கு பிரேசில் நிதானமின்றி காணப்பட்டது. நிறைய ஃபௌல்கள். அதன் பின் சுதாதரித்துக் கொண்ட பிரேசில் அட்டாக், அடுத்த ஐந்து நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தது. அதில் முதலாவது ஆஃப்ஸைட் கோல். பத்தாவது நிமிடத்தில் ஃபெலிபே மெல்லோவின் பாஸ் ஆளில்லாத ரோபினோவை அடைந்த பின் கோலானது. மைதானத்தின் மத்தியில் இருந்து நேராக கோல் நோக்கி செலுத்திய பந்தை வேடிக்கை பார்த்தது டச்சு தற்காப்பு. எங்கே இங்கிலாந்து வீரர்களிடம் பாடம் பயின்றனரோ டச்சு வீரர்கள் என்று சந்தேகிக்க வைத்தது.

ரொபினோவின் இன்னொரு அற்புதமான முயற்சி பந்தை பெனல்டி ஏரியாவுக்குள் எடுத்துச் செல்ல, அதை வாங்கி கண நேரத்தில் Back heel-ஆல் ஃபாபியானோ காகாவிடம் அனுப்ப, Full Blooded curling drive ஒன்றை கோல் நோக்கி செலுத்தினார் காகா. கோல்கீப்பரின் அற்புதமான முயற்சி காகாவின் முதல் கோலை மறுத்துவிட்டது.

முதல் அரையின் முடிவில் ஒரு கோல் முன்னிலையில்தான் பிரேசில் இருந்தது என்றாலும், நெதெர்லாந்து ஆட்டத்தில் மீண்டு வர முடியும் என்று அப்போது தோன்றவில்லை.

பிரேசிலின் அட்டாக் நன்றாக இருந்தாலும் டிஃபென்ஸில் முந்தைய ஆட்டத்தில் காணக் கிடைத்த ஸ்திரம் அன்று இல்லை. இன்னொரு வினோதமான விஷயம்: ரோபனிடம் பந்து செல்லும் போதெல்லாம் அவர் வீழ்த்தப்பட்டார். அவர் நல்ல ஆட்டக்காரர்தான். அதற்காக அவரிடம் பந்து சென்றாலே கோலாகிவிடுமா என்ன? பிரேசிலின் இந்தப் பதற்றம் தேவையற்றது. வேறொரு ரெஃப்ரீயாக இருந்திருந்தால் முதல் அரையிலேயே சில பிரேசில் வீரர்கள் வெளியேற்றபட்டிருப்பர். சமயத்தில் ஸ்டேல் மேட்டில் மாட்டிய ராஜா போல ரோபனைச் சுற்றி நீலச் சட்டைகள் மயம். தன் அரையினுள் எண்ணற்ற முறை ரோபனை வீழ்த்தி ஃப்ரீ கிக்குகளை வாரி வழங்கியது பிரேசில்.

ரொபினோ போன்றோர் அமைதியாக ஆடாமல், சிங்கம் பட சூர்யா கணக்கில் எக்ஸ்ப்ரெஷன்களைக் காட்டி ரெஃப்ரீயையும் எதிர் அணியினரையும் முறைத்துக் கொண்டே இருந்தது அனாவசியம்.

53-வது நிமிடத்தில் நெதர்லாந்துக்குக் கிடைத்த ஃப்ரீ கிக்கில் சம்பிரதாயமாக ஸ்னைட்டரும், ரோபனும் காலால் பந்தைத் தொட்டதும், ஸ்னைடர் பந்தை கோல் நோக்கி கிராஸ் செய்தார். பந்தின் திக்கில் எதிர்பட்டவரெல்லாம் பிரேசில் வீரர்களே. பந்தை கோல்கீப்பர் ஜூலியோ சீஸார் கையால் குத்தி வெளியனுப்ப எம்புகையில், அவருக்கு மேலாய் ஃபெலிப்பே மெலோ எம்பினார். பந்து அவர் எம்பலுக்கு சற்று அதிக உயரத்தில் சென்று, அவர் தலையை வருடிக் கொடுத்தபடி கோல்கீப்பரை ஏய்த்து, கோலுக்குள் பிரவேசித்தது.

முதலில் own goal-ஆகக் கருதப்பட்ட இந்த கோல், பின்னால் ஸ்னைடரின் கோலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் சமமானதும் பிரேசில் நிதானத்தை சுத்தமாக இழந்தது. நெதர்லாந்தோ அதைக் கச்சிதமாய் பயன்படுத்தி பிரேசிலை நெருக்க ஆரம்பித்தது. சற்றைக்கெல்லாம் இன்னொரு கோல்.

ரோபனின் கார்னரை Kuyt தலையால் டீ-க்குள் அனுப்ப, ஸ்னைட்டரின் துல்லிய ஹெட்டர் 2-1 ஆக்கியது. அற்புதமான டீம் கோல்.

கடைசி 22 நிமிடங்களுக்கும் நெதர்லாந்தின் கையே ஓங்கியிருந்தது. ஃபாபியானோவை நீக்கி நில்மாரை அனுப்பியும் பிரயோஜனம் இல்லை. Own Goal அடித்த மெலோ திரும்ப ஊருக்குப் போக பயந்திருக்கலாம். ஒரேடியாய் டச்சு குடியுரிமை வாங்கி நெதர்லாந்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்திருக்கலாம். இன்னொரு முறை ரோபனை அநியாயமாய் வீழ்த்தி ரெட் கார்டு வாங்கி வெளியேறினார்.  பதினொரு பேருடனேயே தடுமாறிக் கொண்டிருந்த அணி பத்து பேருடனா ஜெயிக்க முடியும்? கடைசி பத்து நிமிடங்களில் நெதர்லாந்து முன்னிலையை அதிகப்படுத்தாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவே ப்ரேசிலுக்கு சரியாயிருந்தது.

பிரேசிலுக்கு அறாவது உலகக் கோப்பை இந்த ஆண்டு இல்லை.

மூன்றாவது ஆட்டத்தில் ஜெர்மெனியும் அர்ஜெண்டிவாவும் மோதின. மரடோனா, பெக்கன்பாயரைப் போல கேப்டன், கோச் என்று இரு நிலைகளில் அர்ஜெண்டினாவுக்கு உலகக் கோப்பை வாங்க வழி செய்வார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது.

சென்ற உலகக் கோப்பையில் காலிறுதியில்தான் இந்த இரு அணிகளும் மோதின. பெனல்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி வென்றது. இவ்வாண்டு அர்ஜெண்டினா பழி வாங்கும் என்று ஆக்டோபஸ் ஜோசியத்தைத் தவிர அனைத்தும் கூறின.

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஷ்வைன்ஸ்டைகரின் ஃப்ரீ கிக்கை முல்லர் தலையால் அடித்தார். பந்து சரியாக அவர் தலையில் படக் கூட இல்லை. கோல் கீப்பருக்கு கைக்கு சுலபமாக எட்டக் கூடிய தூரத்தில் அதிக வேகமின்றி வந்த பந்தை கவர முடியாமல் போனதால் ஜெர்மனி முன்னிலை பெற்றது.

1-0 என்றாலும் 87 நிமிடங்கள் இன்னும் இருந்தன. என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

ஜெர்மனியின் பாஸிங் கன கச்சிதம். காற்று கூடப் புக முடியா வண்ணம் தற்காப்பும் இருந்தது. இரு அணிகளும் பல தாக்குதல்களைத் தொடுத்து வந்தன என்றாலும் வழக்கமாக அர்ஜெண்டினா ஆட்டம் காணக் கிடக்கவில்லை.

அர்ஜெண்டினாவின் ஆட்டங்களில் எது இல்லாத போதும் வேகத்துக்கு குறைவு இருககது. பந்து கிடைத்துவிட்டால் பறந்தடித்து கோல் நோக்கிச் செல்வதில் வல்லவர்கள். ஆனால் இன்றோ ஒவ்வொரு அர்ஜெண்டீன வீரரும் அவரை மார்க் செய்த ஜெர்மன் வீரரை விட ஒரு மாற்று குறைவான வேகத்திலேயே ஓடினார். பந்து கிடைத்த மாத்திரத்தில் அடிக்காமல், தயங்கித் தயங்கி ஆடியது போது, ஆடுவது அர்ஜெண்டினாதானா என்ற சந்தேகம் எழுந்தது.

முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன்னிருந்தே ஜெர்மனி முன்னிலையை தக்க வைத்தால் போதும் என்று ஆடத் தொடங்கிவிட்டது. One goal lead is non-existent, என்று பலர் கூறினாலும், பெரும்பாலான அணிகள் முன்னிலையை அடைந்ததும் தற்காத்து ஆடுவதே நிதர்சனமாய் நடக்கும் உண்மை. 1990-ல் பல முக்கிய ஆட்டங்களில் மரடோனாவின் அணி இப்படி ஆடித்தான் வென்றது.

இரண்டாம் பாதியிலும் இதே நிலை தொடர, அர்ஜெண்டினாவும் கோலடிக்க முழு முனைப்புடன் களமிறங்கியது. இதில் பாதகம் என்னவென்றால் கவனமெல்லாம் கோலடிப்பதில் இருக்க தற்காப்பு பலவீனமாகிவிடும். போதாக் குறைக்கு அர்ஜெண்டினா கோல்கீப்பரும் ரொம்பவே சுமாராக விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அர்ஜெண்டினாவின் தாக்குதல் முடிந்த கணத்தில் ஜெர்மனி ஒரு தாக்குதலைத் தொடுத்தால் அதை அர்ஜெண்டினா எதிர்கொள்வது கஷ்டம். இங்கிலாந்து தோற்ற ஆட்டத்திலும் இதுவே நடந்தது.

இந்த ஆட்டத்திலும் இரண்டாம் பாதி முழுவதும் இதுதான் நடந்தது. விளைவு அடுத்தடுத்து க்ளொசாவுக்கு இரண்டு கோல்கள். மூன்று கோல் பிந்தங்கிய நிலையில் அர்ஜெண்டினா மீள்வது சாத்தியமே இல்லை என்ற நிலையில், ஏற்கெனவே சுமாராக ஆடிய வீரர்கள் சுரத்தின்று ஆட ஆரம்பித்தனர்.

வீடியோ கேம் கார் ரேசில் ஸ்டியரிங்கைத் திருப்பித் திருப்பி வாளாயிருக்கும் இடர்களைச் சுற்றிச் சுற்றி வண்டியை செலுத்தி முன்னேறுவது போலத்தான் ஜெர்மனியின் நான்காவது கோல் அமைந்தது. அர்ஜெண்டின வீரர்கள் சும்மாயிருக்க அவர்களைக் ஒற்றை ஆளாய் கடந்து வந்த ஷ்வைன்ஸ்டைகர், கோலருகில் இருந்த ஃப்ரெட்ரிச்சிடம் கொடுக்க ஸ்கோர் 4-0. மரண அடி.

அர்ஜெண்டினாவின் தோல்விக்கு மரடோனாவே காரணம் என்று சொல்ல முடியாது. அவர் என்னதான் களனமைத்தாலும் ஆடுவது வீரர்கள்தானே? வழக்கமாய் ஆடுவதைப் போல அரவே ஆடாவிடில் எந்த கோச்தான் என்ன செய்ய முடியும்? ஒரு அணி சுமாராக ஆடி இன்னொரு அணி சின்ன் அ சொதப்பல் செய்தாலே ஆட்டம் சாய்ந்துவிடும். இந்த ஆட்டத்திலோ ஒரு அணியோ மிகச் சிறப்பாக ஆட, இன்னொரு அணியோ படு கேவலமாய் விளையாடியது. விளையை சொல்லவும் வேண்டுமா என்ன?

எந்த நேரத்தில், “என்னதான் ஐரோப்பாவில் காசை தண்ணியாய் செலவழித்து கால்பந்தை வளர்த்தாலும் தென்னமெரிக்க வீரர்களின் ரேஞ்சே தனிதான்.”, என்று போன கட்டுரையில் சொன்னேனோ தெரியவில்லை. நான்கில் மூன்று அணிகள் வெளியேறிவிட்டன. அதுவும் ஐரோப்பிய நாடுடன் ஆடிய மூன்று அணிகளுக்கும் சங்கு.

நான்காவது ஆட்டத்தில் ஸ்பெயின், பாரகுவேயை எதிர்த்து ஆடியது.

போர்ச்சுகலை வென்ற அணியையே இந்த ஆட்டத்திலும் களமிறக்கினார் ஸ்பெயினின் கோச் Vicente del Bosque. பாரகுவேயோ ஜப்பானை வென்ற அணியில் ஆறு மாற்றங்கள் செய்திருந்தது. சாண்ட கிரஸ், பெனிடெஸ், பாரியோஸ் போன்ற முன்கள வீரர்களுக்கு துவக்க அணியில் இடமில்லை.

Under achievers tag-ஐ நீக்க ஸ்பெயினுக்கு நல்ல வாயப்பிருந்தது போலவே, Dream run-ஐத் தொடர பாரகுவேக்கும் நல்ல வாய்ப்பு.

முதல் பாதியின் ஸ்பெயினின் பாஸிங்க் கேமை விளையாட முடியாதபடி பாரகுவே குறிக்கீடு செய்தது. டேவிட் வியா போன்ற வீரர்கள் முன்னேற முடியாமல் நெருக்கப்பட்டனர். பாரகுவேயின் இரண்டு மூன்று லாங் ரேஞ்ச் முயற்சிகளில், பாரகுவே வீரருக்கும் பந்துக்குமான தூரம் இன்னும் சில செ.மீ குறைந்திருந்தால் கச்சித ஹெட்டர் மூலம் பாரகுவே கோல் பெற்றிருகக்க் கூடும்.

இரண்டாம் பாதியிலும் இந்த வகை ஆட்டமே தொடர்ந்து இரு கோல்கீப்பர்களும் அதிகம் சிரமமில்லாமல் இருந்தது.

அறுபதாவது நிமிடத்தில் ஸ்பெயினின் பிகே (Piquet) பனல்டி ஏரியாவுக்குள் பாரகுவேயின் கர்டோஸொவை வீழ்த்தியதால் பாரகுவேக்கு பெனல்டி. முன்னணி பெற மகத்தான வாய்ப்பு. மிகப் பெரிய அப்ஸெட்டுக்கு மிக அருகில் இருந்த கர்டோஸோ அடித்த பெனல்டியை சரியாக கணித்துப் பிடித்தார் ஸ்பெயின் கோல்கீப்பர் காஸியாஸ்.

இது நடந்த சில நொடிகளில் டேவிட் வியா பாரகுவே வீழ்த்தப்பட்டு பெனல்டியை வென்றார். Xabi Alonso-வின் பெனல்டி கிக் கோலுக்குள் செல்ல ஸ்பெயின் குதூகலித்தது. அந்தக் குதூகலம் அரை நொடிக்குள் அடக்கப்பட்டது. பந்தை அலோன்ஸொ அடிப்பதற்குள் ஸ்பெயின் வீரர் ராமோஸ் பெனல்டி ஏரியாவுக்குள் வந்துவிட்டதால், முதலில் அடித்தது ரத்தாகி மீண்டுமொரு முறை அடிக்க வேண்டியதாகிவிட்டது. சென்ற முறை அடித்த இடத்திலேயே இரண்டாம் முறையும் அடித்தார் அலோன்ஸோ. இம்முறை உஷாராக இருந்த பாரகுவே கோல்கீப்பர், பந்தை தடுத்தாலும் பிடிக்க முடியவில்லை. ரீபவுண்டில் அடிக்க வந்த வியாவை கோல்கீப்பர் வீழ்த்தினாலும் ரேஃப்ரீ கண்ணில் படாததால் ஸ்கோர் 0-0 என்றே தொடர்ந்தது.

ரீப்ளேயில் பார்த்த போது பாரகுவே அடித்த பெனல்டியின் போதும் அடிப்பதற்கு முன் வீரர்கள் பெனல்டி ஏரியாவுக்குள் நிழைந்திருப்பது தெரிய வந்தது. ரெஃப்ரீயின் கவனத்தைப் பெறாததால், ஸ்பெயின் பிழைத்துக் கொண்டது. இரு அணிகளும் இழந்த வாய்ப்பை எண்ணி வருந்திய போதும், எதிரணி முன்னிலை பெறாததை எண்ணி அமைதியுற்றிருக்கும்.

இந்தக் குழப்பங்கள் முடிந்த சில நிமிடங்களுக்குள் இனியஸ்டாவின் அற்புதமான முயற்சியை கோல் போஸ்ட் தடுத்தது. போஸ்டில் பட்டு திரும்பி வந்த பந்தின் திக்கில் வியா இருந்ததால், இன்னொரு கோல் முயற்சி. இம்முறையும் பந்து போஸ்டில் பட்டாலும், பந்து கோலுக்குள் சென்றது.

ஏழு நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில் பாரகுவேயால் தக்க பதிலடி கொடுக்க முடியவில்லை.

ரொம்பவே காலம் தாழ்த்தி சாண்ட கிரஸ் போன்ற முன்கள வீரர்களை களமிறக்கியதற்கு பாரகுவே அதிகம் வருந்தியிருக்கும்.

கடைசி நிமிடத்தில் சாண்ட கிரஸும் பாரியோஸும் செய்த முயற்சிகளை காஸியாஸ் லாவகமாய் தடுத்து, தன் அணி அரை இறுதிக்குள் முதன் முறையாகச் செல்வதை உறுதி செய்தார்.

அரையிறுதியில் ஸ்பெயின் ஜெர்மனியுடன் மோத, உருகுவே நெதர்லாந்திடம் மோதுகிறது.

1,3,4 ஆட்டங்களைப் பற்றி எழுதி, இரண்டாம் ஆட்டத்தைப் பற்றி எழுதாமல் இருப்பதை எண்ணி சிலர் வியக்கக் கூடும்.

ஆட்டத்தைப் பார்க்காத போதும், பார்த்தது போலவே எழுதும் அளவிற்கு ஓர் எழுத்தாளனாக நான் இன்னும் வளரவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

நன்றி: இட்லிவடை

இரண்டாம் சுற்றின் கடைசி நாளன்று போட்டியில் எஞ்சியிருந்த ஒரே ஆசிய நாடான ஜப்பான் பாரகுவேயுடன் மோதியது.

இரு அணிகளுமே உலகக் கோப்பையின் காலிறுதிக்கு இதற்கு முன் தேர்வானதில்லை..

பாரகுவே தேர்வுச் சுற்றுகளில் தென் அமெரிக்க அணிகளுள் சிறந்தவையான அர்ஜெண்டினாவையும் பிரேசிலையும் வென்று உலகக் கோப்பைக்கு வந்துள்ளது. முதல் சுற்றில் ஸ்லோவாகியாவை வென்றும் இத்தாலியுடனும், நியூசிலாந்துடனும் டிரா செய்தும் இர்ண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பாரகுவே ஆட்டத்தை ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஜப்பானும் சளைத்த அணியில்லை.

குறிப்பாக சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜபுலானி பந்துகளைக் கொண்டும் சிறப்பான ஃப்ரீ கிக்குகள் அடித்த ஒரே நாடு ஜப்பான்தான்.

ஆட்டம் முதலில் மந்தமாகத்தான் இருந்தது. முதல் 20 நிமிடங்களுக்கு இரு அணியின் கோல்கீப்பர்களும் ஈயோட்டிக் கொண்டிருந்தனர். பாரகுவே பந்தை வசப்படுத்துவதில் வெற்றி பெற்றாலும் கோல் அடிப்பதற்கான களன்களை அமைக்க முடியாமல் தவித்தது.

20-வது நிமிடத்தில் லுகாஸ் பாரியோஸ் ஜப்பானிய தடுப்பாளர்களை ஏய்த்தும் பந்தை நேராக கோல்கீப்பரிடம் அடித்ததால் முயற்சி வீணானது. உடனேயே ஜப்பானின் counter attack-ல் Matsui-ன் லாங் ரேஞ்ச் முயற்சி கோல் போஸ்டில் பட்டு கோலாகாமல் போனது.

அதன் பின்னும் ஓரிரு வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் வாய்த்த போது கோல் ஏதும் விழவில்லை. ஜப்பானின் முக்கிய வீரர் ஹொண்டா தீவிரமாய் கட்டம் கட்டப்பட்டுருந்தார். ஆட்டம் சுரத்தேயில்லாமல் இரண்டாம் பாதி, extra time-ன் இரு பாதிகள் என்று நகர்ந்து goalless-ஆக முடிந்ததால் வெற்றியை நிர்ணயிக்க பெனல்டி ஷூட் அவுட் தேவை பட்டது. இரண்டாம் சுற்றின் எட்டு ஆட்டங்களில் பெனல்டிக்குப் போன ஒரே ஆட்டம் இதுதான்.

முதலில் பாரகுவே கோலடித்துத் துவங்கி வைக்க ஜப்பானும் தொடர்ந்தது. 3-2 என்று பாரகுவே முன்னிலையில் இருந்த நிலையில் ஜப்பானின் கமானோ பெனல்டியை அடிக்க வந்தார். கோல் கீப்பரின் கைக்கு எட்டா தூரத்தில் பந்தை செலுத்திய போதும் பந்து கோலுக்குள் செல்லாமல் போஸ்டில் பட்டு வெளியேறியது. பெனல்டியிலும் ஃப்ரீ கிக்கிலும் சிறந்து விளங்கிய ஜப்பானுக்கு அதிர்ஷ்டமில்லை. அடுத்து அடித்த இரு பாரகுவே வீரர்கள் கோல் அடித்ததால் 5-3 என்ற நிலையில் கடைசி கிக் அடிப்பதற்கு முன்னதாகவே ஆட்டம் நிறைவு பெற்றது. ஜப்பான் கோல்கீப்பர் கண்ணில் கண்ணீருடன் உண்மையை உள் வாங்கப் போராடிக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் பாரகுவேயின் கோச் மார்டினோவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். பொதுவாக ஆட்டக்காரர்களை விட emotionally stable ஆட்களாகத்தான் பயிற்சியாளர்கள் இருப்பர். மார்டினோ அதற்கு விதிவிலக்கு. இது வரை எந்த பாரகுவே அணியும் செய்யாத சாதனையை இந்த அணி செய்துள்ளது.

கால் இறுதியில் உள்ள எட்டு அணிகளில் 4 தென்னமெரிக்க அணிகள். என்னதான் ஐரோப்பாவில் காசை தண்ணியாய் செலவழித்து கால்பந்தை வளர்த்தாலும் தென்னமெரிக்க வீரர்களின் ரேஞ்சே தனிதான்.

இரண்டாம் சுற்றின் கடைசி ஆட்டத்தின் இரு பெரும் அணிகள் மோதின.

2008 ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயினும் பல நல்ல ஆட்டக்காரர்களைக் கொண்ட போர்ச்சுகலும் கால் இறுதியில் நுழைய மோதின.

முந்தைய ஆட்டத்துக்கு நேர்மாறாக ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே சரவெடிகள் சிதறத் தொடங்கின.

2-வது நிமிடத்தில் ஃபெர்னாண்டோ டொர்ரெஸின் முயற்சியை போர்ச்சுகல் கீப்பர் எடுவர்டோவின் அபாரமான காத்தார். அதன் பின் எண்ணற்ற காப்புகளை செய்யப் போகிறோம் என்று அவர் அக் கணத்தில் உணர்ந்திருக்க மாட்டார்.

முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடின. பிரேசிலுடனான ஆட்டத்தில் மாற்றாக வந்து கலக்கிய சிமாவ், இந்த ஆட்டத்தில் துவக்கத்திலிருந்தே களத்தில் கலக்கினார். ஸ்பெயின் சிலீயை வென்ற அணியை மாற்றாமல் களமிறங்கியிருந்தது.

டொர்ரெஸைத் தொடர்ந்து டேவிட் வியாவும் (ஆங்கில ஸ்பெல்லிங்கைப் பார்த்து வில்லா பங்களா என்றெல்லாம் சொல்லக் கூடாதாம். Villa என்று எழுதினாலும் அவர் பேர் வியாவாம்.) கோல் கீப்பரை சோதித்தார்.

ஸ்பெயினின் ஒவ்வொரு அசைவுக்கும் பதிலடி கொடுத்தபடி போர்ச்சுகலும் விளையாடியது.

30 மீட்டர் தொலைவில் இருந்து டியாகோ முழு வீச்சுடன் அடித்த பந்து ஸ்பெயின் கீப்பர் கஸியஸ் கையிலிருந்து நழுவியது. அவர் செய்த புண்ணியம் கோலாகவில்லை. ஆகியிருந்தால் மீண்டும் அவரும் அவர் கேர்ள் ஃபிரண்டும் போர்ச்சுகலுக்கு குடி பெயர வேண்டியிருந்திருக்கும்:-)

கிளப்பில் அதிகளவு பணம் வாங்கும் போர்ச்சுகல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவும், ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ டொரெஸும் பெரும்பாலும் அடக்கமாகவே ஆடி ரசிகர்களை ஏமாற்றினர்.

ரொனால்டோவின் ஒரு லாங் ரேஞ்ச் ஃப்ரீ கிக் மட்டுமே அவரது திறனுக்கு நியாயம் செய்யும் விதமாய் விளங்கியது. ஸ்பெயினுக்காக 51-வது முறையாய் காப்டனாய் களமிறங்கி சாதனை புரிந்த கோல்கீப்பர் காஸியஸ் சில பதட்டமான கணங்களை ஸ்பெயின் ரசிகர்களுக்குக் கொடுத்தாலும், ஒருவாறு சமாளித்துவிட்டார்.

இரண்டாம் பாதியிலும் சம நிலை தொடர்ந்த போது, டொர்ரெஸுக்கு பதிலாக லொரெண்ட் (Llorente) களமிறங்கினார். பார்சிலோனா கிளப்பின் ஆட்டங்களில் காணக்கிடைக்கும் துல்லியமான ஷர்ட் பாஸிங் மூலம் பந்தை அதிக நேரம் வசப்படுத்தி வந்தது ஸ்பெயின்.

60-வது நிமிடத்தில் லொரெண்டின் ஹெட்டர் கீப்பரிடம் நேராக சென்றது. அடுத்த நிமிடமே வியாவின் curling shot போஸ்டில் பட்டது. ஆட்டத்தின் momentum ஸ்பெய்ன் பக்கம் திரும்பியது. 63-வது நிமிடத்தில் இனியெஸ்டாவிடமிருந்து வந்த பந்தை பெனல்டி பெட்டிக்குள் இருந்து பேக் ஹீல் மூலம் வியாவிடம் திருப்பினார் Xavi. வியாவின் ஷாட்டை எடுவர்டோ தடுத்தாலும் பந்து திரும்ப வியாவிடமே வந்தது. முதல் முறை இடக்காலால் உதைத்தவர், இம்முறை கால் மாற்றி வலக்காலால் பந்தை கோல்கீப்பருக்கு மேலடித்து 1-0 ஆக்கினார்.

வியாவின் 4-வது கோல் மூலம் அர்ஜெண்டினாவின் ஹிகுயென், ஸ்லோவாகியாவின் விட்டக்குடன் அதிக கோலடித்தவராக இணைந்துகொண்டார்.  எடுவர்டோவின் சாகசங்கள் இல்லையெனில் இப் பட்டியலில் முதல் இடத்தில் தனி ஆளாய் கூட இடம் பெற்றிருப்பார் வியா.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்10  shots on target அடித்தது என்ற விவரத்தைப் பார்க்கும் போதே அவர்கள் போர்ச்சுகலுக்கு ஏற்படுத்திய நெருக்கடியை உணர்ந்திடலாம்.

கோலுக்கு பின் போர்ச்சுகலின் எதிர்ப்பு முற்றிலும் தகர்ந்தது. பந்து பெரும்பாலும் ஸ்பெயின் வசமே இருக்க போர்ச்சுகல் வீரர்கள் எரிச்சலுற்றவர்களாய் தெரிந்தார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல, ஆட்ட இறுதிக்கு சில நிமிடங்கள் முன் முழங்கையால் இடித்து ஸ்பெயின் வீரரை வீழ்த்தியதால் ரிகார்டோ கோஸ்டா வெளியனுப்பப்பட்டார்.

போட்டியை தோல்வியுடன் தொடங்கிய ஸ்பெயின் ஒரு வழியாய் யூரோ சாம்பியன்கள் எப்படி ஆடுவார்கள் என்று எதிர்பார்ப்போமோ அப்படி ஆட ஆரம்பித்துவிட்டனர். பிரேசில், அர்ஜெண்டினாவோடு ஸ்பெயினும் உலகக் கோப்பையை வெல்லக் கூடிய favorite அணியாக விளங்குகிறது.

கடைசி எட்டு அணிகளில் இனி எந்த அணி வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆட்டத்தின் போது சிறு பிழையோ, கோச்சின் களனமைப்பில் ஏற்படும் கவனக் குறைவோ அணியின் வெளியேற்றத்துக்குக் காரணமாகிவிடலாம். சிலர் வெல்வர். சிலர் வீழ்வர். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும். முகம் தெரியாதவர்கள் கதாநாயகர்கள் ஆகக் கூடும்.

இந்தியா மாதிரி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நாட்டில் இருப்பவர்களுக்கு எந்த டென்ஷனும் இல்லை. எவன் ஜெயித்தாலும் சந்தோஷப்படலாம். நல்ல ஆட்டம் எவர் ஆடினாலும் ரசிக்கலாம்.  இதைவிட வேறு என்ன கொடுப்பினை வேண்டும்?;-)

Follow

Get every new post delivered to your Inbox.