அறிவிப்பு


கிரிக்கெட் தவிர இன்று முதல் கூட்டுப் பதிவாகிறது. முதல் கூட்டாளி நண்பர் நாட்பாஸ் (என்னும் நடராஜன் பாஸ்கரன்). வெகு நாட்களாக அவரது வலைப்பூவில் கலக்கி வருபவர். இங்கும் அடிக்கடி எழுதவுள்ளார். என்னைப் போல மொக்கையாய் ஆட்டத்தைப் பற்றி மட்டும் எழுதாமல், படிக்கவும் பார்க்கவும் வெகு சுவாரஸ்யமாக இருக்கும் படி பதிவிடுவதில் வெகு சமர்த்தர்

வாங்க தல! கலக்கிப் போடுங்க.

ரஷ்யா மகளிர் டென்னிஸ் ஆட்டத்தில் தங்க மங்கைகளை அள்ளித் தருகிறது, தினம் இரண்டு பேர் நம் கவனத்தை கவருபவர்களாக இருக்கிறார்கள். உலகெங்கும் இருக்கிற மகளிர் டென்னிஸ் விளையாட்டைத் தொடர்ந்து கண்டு களிக்கிற ரசிகர்கள் ரஷ்யாவுக்கு ரொம்பவே கடமைப்பட்டவர்கள்.

இவர்களின் வெற்றிக்குப் பின்னால் அசாதாரணமான கடின உழைப்பு இருக்கிறது. அதைப் பத்திப் படிச்சுத் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கறவங்க இங்கே படியுங்கள்- Tennis Now, Washington Post. அப்படி இல்லையா, மகளிர் டென்னிஸை வெறித்தனமா பாக்கறவங்க எல்லாரும் அடுத்த பத்தியைத் தாண்டி குதிச்சு உங்களுக்காக நாங்கள் தொகுத்து வைத்திருக்கும் டாப் பிப்டியில் உள்ள ரஷ்ய வீராங்கனைகளின் படங்களை மட்டும் பார்க்கவும்.

நேற்று ரஷ்யாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி இருக்கிற Anastasia Rodionova, இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானில் செட்டில் ஆகி இருக்கிற சானியா மிர்ஸாவை தோற்கடித்துத் தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றார். இறுதிப் போட்டியில் சானியாவின் ஸ்கோர்- 6-3, 2-6, 7-6 (7/3).

இவர்தான் Anastasia Rodionova:

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் அம்பது பேரில் ரஷ்யப் பெண்கள்-

4. Vera Zvonareva

9. Elena Dementieva

12. Svetlana Kuznetsova

17. Nadia Petrova

19. Anastasia Pavlyuchenkova

21. Maria Sharapova

26. Maria Kirilenko

27. Alisa Kleybanova

43. Ekaterina Makarova

50. Dinara Safina

சரியாக இருபது சதவிகிதம் ரஷ்யப் பெண்கள். இவர்களைத் தவிர கொஞ்சம் வெளியே-

56. Alla Kudryavtseva

இப்படி ஒரு பெரும் படையே ரஷ்யாவில இருந்து கிளம்பி வந்து உலகத்தை மிரட்டிக்கிட்டுருக்கு. இவங்களுக்கு எதிரா நாம என்ன விளையாடி என்னத்த ஜெயிக்க!

சானியா மிர்ஸா

ரஷ்யாவில் பிறந்திருந்தா நான் கூட மிஹைல் லேர்மாண்டோவ் போல் ஓர் உன்னத கவிஞன் ஆகி இருப்பேன்!

- நாட்பாஸ்

ஜுலை 11 அன்று உலகக் கோப்பை ஃபைனலுக்கு ஜரூராக ஆஜராகிவிடுவேன் என்று சொல்லிச் சென்னைக்குச் சென்ற எனக்கு இன்பம் (அதிர்ச்சி எல்லாம் இல்லை) காத்துக் கொண்டிருந்தது. அதே நாளில் என் மகள் சுசரிர்த்ரா, டாக்டர்களின் கணிப்பை பொய்யாக்கி, 11-ஆம் தேதியே பிறந்துவிட்டாள்.

“She didn’t want to miss the final”, என்றார் ஒரு நண்பர். உண்மையில், “She wanted me miss the final”. எது எப்படியோ, நான் கடைசியாக சப்போர்ட் செய்த ஸ்பெய்ன் அணி பட்டம் வென்றதில் எப்ரும் மகிழ்ச்சி. இதை ஒரு துண்டு காகித்தத்திலாவது எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு மண்டலம் ஓடிவிட்டது. 15 நாள் பெடர்னிடி லீவினால் சேர்ந்து இருக்கும் வேலையினாலும், சென்னைக்கும் பெங்களூருக்கும் வாரா வாரம் ஷட்டில் அடிப்பதாலும் கிரிக்கெட்தவிர-வை கண்டு கொள்ல முடியவில்லை.

இடையில் ஃபெடரர் சில முறை தோற்று ஒரு முறை சின்சினாடியில் பட்டம் வென்றார். Women’s grand Prix-ல் கொனெரு ஹம்பி சொதப்பினார், ஃபார்முலா ஒன்னில் ஷுமாக்கரின் முயற்சிகள் ரமேஷ் கிருஷ்ணனின் சர்வீஸை ஏனோ ஞாபகப்படுத்தின. EPL தொடங்கிவிட்டது. Spanish league-ம் தொடங்கியாயிற்று. மாரடோனாவை வலிக்காமல் அடித்து விட்டுக்கு அனுப்பிவிட்டனர். ரொபினோ எங்கே போவது என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்.

கடசியாக ‘ஆனந்த் இந்தியரா”, என்று சிலர் சந்தேகப்பட்டு மீடியாவுக்கு தீனி போட்டனர். டைம்ஸ் நௌ-ல் ஆனந்தே தொலை பேசினார். “I think the matter is resolved”, என்றவரை, “But sir!, what about the thousands of people who are enraged about the way you are being treated”, என்று விடாமல் கிண்டிக் கொண்டிருந்தார் தொகுப்பாளர்.  பிரச்னை தீர்ந்து விட்டால் பிழைப்பு என்னாவது என்ற கவலை பாவம்.

இவற்றைப் பெற்றி விவரமாக எழுத முடியாமல் போய்விட்டது.

சரி  போகட்டும். எழுதாததால்தான் என்ன முழுகிவிடப் போகிறது?

நான் விவரமாக எழுதியதைப் படித்து கடுப்படைந்த பலருக்கு கடந்த சில வாரங்கள் நல்ல உறக்கம் வாய்த்திருக்கும். அப்படிப் பட்ட மஹானுபாவர்களுள் ஒருவர் விகடனில் பணியாற்றுகிறார். தான் பெற்ற நிம்மதி பெருக இவ்வயகம் என்ற நோக்கோடு, நான் எழுதாமல் இருப்பதை பாராட்டி விகடன் வரவேற்பறையில் போன வாரம் (?) இந்த வலைப்பூவைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

பொறுக்குமா எனக்கு? அதனால்தான், “சூனியம், சூனியத்தால் சூனியத்தை உருவாக்கும்”, இந்த வெட்டி பதிவு.

அமெரிக ஓபன் தொடங்கப் போகிறது. ஃபெடரர் இன்னொரு பட்டம் வெல்வாரா? போன வருடம் வென்ற டெல் போட்ரோ இந்த வருடம் ஆடப் போவதில்லை. நடால் வெல்லாத ஒரே கிராண்ட் ஸ்லாம் அமெரிக்க ஓபன்தான். பல முறை க்முயன்று இந்தப் போட்டியை போர்க் வெல்ல முடியாமல் போனது போலவே நடாலுக்கும் விதி சதி செய்யுமா என்று பார்க்க வேண்டும்.

சதுரங்க உலகிலும் விரைவில் நிறைய போட்டிகள் நடக்கவிருக்கின்றன. கர்ல்சனும் ஆனந்தும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ராபிட் ஆட்டங்கள் ஆடப் போகின்றனர்.

சாய்னா நெஹ்வால் பாரிஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். பட்டம் வென்றால் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரராக ஆடும் வாய்ப்புகளும் உள்ளனவாம். எந்த சேனிலில் இவர் ஆட்டம் காட்டுகின்றனர், எத்தனை மணிக்கு ஆட்டங்கல் நடக்கின்றன என்று எந்தத் தகவலும் கிடைக்க்வில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் கோடி புண்யம்.

ஆக விளையாட்டு ரசிகர்களுக்கு டி.வி-யை மூட அவசியமே இல்லாத படி நிறையவே ஆட்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. முடிந்த வரை, இந்தத் தளத்திலும் அப்டேட் நடக்கும். பார்க்க முடியாதவர்கள் படித்து மண்டை காயலாம்.

உங்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்வதை விட வேறென்ன பெரிய இன்பம் இருக்க முடியும்?

சயாகா சாடோவுக்கு எதிரான இறுதிப் போட்டி சில வினாடிகள் முன் முடிவடைந்தது.

சாய்னா நெஹ்வால் இரண்டாவது முறையாக இந்தோனேஷிய ஓபன் போட்டியை வென்றுள்ளார். மூன்று வாரங்களில் மூன்றாவது பட்டம் வெல்லும் சாய்னா உலக த்ர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நியோ ஸ்போர்ட்ஸ் தயவில் முழு ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது.  சாடோ தர வரிசையில் 26-வது இடத்தில் இருப்பினும் மிகப் பிரமாதமாக ஆடினார்.

கோர்டின் ஒரு பக்கத்தில் காற்று சற்றே சாதகமாக இருந்தது. சாய்னா முதலில் அதைப் பயன்படுத்து 11-5 என்று முன்னணியில் இருந்தார். 11 புள்ளிகள் எடுத்ததும் கோர்ட்டின் எதிர்பக்கத்துக்கு மாற்ற சாடோ ஸ்கோரை சமன் செய்தார். 11-11-க்கு பிறகு இருவரும் மாறி மாறி புள்ளிகள் வென்றனர். ஒரு கட்டத்தில் முதன் முறையாக சாடோ 18-17 என்று லீடைப் பெற்றார். அதன் பின் சாய்னா துல்லியமாக ஆடி 21-19 என்று முதல் கேமை வென்றார்.

சாடோவை பவர் கேம் கொண்டு ஜெயிக்க நினைத்த முயற்சிகள் எல்லாம் வீணாகவே போயின. அடிக்கு அடி கொடுப்பதில் சாடோ வல்லவராகத் தெரிகிறார். அதிகம் வலக்கை ஆட்டக்காரர்களை எதிர் கொள்வதால், இடக்கை ஆட்டக்காரரை எதிர்கொள்ளத் தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்து கொள்வதில் சாய்னாவுக்கு கொஞ்சம் சங்கடம் இருப்பதாகத் தெரிந்தது.

இரண்டாவது கேமில் சாடோவின் டிராப் ஷாட்களும் கடினமான angle-களும் ஆட்டத்தை அவருக்கு சாதகமாக்கின. 6 புள்ளிகள் பின்ண்டைவு அடைந்ததும் சாய்னா கொஞ்சம் எரிச்சலுற்றவராய் தெரிந்தார். அவப்போது நல்ல புள்ளிகளை சாய்னா வென்றாலும் சாடோ சுலபமாக வென்றார்.

கேம் விவரம் 1-1 என்றா போடு மொமெண்டம் சாடோவின் பக்கம்.

மூன்றாவது கேமில் சாய்னா பவர் ஆட்டத்தை அறவே தவிர்த்து பொறுமையாய் எதிராளி தவறு செய்யும் வரை காத்திருக்கும் ஆட்டத்துக்குத் தாவினார். சாடோவும் பிர்ஷரைத் சரியாக எதிர் கொள்ளத் தெரியாதவராய் நிறைய தவறிழைத்தார். காற்று தன் பக்கம் இருக்கும் போதும் அதனை உபயோகிக்காமல் over push செய்தது சொந்த செல்வில் சூனியம்.

மூன்றாம் கேமை வென்று பட்டம் பெற்ற சாய்னாவுக்கு வயது இருபதே.

அதிகம் படாடோபம் இன்று, மீடியா வலைக்குள் விழாமல், ஆட்டத்தை மட்டும் கவனம் செலுத்தி இமாலய முன்னேற்றம் அடைந்துள்ளார் சாய்னா.

விரைவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்.

ஆனந்த் மீண்டும்  தன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்!!!!!

ஆனந்த் ஜெயிப்பார் என்று நினைக்கவில்லை. I’m glad I was wrong.

இது வெற்றியில் திளைக்க வேண்டிய நேரம்.

விவரங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!!!!!!!!!!!!

ஆனந்த் நிஜமாகவே  “விஸ்வநாதன் ஆனந்த்தான்” !!!!!!

விக்ருதி வ்ருட முதல் நாளில், அசுர சந்தி வேளையில், ஆண்டி முர்ரேயும் ஃபிலிப் கோல்ஷ்ரைபரும் மோன்டே கார்லோ களிமண் தளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணமான மாலைப் பொழுதில் இந்த வலைப்பூவின் முதல் பதிவை வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.

சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். பெரும்பாலான இந்தியர்களைப் போலவே எனக்கும் கிரிக்கெட்டின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது, “இதெல்லாம் கிரிக்கெட்டா?” என்று ஐபிஎல்-ஐப் பார்த்து அலுத்துக் கொண்டாலும்,  தொடர்ந்து பார்ப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. இருப்பினும் இந்தப் பதிவில் கிரிக்கெட்டைப் பற்றி எழுதக் கூடாது என்று எண்ணியுள்ளேன்.

ஒரு விளையாட்டை நுட்பமாக ரசிப்பது என்பது ஒரு வகை இசையை ஆழ்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவம்.  போரிஸ் பெக்கரும், ஸ்டிஃபான் எட்பர்கும் ஆடும் போது, ஆலத்தூர் சகோதரர்கள் மாறி மாறி ஸ்வரம் பாட்வது போல இருக்கும். ஃபெடரரின் backhand winner-கள் மதுரை மணியின் தார ஸ்தாயி கார்வைகள் போலத் துல்லியமானவை. சமீபத்தில், ஆர்ஸெனலுக்கு எதிரான ஆட்டத்தில், மெஸ்ஸி கோல்கீப்பரின் தலைக்கு மேல், அநாயசமாக பாலை உந்திவிட்ட போது, யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் வந்து விழுந்த மோராவைப் போலத் தோன்றியது.  சரி சொல்ல வந்து விஷயத்தை விட்டு எங்கெங்கோ செல்கிறேன்…

குறிப்பாக டென்னிஸ், கால்பந்து, ஃபார்முலா ஒன் ஆகியவற்றுக்கு இந்தியாவில் பெரும் following இருக்கிறது. (செஸ்ஸும், பேட்மிண்டனும் என்னைப் போன்ற ஒரு சிலரால் பார்க்கப்படும் விளையாட்டுகள்). நேற்று கூட ஸ்கிலாச்ச்சி, க்ளின்ஸ்மென், ஹாகி,  வால்டராமா, ரொமாரியோ என்று பல நாட்டு கால்பந்து ஆட்டக்காரர்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ் வலைப்பூ உலகில் இவற்றைப் பற்றி தொடர்ந்து யாரும் எழுதுவதாக (எனக்குத்) தெரியவில்லை (தெரிந்தால் தெரியப் படுத்தவும்). ஆர்வம் இருப்பின் இவ் வலைப்பூவைக் கூட்டுப் பதிப்பாகக் கூட கொண்டு வரலாம்.

இந்த வருடம் விளையாட்டு ரசிகர்களுக்கு வரப் பிரசாதம். வருடம் தவறாமல் வரும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபார்முலா ஒன் போட்டிகள், கால்பந்து சேம்பியன்ஸ் லீக் போன்றவற்றைத் தவிர கால்பந்து உலகக் கோப்பை, செஸ்ஸில் உலக சாம்பியம் போட்டி ஆகியவையும் நடைபெற உள்ளன.

பழைய விம்பிள்டன் நாயகர்கள், மரடோனாவின் மாயக் கால்கள், மெஸ்ஸியின் மந்திர ஜாலங்கள், ஷுமாக்கரின் சூறாவளிப் பயணங்கள் என்றெல்லாம் எழுத ஆசை. பார்ப்போம் நடக்கிறதா என்று.

Follow

Get every new post delivered to your Inbox.